காதலிக்காகக் கட்டிப் புரண்டு சண்டைப் போட்ட காதலர்கள் - குட் பை சொல்லிவிட்டுச் சென்ற காதலி

  • News18 Tamil
  • Last Updated: February 19, 2020, 10:38 PM IST
  • Share this:
கன்னியாகுமரியில் காதலிக்காக இரண்டு இளைஞர்கள் கட்டிப்புரண்டு சண்டை போட்ட சம்பவம் நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே மிடாலத்தைச் சேர்ந்தவர் 23 வயதான ரசிபன். எலக்ட்ரிக்கல் எஞ்ஜினியரான ரசிபன், குளச்சல் பேருந்து நிலைய நகராட்சி கட்டடத்தில் "கேர்ள் பிரண்ட் கிப்ட் ஷாப்" என்ற பெயரில் பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

இந்த கடைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குளச்சல் பகுதியைச் சேர்ந்த 22 வயதான பட்டதாரி பெண் ஒருவர் பரிசுப் பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். அடிக்கடி அந்த பெண் "கேர்ள் பிரண்ட் கிப்ட் ஷாப்" கடைக்கு சென்று வந்ததால் ரசிபன் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. ரசிபன் அந்த பெண்ணை கண்மூடித்தனமாக காதலித்துள்ளார்.


இதனால் அந்த பெண்ணிற்கு நிறைய செலவு செய்ததுடன், பண உதவிகளும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக அந்த பெண் ரசிபனை விட்டு விலகத் தொடங்கியுள்ளார். செல்போனில் அழைத்தாலும் போனை எடுக்காமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரசிபன், அந்த பெண் குறித்து விசாரித்துள்ளார்.

விசாரணையில் அந்த பெண் குளச்சல் பகுதியைச் சேர்ந்த நிஜன் என்ற உறவுக்கார இளைஞரைக் காதலிப்பது தெரியவந்தது. இதையறிந்த ரசிபன் திங்கட்கிழமை அந்த பெண் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நிஜனும்-அந்த பெண்ணும் பேசிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் நேராக அந்த பெண்ணிடம் சென்று தன்னை காதலித்து ஏமாற்றியது ஏன் எனக்கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், தாம் கொடுத்த பணத்தை திருப்பித்தருமாறும் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் உறவுக்கார இளைஞர் நிஜன், ரசிபனை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, அந்த பெண் வீட்டு வாசலிலேயே கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர். இதில் அவர்கள் இருவருக்கும் காயம் ஏற்படவே இருவரும் மருத்துவமனைக்கு சென்றனர்.இந்நிலையில் அந்த பெண் ரசிபன் மீது குளச்சல் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், தான் வீட்டில் உறவுக்கார இளைஞர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது அத்து மீறி வீட்டிற்குள் நுழைந்த ரசிபன், தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தியதாகவும் அதற்கு தான் மறுத்ததால், தன்னையும் தனது உறவுக்கார இளைஞர் நிஜனையும் தாக்கியதாக கூறியிருந்தார்.

இதை அடுத்து போட்டிக்கு ரசிபனும் குளச்சல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் மூன்று மாதங்களாக அந்த பெண் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பணம் பறித்ததாகவும், வீட்டிற்கு சென்ற போது உறவுக்கார இளைஞருடன் சேர்ந்து தன்னை தாக்கி தான் அணிந்திருந்த ஒன்றரை சவரன் தங்க சங்கிலியை பறித்து விட்டதாகவும் கூறினார்.

இதையடுத்து குழப்பமடைந்த போலீசார், மூன்று பேரையும் ஒன்றாக வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இளம் பெண் இருவரையும் காதலித்தது தெரியவந்துள்ளது. அதனால் இந்த பிரச்னையை தற்போது முடிக்க இரண்டு இளைஞர்களையும், அந்த பெண்ணை விட்டு விலகுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

உறவுக்கார இளைஞர் நிஜன், அந்த பெண் உடனான காதலை கைவிடுவதாகவும், தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என காவல் நிலையத்தில் எழுதி கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். ஆனால் ரசிபனோ உறவினர்கள் சமாதானபடுத்திய பின்பும் காதலியும் வேண்டும் தனது தங்க சங்கிலியும் வேண்டும் என குளச்சல் காவல் நிலைய வளாகத்திலேயே மனநிலை பாதிக்கப்பட்டவர் போலவே சுற்றி வந்தார்.

இருவரையும் வைத்து போலீசார் சமாதானம் பேசினர். அப்போது, அந்த பெண் " கேர்ள் பிரண்ட் கிப்ட் ஷாப்" உரிமையாளர் ரசிபனுடன் நட்பாகத்தான் பழகினேன், காதலிக்கவில்லை எனக்கூறி அவருக்கு "குட் பை" சொல்லிவிட்டு கிளம்பினார். தொடர்ந்து ரசிபன் காவல்நிலைய வாசலிலேயே நின்று புலம்பிக்கொண்டிருந்ததால், வேறு வழியின்றி பெண்ணின் மோசடி குறித்து நீதிமன்றத்தை அணுகி தீர்வு கண்டுகொள்ளுமாறு கூறி காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அந்த பெண்ணிடம் விளக்கம் கேட்டு செல்போனில் தொடர்பு கொண்ட போது, போனை எடுத்து அவரது வழக்கறிஞர் முருகன் விளக்கமளித்தார். ரசிபன், அந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், ஆனால் அந்த பெண் காதலிக்காத நிலையில் அவரது வீட்டில் ரசிபன் அத்துமீறி நுழைந்து இருவரையும் தாக்கியதாக கூறினார்.

Also see:

First published: February 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்