HOME»NEWS»TAMIL-NADU»2 women stole the gold jewel in the theni jewellery shop crime video vai
நகை கடையில் கைவரிசை காட்டிய பெண்கள்.. காட்டிக் கொடுத்த சிசிடிவி.. (வீடியோ)
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நகை வாங்குவது போன்று நாடகமாடி, பெண்கள் கைவரிசை காட்டியதை சிசிடிவி காட்சிகள் காட்டிக் கொடுத்துள்ளது. குற்றவாளிகள் சிக்கியது எப்படி?
தேனி மாவட்டம் போடி டி.வி.கே.கே. நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜசேகர், நகைக் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி நகை வாங்குவது போன்று இரு பெண்கள் வந்துள்ளனர். நீண்டநேரம் நகைக் கடையில் நகைகளை ஆராய்ந்த பெண்கள் கடைசிவரை எந்த நகையும் வாங்கவில்லை. கடைக்குள் வந்த சிறிது நேரத்தில் அந்த பெண்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
மீண்டும் நகைகளை சரிபார்க்கும் போது நகைகளில் 2 சவரன் தங்க சங்கிலி காணாமல் போனது தெரியவந்தது. இதை தொடர்ந்து கடை ஊழியர்கள் நகைக் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர்.
சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது நகை வாங்குவதாக வந்த இரண்டு பெண்கள், தங்களது கைவரிசையைக் காட்டியது தெரியவந்தது. நகை வாங்க வந்த இரு பெண்களில் ஒருவர் லாகவமாக செயினை திருடும் காட்சி சிசிடிவியில் பதிவாகியிருந்தது.
பதிவான காட்சியை கொண்டு போடி போலீசார் விசாரணையை தொடங்கினர். அதில் நகைக்கடையில் கைவரிசையை காட்டியது, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா ஆவாரம்பட்டியைச் சேர்ந்த செல்வியும் அவரது தோழியும்தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
திண்டுக்கலில் தலைமறைவாக இருந்த செல்வியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த தங்க சங்கிலியை மீட்டனர். மேலும் திருட்டில் செல்வியுடன் தொடர்புடைய அவரது தோழியை போலீசார் தேடி வருகின்றனர்.
செல்வி மீது ஏற்கனவே நகை திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தள்ளது. நகை வாங்குவது போல வந்து தங்க செயின்களை பெண்கள் திருடிச் சென்ற சம்பவம் போடி பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.