மக்கள் தாக்கியதில் வழிப்பறி திருடன் உயிரிழப்பு.. 2 பேர் கைது..

Youtube Video

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே, வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை பொதுமக்கள் தாக்கியதில் ஒருவர் பலியானார். பலியான நபரின் குடும்பத்திற்கு அரசு சார்பில், 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது ஏன்?

 • Share this:


  வழிப்பறியில் ஈடுபட்ட சக்திவேலைப் பொதுமக்கள் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவானது எப்படி?

  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள புனலப்பாடி கிராமத்திற்கு, கடந்த 9ம் தேதி அன்று விவசாய வேலைக்காக 23 வயதான மோகன் என்பவர் சென்றுள்ளார். வேலை முடிந்த பின் அன்று இரவு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு மது அருந்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான சக்திவேல், சூர்யா, 25 வயதான மணி மூவரும் மோகனை அடித்து அவரிடம் இருந்து 12000 ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்துள்ளனர்.

  பாதிக்கப்பட்ட மோகன், ஊர்ப் பொதுமக்களிடம் முறையிட அவர்கள் சக்திவேல் உள்ளிட்ட மூவரையும் சரமாரியாக அடித்து தாக்கினர். அவர்களிடம் இருந்து சூர்யாவும் மணியும் தங்கள் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பியோடி விட்டனர். தனது இருசக்கர வாகனத்தில் ஏறித் தப்பிய சக்திவேல் சிறிது துாரம் சென்றதும் வேகத்தடையில் மோதி கீழே விழுந்து காயமடைந்தார்.

  பொதுமக்கள் அவரை வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்; போலீசார் விபத்து வழக்காகப் பதிவு செய்தனர். மறுநாள் 10ம் தேதி,, சிகிச்சை பலனின்றி சக்திவேல் உயிரிழந்தார்; விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றினர் ஆரணி கிராமிய காவல் நிலைய போலீசார்.

  இதற்கிடையே, சக்திவேலைக் கொலை செய்த குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும், எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக் கோரியும் அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைக் கட்சியினர் காவல்நிலையம் முன்பு, ஞாயிற்றுக்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்

  அதன் அடிப்படையில் சக்திவேலைத் தாக்கியதாக 35 வயதான வேலு, 25 வயதான பரசுராமன், 30 வயதான கிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர் போலீசார். வேலு தலைமறைவாகிவிட, பரசுராமன் மற்றும் கிருஷ்ணன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

  மேலும் படிக்க... திருப்புவனம் அருகே தேர்தல் முன்விரோதத்தால் அதிமுக பிரமுகர் அடித்துக் கொலை.... திமுக நிர்வாகி கைது

  அதேநேரம், வேறு சில நபர்களையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் அவர்களின் உறவினர்கள் ஞாயிறு இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதால், அதற்கான இழப்பீட்டுத் தொகை 4,12,000 ரூபாய்க்கான காசோலையை சக்திவேல் பெற்றோரிடம் மாவட்ட ஆதி திராவிட நலத்துறை அலுவலர் வழங்கினார். வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை பொதுமக்கள் தாக்கியதில் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: