முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ’ரூட் தல’ மோதலில் மேலும் 2 மாணவர்கள் கைது... வழுக்கி விழுந்து கை உடைந்தது...?

’ரூட் தல’ மோதலில் மேலும் 2 மாணவர்கள் கைது... வழுக்கி விழுந்து கை உடைந்தது...?

கைதான மாணவர்கள்

கைதான மாணவர்கள்

சமீப காலமாக வழிப்பறி, குடிபோதையில் மோதல் ஆகிய விவகாரங்களில் கைதாகும் நபர்கள் வழுக்கி விழுந்து கையை உடைத்துக்கொள்வதாக போலீசார் கூறுவது குறிப்பிடத்தக்கது.

  • Last Updated :

சென்னையில் எந்த ரூட்டு கெத்து என பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்திகளுடன் மோதிக்கொண்ட சம்பவத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் தடம் தொடர்பாக ரூட்டு தல என்ற பிரச்னை சென்னையில் பல காலமாக நிலவி வருகிறது. இந்தப் பிரச்னை நேற்று முன்தினம் விஸ்வரூபம் எடுத்தது.

பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் பூந்தமல்லி ரூட்டு மாணவர்களை, பாரிமுனை ரூட்டு மாணவர்கள், அரும்பாக்கம் அருகே தாக்கியனர்.

தாக்குதலில் காயமடைந்த வசந்தகுமார், ஆகாஷ் உள்ளிட்ட 7 மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பூந்தமல்லி ரூட்டு மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு பழிதீர்க்கும் வகையில் பாரிமுனை ரூட்டு மாணவர் ஒருவரைப் பிடித்து "பூந்தமல்லி ரூட்டு கெத்து, பாரீஸ் ரூட்டு மக்கு" என 108 முறை கத்தியை காட்டி மிரட்டி எழுத வைக்கும் காட்சி வெளியானது.

அரும்பாக்கத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பாரீஸ் ரூட்டு தல சுருதி மற்றும் மதனை கைது செய்து கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனிடையே, அவர்கள் இருவரும் கழிவறையில் வழுக்கி விழுந்து கையை உடைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. கல்லூரியில் செய்தியாளர்களை சந்தித்த பச்சையப்பன் கல்லூரி முதல்வர் அருள்மொழிச் செல்வன் 2 மாணவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒழுங்கீனமாக செயல்படும் மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கைதான ஸ்ருதி மற்றும் மதன்

பச்சையப்பன் கல்லூரிக்கு சென்று முதல்வர் உள்ளிட்டோருடன் காவல் துறை இணை ஆணையர் சுதாகர் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது தேவைப்பட்டால் குண்டர் சட்டம் பாயும் என எச்சரிக்கை விடுத்தார்.

மாணவர்கள் மோதல் தொடர்பாக தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சென்னை மாநிலக் கல்லூரியில் திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் சுகுணா சிங் ஆய்வு நடத்தினார்.

கல்லூரிக்கு உள்ளேயும், வெளியேயும் மாணவர்கள் ஏதேனும் பிரச்னையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.

இந்நிலையில், மோதல் சம்பவம் தொடர்பாக செங்குன்றம் மற்றும் வியாசர்பாடியைச் சேர்ந்த ரவிவர்மன், ராகேஷ் ஆகிய மேலும் 2 மாணவர்களை இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.

சமீப காலமாக வழிப்பறி, குடிபோதையில் மோதல் ஆகிய விவகாரங்களில் கைதாகும் நபர்கள் வழுக்கி விழுந்து கையை உடைத்துக்கொள்வதாக போலீசார் கூறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... ரூட்டுதல யாரு? பஸ்சில் மாணவர்கள் அரிவாள் சண்டை..


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

top videos


    First published:

    Tags: Chennai, Crime | குற்றச் செய்திகள், Pachayappa's college, Students