• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆற்றில் கொட்டப்பட்ட சாயக்கழிவுகள் : லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்..!

ஆற்றில் கொட்டப்பட்ட சாயக்கழிவுகள் : லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்..!

லாரிகள் (கோப்புப்படம்)

லாரிகள் (கோப்புப்படம்)

  • Share this:
    கரூரில் உள்ள நொய்யல் ஆற்றில் நச்சுத் தன்மையுடைய சாய திடக்கழிவுகளை கொட்டிய லாரிகளை பொதுமக்களே சிறைபிடித்தனர். அத்துடன், லாரி ஓட்டுநர்களையும் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து சட்ட விரோதமாக சாயக்கழிவுகளை எடுத்து வந்து, கரூரில் உள்ள நொய்யல் ஆற்றில் கொட்டுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    ஆற்று நீரில் நச்சுக்கழிவு கலந்துவிடுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், விளைநிலமே பாழ்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். அத்துடன் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் தண்ணீர் இன்றி தவிப்பதாகவும் கூறியுள்ளனர்.

    இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள ஒரு சாயப்பட்டறையில் இருந்து, சாய திடக்கழிவு 2 லாரிகளில் கொண்டுவரப்பட்டு கரூர் மாவட்டம் கூனம்பட்டி, கொள்ளுக்காடு உள்ளிட்ட இடங்களில் கொட்டப்பட்டுள்ளது. இதைக் கண்ட பொதுமக்கள் ஒன்றுதிரண்டு, அந்த 2 லாரிகளையும் சிறைபிடித்தனர். அத்துடன், ஓட்டுநர்கள் செந்தில் மற்றும் ராஜமாணிக்கத்தை பிடித்து தென்னிலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது, இதுபோன்ற தவறு இனிமேலும் நடக்காது என்றும், தங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் எனவும் அவர்கள் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொண்டனர்.

    சாயப்பட்டறைகளில் இருந்து கழிவு நீர் எடுத்து வந்து நொய்யல் ஆற்றில் கொட்டுவதால், நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இதனிடையே, கரூர் மாவட்டம் கூனம்பட்டி, கொள்ளுக் காடு உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்பட்ட சாயக்கழிவை அதே லாரிகளில் ஏற்றிக்கொண்டு சம்பந்தப்பட்ட சாயப்பட்டறைக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Also see...

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: