கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 3 பேரின் வீடுகளில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் 2.10 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதைத் தடுக்க வருமானவரித் துறையினர் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி, கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறையை அடுத்த குமாரவாடியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் கல்பனாசேது என்பவரது வீட்டில் வருமானவரித் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
அப்போது, கட்டுக்கட்டாக 50 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கல்பனா சேது, முன்னாள் வையம்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக இருந்தவர்.
வையம்பட்டி அதிமுக ஒன்றியச் செயலாளராக உள்ள இவரது கணவர் சேது, அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கு ஆதரவாக அவர் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதேபோல், செல்வம் என்பவருக்கு சொந்தமான கரூர் ராமலிங்கபுரம் பகுதியில் உள்ள அமுல் டெக்ஸ்சில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 75 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், கரூர், ராமஜெயம் நகரில் நாட்ராயன் என்பருக்கு சொந்தமான டெக்ஸ்டைல் நிறுவனத்திலும் சோதனை நடத்தினர். இதில் 85 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் தொழிலதிபர்களாகவும், பைனான்சியர்களாகவும் உள்ளனர். ஒரே நாளில் 2 கோடியே 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்கட்ட விசாரணையில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காகவே பணம் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளதாக வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, வேலூர் மாவட்டத்தில் துரைமுருகனுக்கு நெருக்கமானவரின் சிமென்ட் குடோனிலிருந்து 11 கோடியே 53 லட்சம் ரூபாயை வருமானவரித் துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த பணம் எடுக்கப்பட்ட வங்கியின் லாக்கர்களில் நேற்று சோதனை நடத்திய வருமானவரித் துறையினர், மேலாளரிடம் விசாரணை நடத்தினர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே அரசு பேருந்திலிருந்து 3 கோடியே 47 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த இரண்டு சோதனைகள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகின. சென்னையில் ஒப்பந்ததாரர் சபேசன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, அதுதொடர்பான வீடியோ வெளியானது.
ஆனால், கரூர் தொகுதியில் அதிமுக பிரமுகர் வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், அதுதொடர்பான வீடியோ வெளியாகாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.