வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம்.. துப்பாக்கிச்சூடு.. 21 பேர் உயிரிழப்பு - 1987ல் என்ன நடந்தது?

1987 போராட்டம்

1987-ம் ஆண்டு வன்னிய சமூக இடஒதுக்கீடு போராட்டத்தின்போது போலீஸாரின் அடுக்குமுறைக்கும் துப்பாக்கி குண்டுகளுக்கும் 21 பேர் இரையாகினர்.

 • Share this:
  தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பின் நடந்த மிகப்பெரிய போராட்டம்  தனி இடஒதுக்கீடு கேட்டு வன்னியர் சங்கம் 1987-ம் ஆண்டு முன்னெடுத்த போராட்டம் தான்.

  வன்னிய சமுதாய மக்கள் முன்னெடுத்த இந்த போராட்டம் காரணமாக தமிழகமே ஸ்தம்பித்தது. துணை ராணுவப்படையை கொண்டுவந்து தமிழகத்தில் நடந்த போராட்டத்தை மாநில அரசு அடக்கியது என்றால் போராட்டத்தின் வீரியத்தை உணர்ந்துக்கொள்ளலாம். தமிழகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் வன்னியர் சமுதாய மக்கள் முன்னெடுத்த போராட்டத்தின் காரணமாக வன்னிய சமூகத்துடன் சேர்ந்து 108 சமூகங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற தனிப்பிரிவை தமிழக அரசு உருவாக்கியது.

  புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ஆட்சி சாமானிய மக்களுக்கான ஆட்சி என்பார்கள். இடஒதுக்கீடு கேட்டு வன்னியர் சங்கம் போராட்ட களத்தை தேர்வு செய்தது எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியில்தான். போலீஸாரின் அடுக்குமுறைக்கும், துப்பாக்கிச்சூட்டும் 21 பேர் பலியாகினர். செப்டம்பர் 17-ம் தேதி வன்னிய சமுதாய மக்களின் நெஞ்சில் ஆறாத வடுவாய் இன்றளவும் உள்ளது.

  போராட்டத்தின் நோக்கம் என்ன?

  1989-ம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயமாக உள்ள வன்னிய சமுதாயம்  அரசின் இடஒதுக்கீடு பட்டியலில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில்தான் இருந்தது. பெரும்பான்மையான மக்களை கொண்ட இந்த சமூகத்தினர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தனர். சமூகத்தில் ஏற்கெனவே முன்னேறிவிட்ட பிற சமூகத்தினருடன் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் போட்டியிட முடியவில்லை.

  “மொத்தமுள்ள 50 சதவிகித இட ஒதுக்கீட்டில் தங்கள் சமூதாய மக்கள் வெறும் ஒரு சதவிகிதப் பலன்களைத்தான் அனுபவிக்கிறார்கள். ஏற்கெனவே சமூக, பொருளாதார ரீதியாக முன்னேறிய சமூகங்களுடன் போட்டியிட முடியவில்லை. அது நியாயமுமில்லை. அதனால், எங்கள் சமூகத்துக்கு எங்கள் மக்கள் தொகைக்கு ஏற்ப, 20 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்'' என வன்னியர் சங்கத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

  போராட்டம்


  இந்த கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை. இதனையடுத்து போராடிதான் நமது உரிமையை பெற வேண்டும் என வன்னியர் சங்கம் முடிவெடுத்தது. தமிழகத்தில் ஆங்காங்கே இந்த சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் அரசுக்கு பெரிய அளவில் அழுத்தங்களை கொடுக்கவில்லை.  1986-ல் சாலைமறியல் , ரயில் மறியலில் ஈடுபட்டனர். அரசுக்கு இதற்கெல்லாம் செவிசாய்க்கவில்லை. வன்னிய சமுதாய மக்களை ஒன்றுதிரட்டி ஒரு மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என வன்னிய சமுதாய தலைவர்கள் முடிவெடுத்தனர். குற்றாலத்தில் நடந்த கூட்டத்தில்தான் தொடர் சாலை மறியலில் ஈடுபடுவது என முடிவு எடுக்கப்பட்டது. இன்றைக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனராக இருக்கக்கூடிய மருத்துவர் ராமதாஸ் வன்னியர் சங்க போராட்டத்தை முன்னெடுத்து சென்றார். இடஒதுக்கீடு பிரச்னையில் மிகத்தீவிரமாக ராமதாஸ் இருந்ததால் மூத்த தலைவர்களிடன் ஒப்புதலோடு இந்த பொறுப்பு அவரது கைக்கு வந்தது.

  ராமதாஸ்


  வடதமிழ்நாட்டில் வன்னிய சமுதாய மக்கள் அதிக அளவில் இருப்பதால் ராமதாஸ் உள்ளிட்ட வன்னியர் சமுதாய தலைவர்கள் கிராமம் கிராமமாக சென்று இடஒதுக்கீடு குறித்தும் சமுதாயத்தில் வன்னிய மக்களின் நிலைக்குறித்தும் எடுத்துரைத்தனர். இதனையடுத்து வடதமிழகத்தில் உள்ள வன்னியர் சமுதாய இளைஞர்கள் வெகுண்டு எழுந்தார்கள். வன்னிய மக்கள் தலைவர்கள் பின்னால் அணித்திரண்டார்கள். போராட்டம் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்த தமிழக காவல்துறை ராமதாஸை கைது செய்யும் முயற்சியில் இறங்கியது. இதனையடுத்து அவர் திருவண்ணாமலையில் தஞ்சமடைந்தார்.

  செப்டம்பர் 17-ம் தேதி வடதமிழகம் போர்க்களமானது. ராமதாஸ் திண்டிவனம் வந்து போராட்டத்தில் கலந்துக்கொண்டார். சாலை ஓரங்களில் வளர்ந்திருந்த உயர்ந்த மரங்கள் எல்லாம் அடியோடு வெட்டி சாய்த்து சாலையில் வீசப்பட்டது. போக்குவரத்தை முடக்கி அரசுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். இதற்கிடையில் ராமதாஸ் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நாளுக்கு நாள் போராட்டம் தீவிரம் அடையத் தொடங்கியது. ஒருவாரம் காலம்  போராட்டம் தொடர்ந்தது.

  போராட்டம்


  வடதமிழகத்தில் கொளுந்துவிட்டு எரிந்த போராட்ட தீயின் அனல் தமிழகத்தை வாட்டியது. ஒருவாரத் தொடர் சாலை மறியல் போராட்டம் மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது. எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக அரசு, இட ஒதுக்கீடு போராட்டகாரர்களின் கோரிக்கையை ஏற்பதற்கு பதிலாக, அவர்களை அடக்குவதற்கு காவல் துறையினரை ஏவியது. துணை ராணுவப்படை வரவழைக்கப்பட்டது.

  பார்ப்பனப்பட்டு ரெங்கநாதக் கவுண்டர், சித்தணி ஏழுமலை, ஒரத்தூர் ஜெகநாதன், முண்டியம்பாக்கம் சிங்காரவேலு, கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கோலியனூர் கோவிந்தன், கோலியனூர் விநாயகம்,  சிறுதொண்டமாதேவி தேசிங்கு, தொடர்ந்தனூர் வேலு, கயத்தூர் தாண்டவராயன், பார்ப்பனப்பட்டு வீரப்பன்,  பேரங்கியூர் அண்ணாமலைக் கவுண்டர், அமர்த்தானூர் மயில்சாமி, குருவிமலை முனுசாமி நாயகர், சிவதாபுரம் குப்புசாமி, கொழப்பலூர் முனுசாமி கவுண்டர், வெளியம்பாக்கம் இராமகிருஷ்ணன், மொசரவாக்கம் கோவிந்தராஜ் நாயகர், கடமலைப்புத்தூர் மணி, புலவனூர் ஜெயவேல் பத்தர் ஆகிய  21பேரும் போலீஸாரின் அடுக்குமுறைக்கும் துப்பாக்கி குண்டுகளுக்கும் இரையாகினர். போராட்டத்தில் பங்கெடுத்த 18000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர். அடுக்குமுறையால் போராட்டத்தை அடக்கியது அன்றைய அதிமுக அரசு.

  வன்னியர்களின் போராட்டத்தின் போது அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார். சிகிச்சை முடிந்து அவர் தமிழகம் திரும்பியதும் வன்னியர் சங்கம் தலைவர்களோடு நவம்பரில் பேச்சுவார்த்தை நடத்தினார். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளால் போராட்டம் ஒடுக்கப்பட்ட விதம் குறித்து எம்.ஜி.ஆரிடம் எடுத்து கூறினர். கோரிக்கையை நிறைவேற்றுவதாக எம்.ஜி.ஆர் உறுதியளித்தார்.

  உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் 1987-ம் ஆண்டு டிசம்பரில் காலமானார். எம்.ஜி.ஆர் மறைவால் தமிழக அரசியல் களம் பரபரப்பானது. உட்கட்சியில் குழப்பமான சூழல் நிலவியது.  ஜானகி எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சரானார். அவரிடத்தில் வன்னியர் சங்க தலைவர்கள் தங்களது கோரிக்கையை முன்வைத்தனர். அவரது ஆட்சி சில நாளில் கவிழ்ந்தது. இதனையடுத்து 1989-ல் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது.  சட்டப்பேரவைத் தேர்தலை வன்னியர் சங்கம் புறக்கணித்தது. வட மாவட்டங்களில் பல வாக்குச் சாவடிகளில் ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. அத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக மு.கருணாநிதி பொறுப்பேற்றார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  1989-ல் வன்னியர் சங்க தலைவர்களை அழைத்து கருணாநிதி பேச்சுவார்த்தை நடத்தினார். வன்னியர் சமூகத்துடன் சேர்ந்து 108 சமூகங்களுக்கு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான  மொத்த இடஒதுக்கீட்டான 50 சதவிகிதத்தில் இருந்து தனியாக 20 சதவிகிதத்தை பிரித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற தனிப்பிரிவை உருவாக்கினார். இதன்காரணமாக வன்னியர் சமூகம் உள்பட 108 சமூகத்தினர், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு பெற்றனர்.

  1987- இல் நடைபெற்ற வன்னியர் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளுக்கு விழுப்புரத்தில் 4 கோடி ரூபாயில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும், அவர்களின் வாரிசுகளுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஸ்டாலின் இந்த அறிவிப்புக்கும் வன்னியர் சமுதாய மக்களும், தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: