நெல்லையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 18 பேர் உயிரிழப்பு: சேலத்தில் மரத்தடியில் சிகிச்சை - கொரோனாவால் திணறும் தமிழகம்

மாதிரிப் படம்

திருநெல்வேலியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையின் காரணமாக 18 பேர் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டது.

 • Share this:
  திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 18 நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் விநியோகிப்பதை முறைப்படுத்த ஐஏஎஸ் அதிகாரி முருகானந்தம் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  சென்னையில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு புதன்கிழமை மாலை அழைத்துவரப்பட்ட நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்கததால் மருத்துவமனை வளாகத்தில் ஆம்புலன்ஸிலேயே சிகிச்சை பெற்று வந்தனர். அதில், 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

  சென்னையை அடுத்த செங்குன்றம் சாலையில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் மருத்துவமனை நிர்வாகம் தவித்து வந்தது. இதனையறிந்த கொளத்தூர் போலீசார் மணலி சாத்தாங்காடு பகுதியில் உள்ள தனியார் ஆக்ஸிஜன் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து 20 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பெற்று வந்து மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

  திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 800 படுக்கைகளும் நிரம்பிய நிலையில், புதன்கிழமை மாலை 4 மணி அளவில் ஆக்ஸிஜன் முற்றிலும் தீர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கங்கைகொண்டான் சிப்காட், வண்ணாரப்பேட்டை இஎஸ்ஐ மருத்துவமனை, மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் இருந்து ஆக்ஸிஜன் கொண்டுவரப்பட்டு மாலை 6 மணி முதல் ஆக்ஸிஜன் விநியோகம் சீரானது. எனினும் இந்த 2 மணி நேரத்தில் சிகிச்சையில் இருந்து வந்த 18 பேர் மூச்சுத்திணறலால் உயிரிழந்தனர்.

  சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பி வழிவதால், மரத்தடியில் சிமெண்ட் தரையில் நோயாளிகளை படுக்கை வைத்து சிகிச்சையளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நோயாளிகள் வீட்டில் இருந்து எடுத்துவந்த பெட்சீட்டை தரையில் விரிந்து அதில் படுத்து சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

  கொரோனா தொற்றால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், படுக்கை வசதி கொண்ட பேருந்துகளை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை வளாகத்தில் சொகுசு பேருந்தில் சிகிச்சையளிப்பதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கான ஆய்வுகள் தொடங்கியுள்ளன. இதனை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டார்.

  திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பியுள்ள நிலையில், குமரன் மகளிர் கல்லூரியில் 112 படுக்கைகள் அமைக்கப்பட்டு அனைத்திலும் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் நோயாளிகளுக்கும் உதவும் நோக்கில் தனியார் பங்களிப்புடன் ஆக்ஸிஜன் பேருந்து ஒன்று அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

  மருத்துவ ஆக்ஸிஜன் தேவையை சமாளிப்பதற்காக மேற்குவங்கத்தில் இருந்து ஆக்ஸிஜன் விரைவு ரயில் மூலம் 4 கண்டெய்னர்களில் மருத்துவ ஆக்ஸிஜன் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்டெய்னர்கள் சென்னை தண்டையார்பேட்டைக்கு கொண்டு வரப்பட்டு தேவைக்கேற்ப மருத்துவமனைகளுக்கு பிரித்து வழங்கப்பட உள்ளன.

  சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கான ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 450 க்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ்களுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் இரண்டு மாத காலத்திற்கு இலவசமாக எரிபொருள் விநியோகிக்க உள்ளதாகத் தெரிவித்தார். மேலும் ரூர்கேலாவில் இருந்து வெள்ளிக்கிழமை 80 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வர இருப்பதாகவும் அவர் கூறினார்.

  மேலும், தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனை மருத்துவமனைகளுக்கு வழங்குவதை முறைப்படுத்த தொழில்துறை செயலாளர் முருகானந்தம் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவதால் தடுப்பூசி போடும் பணி மந்தமடைந்துள்ளது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி தீர்ந்துவிட்டதால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது. தடுப்பூசி வந்தவுடன் உடனடியாக தடுப்பூசி போடும் பணி துவங்கும் என்று சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: