தமிழக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் மீது கடந்த
அதிமுக ஆட்சியில் போடப்பட்ட 18 அவதூறு வழக்குகளை
சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், முதல்வரின் செயல்பாடுகளை விமர்சித்தது, டெண்டர் முறைகேடு, வாக்கிடாக்கி கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்த கருத்து தெரிவித்ததாக அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலினுக்கு எதிராக 18 கிரிமினல் அவதூறு வழக்குகள் தமிழக அரசின் சார்பில் தொடரப்பட்டன. அதேபோல், இந்த செய்திகளை வெளியிட்ட முரசொலி ஆசிரியர் செல்வம், கலைஞர் டிவி ஆசிரியர் திருமாவேலன் ஆகியோர் மீதும் வழக்குகள் தொடரபட்டன.
எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு ஏற்கனவே தடை விதித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, முந்தைய ஆட்சியில் அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்பப் பெற்று அரசாணை பிறப்பித்தது. அதேபோல ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள 18 அவதூறு வழக்குகளை திரும்பப்பெற தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியிடபட்டது.
Must Read : மாணவி லாவண்யாவை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தவில்லை - தஞ்சாவூர் எஸ்.பி விளக்கம்
தனக்கு எதிரான அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி நிர்மல்குமார் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மு.க.ஸ்டாலினுக்கு எதிராக நிலுவையில் உள்ள 18 கிரிமினல் அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெறுவது தொடர்பான அரசாணை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகள் தொடர்பான விபரங்களை அட்டவணையாக தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, ஸ்டாலின் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார்.
இந்த மனுக்கள் மீது இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி நிர்மல்குமார், அவதூறு வழக்குகளை திரும்பப் பெற்ற அரசாணையை ஏற்று, ஸ்டாலின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஏற்று, அவர் மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.