175 CRORE RUPEES IN UNACCOUNTED REVENUE CAUGHT IN IT RAID IN MADURAI GOVERNMENT CONTRACTOR VETRI ELECTION 2021 VAI
ஐடி சோதனையில் சிக்கிய 175 கோடி ரூபாய்.. கணக்கில் வராத வருவாய்.. சிக்கிய அரசு ஒப்பந்ததாரர்..
மதுரை மற்றும் ராமநாதபுரத்தில், அரசு ஒப்பந்ததாரருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், 175 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்தை மறைத்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மதுரையில், வெற்றி என்ற அரசு ஒப்பந்ததாரர், தனது பல நிறுவனங்கள் மூலம், 175 கோடி வருவாயை மறைத்துள்ளார்; சட்டவிரோத பணப் பரிவர்த்தனைக்காக 100 ஒப்பந்ததாரர்களை வேலைக்கு வைத்துள்ளதாகக் கணக்கு காட்டியுள்ளார் வெற்றி என்கின்றனர் வருமான வரித்துறை அதிகாரிகள். நடந்தது என்ன?
அமமுக கட்சியின் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏவுமான மகேந்திரனின் உடன் பிறந்த சகோதரர் தான் வெற்றி. உசிலம்பட்டியைச் சேர்ந்த இவர் அரசு ஒப்பந்தததாரராக உள்ளார். இவருக்கு மதுரை ஐராவதநல்லூரில் IVLR என்ற கட்டுமான நிறுவனம். வில்லாபுரத்தில் வெற்றி சினிமாஸ் என்ற திரையரங்கு, பெட்ரோல் பங்க் என பல இடங்களில் சொத்துக்கள் உள்ளன.
இந்த நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் சட்டவிரோதமாக விநியோகிப்பதற்காக கோடிக்கணக்கில் வெற்றி தரப்பில் பணம் பதுக்கியுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், மார்ச் 3ம் தேதி மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் வெற்றிக்கு சொந்தமான 18 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் இறங்கினர்.
மதுரையில் நடந்த சோதனையை முன்னிட்டு, போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் சோதனையின் முடிவாக, வருமான வரித்துறை அதிகாரிகள் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், வெற்றியின் நிறுவனங்களில் இருந்து கணக்கில் வராத 3 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
நிறுவனங்களின் லாபத்தைக் குறைத்துக் காண்பிப்பதற்காக போலியான செலவுகளைக் கணக்கில் காண்பிக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மொத்த வருவாயை விட லாபம் 2 சதவீதம் குறைத்துக் காண்பிக்கப்பட்டிருப்பதையும் ஆனால் உண்மையான கணக்கு வழக்குகளில் லாபம் 20 சதவீதத்தை விட அதிகமாக இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை மற்றும் நேரடியாகப் பணத்தைக் கொடுத்து சொத்துக்களை வாங்குவதற்காகவும் 100 உள் ஒப்பந்ததாரர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்த ஒப்பந்ததாரர்கள் தாக்கல் செய்துள்ள வருமான வரித் தாக்கலில், இந்த வருவாயைத் தங்கள் சொந்த வருமானமாக காட்டியிருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சோதனையின் முடிவில், 175 கோடி ரூபாய் வருவாயை ஒப்பந்ததாரர் வெற்றி மறைத்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைக்கப்பட்ட வருவாயை அதிகாரிகள் சோதனையில் கண்டுபிடித்ததால், அதற்கு நிகராக அபராதத் தொகை வசூலிக்கப்படும் வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.