Home /News /tamil-nadu /

பொது விநியோக திட்டத்தில் ₹ 1480 கோடி முறைகேடு என அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு..! அமைச்சர் மறுப்பு

பொது விநியோக திட்டத்தில் ₹ 1480 கோடி முறைகேடு என அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு..! அமைச்சர் மறுப்பு

உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

  • News18
  • Last Updated :
    பொது விநியோக திட்டத்தில் 1480 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் அதற்கு ஆதாரமில்லை என அமைச்சர் காமராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    தமிழக அரசு மீது அடுத்தடுத்து புகார்களை அடுக்கி வரும் அறப்போர் இயக்கத்தினர், தற்போது, ரேஷன் பொருட்களை கொள்முதல் செய்வதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

    சென்னை எழும்பூரில் உள்ள அறப்போர் இயக்க அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயராமன், ரேஷன் கடைகளுக்கு தேவையான சர்க்கரை, பாமாயில் மற்றும் பருப்பு ஆகியவற்றை விநியோகம் செய்வதற்கான டெண்டரில் 14 நிறுவனங்கள் பங்கெடுத்து, சந்தை விலையிலேயே பொருட்களை வழங்கி வந்ததாக தெரிவித்தார்.

    கடந்த 2019ஆம் ஆண்டு கிரிஸ்டி நிறுவனம் மட்டுமே பங்கு பெறும் வகையில் டெண்டர் விதிகளில் மாற்றம் செய்த தமிழக அரசு, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் சந்தை விலையை விட கூடுதல் விலைக்கே வாங்குவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

    பருப்பு கிலோவுக்கு 20 முதல் 25 ரூபாய் வரையும், பாமாயிலுக்கு 15 முதல் 29 ரூபாய் வரையும் சந்தை விலையை கூடுதலாக தமிழக அரசு கொடுப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள ஜெயராமன், கடந்த ஓராண்டில் மட்டும் தமிழக அரசுக்கு ஆயிரத்து 480 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

     

    முறைகேடு நடக்காமல் இருந்தால், தமிழக அரசு செலவு செய்யும் தொகைக்கு, எப்போது ரேஷன் கடைக்குச் சென்றாலும் பொருட்கள் கிடைக்கும் சூழல் இருக்கும் என அறப்போர் இயக்கத்தினர் தெரிவிக்கின்றனர். இந்த ஊழலுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநர் சுதாதேவியும், அமைச்சர் காமராஜும் தான் முக்கிய காரணம் என குற்றஞ்சாட்டும் அறப்போர் இயக்கத்தினர், ஆதாரங்களுடன் முதலமைச்சரிடமும், சிபிஐயிடமும் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக, அமைச்சர் காமராஜை நமது செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்டபோது, அறப்போர் இயக்கத்தினர் ஆதாரங்கள் இன்றி குற்றஞ்சாட்டுவதாக தெரிவித்தார். ஊழல் புகாரில் ஒரு சதவீதம் கூட உண்மையில்லை என்று விளக்கம் அளித்துள்ள அமைச்சர் காமராஜ், அதை சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயார் என்றும் கூறியுள்ளார்.
    Published by:Sankar
    First published:

    Tags: Arapor iyakkam, Ration card

    அடுத்த செய்தி