Home /News /tamil-nadu /

மனநலம் பாதிக்கப்பட்ட தந்தையால் அடித்து கொலை செய்யப்பட்ட ப்ளஸ் 2 மாணவி!

மனநலம் பாதிக்கப்பட்ட தந்தையால் அடித்து கொலை செய்யப்பட்ட ப்ளஸ் 2 மாணவி!

மாதிரி படம்

மாதிரி படம்

மனநல காப்பகத்திலிருந்து வீட்டுக்கு அழைத்துவரப்பட்ட தந்தை, மகளை கொலை செய்த சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஊரடங்கால் திருச்செந்தூரில் மனநல காப்பகத்திலிருந்து வீட்டுக்கு அழைத்துவரப்பட்ட தந்தையால் பிளஸ் 2 மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள புன்னக்காயல் கிராமத்தைச் சேர்ந்தவர் 40 வயதான மீனவர் அந்தோனி. இவருடைய மனைவி 38 வயதான எபிசா.

    இந்த தம்பதிக்கு 2 மகள்கள். 17 வயதான மூத்த மகள் அந்தோனிஸ்டா பிளஸ் டூ படித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு ஆண்டு இறுதி பொதுத் தேர்வை எழுதினார்.

    அந்தோனிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அவருக்கு குணமாகாததால், அவரை புளியம்பட்டி கிறிஸ்தவ ஆலயத்தில் வைத்து குடும்பத்தினர் பராமரித்து வந்தனர். அங்குள்ள மனநல மையத்திலும் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து புளியம்பட்டி ஆலயத்தில் இருந்து அந்தோனியை குடும்பத்தினர் சொந்த ஊருக்கு அழைத்து வந்து, வீட்டில் வைத்து கவனித்து வந்தனர்.

    அந்தோனி தனது வீட்டில் யாராவது சத்தமாக பேசினாலோ அல்லது தெருக்களில் யாரேனும் சத்தமாக பேசியபடி சென்றாலோ, அவர்களிடம் தகராறு செய்து தாக்கி வந்தார். இதனால் அவரை வீட்டில் தனி அறையில் அடைத்து வைத்து குடும்பத்தினர் பராமரித்தனர்.

    இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அந்தோனிஸ்டா வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது தனது அறையில் இருந்து திடீரென வெளியே வந்த அந்தோனி கூச்சலிட்டவாறு மகளிடம் சென்று தகராறு செய்துள்ளார்.

    மேலும், அங்கு கிடந்த மரப்பலகையை எடுத்த, மகளை தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அலறி துடித்தவாறு வெளியே ஓடிச் சென்ற மகளை தொடர்ந்து அவர் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

    இதில் பலத்த காயம் அடைந்த அந்தோனிஸ்டாவை அவருடைய தாயார், தங்கை மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அந்தோனிஸ்டா பரிதாபமாக இறந்தார்.

    இதை அடுத்து கொலை வழக்கு பதிவு செய்த ஆத்தூர் போலீசார், சிறுமியின் தந்தை அந்தோனியை கைது செய்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

    ஊரடங்கால் மனநல காப்பகத்திலிருந்து வீட்டுக்கு அழைத்துவரப்பட்ட தந்தை, மகளை கொலை செய்த சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

     

    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Mental Health

    அடுத்த செய்தி