ஊராட்சிமன்ற தலைவர் படுகொலை: 11 பேர் போலீசில் சரண் - பதற்றத்தில் கடலூர்..

கடலூர் அருகே விசிக நிர்வாகியும், ஊராட்சி மன்ற தலைவருமான இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊராட்சிமன்ற தலைவர் படுகொலை: 11 பேர் போலீசில் சரண் - பதற்றத்தில் கடலூர்..
கடலூர் அருகே விசிக நிர்வாகியும், ஊராட்சி மன்ற தலைவருமான இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • Share this:
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த கீழ் அருங்குணத்தைச் சேர்ந்தவர் 34 வயதான நிலவழகன் என்ற சுபாஷ். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நெல்லிக்குப்பம் ஒன்றிய செயலாளராக இருந்தார்.

இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர். சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில், கீழ்அருங்குணத்தில் போட்டியிட்டு பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்றார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை ஊராட்சி மன்ற தலைவர் சுபாஷ் மற்றும் அவரது நண்பர் மணிகண்டன் அதே பகுதியில் உள்ள நிலத்திற்கு சென்றனர். அப்போது அங்கு உள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கி இருந்த ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் திடீரென்று சுபாஷை சுற்றி வளைத்தது.


சுதாரிப்பதற்குள் அவரை சரமாரியாக அந்த கும்பல் வெட்டியது. தடுக்கச் சென்ற அவரது நண்பர் மணிகண்டனையும் மர்ம கும்பல் வெட்டி சாய்த்தது. பின்னர் சுபாஷ் ஆதரவாளர்கள் வீடுகளையும் அந்த கும்பல் சூறையாடிவிட்டு தப்பி ஓடியது.

ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரையும் கிராம மக்கள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சுபாஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மணிகண்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் கீழ் அருங்குணம் கிராமத்திற்கு சென்றனர். சுபாஷ் கொலைக்கு காரணம் என்ன, கொலையாளிகள் யார் என கிராம மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில், கீழ் அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் மற்றும் தாமோதரன் இடையே நீண்ட நாட்களாக தகராறு இருந்து வந்தது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் தாமோதரன் தரப்பைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதில் சுபாஷ் உட்பட 15 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளிவந்தனர்.

தங்கவேல் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கவே ஞாயிற்றுக்கிழமை மாலை, அவரது கூட்டாளிகள் திடீரென்று ஊராட்சி மன்ற தலைவர் சுபாஷை வெட்டிவிட்டு வீடுகளை சூறையாடிதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

சுபாஷ் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் கொலையாளிகள் 11 பேர் நெல்லிக்குப்பம் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.

குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் கொலையாளிகள் 11 பேரை கைது செய்துவிட்டதாக தெரிவித்தனர். இதை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

படிக்க: 2 மகன்களை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை முயற்சி - நடந்தது என்ன?

கீழ் அருங்குணம் கிராமத்தில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
First published: July 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading