முகப்பு /செய்தி /தமிழ்நாடு / யூ டியூப் பார்த்து 7 வயது சிறுவனை கடத்திய 10-ம் வகுப்பு மாணவன்

யூ டியூப் பார்த்து 7 வயது சிறுவனை கடத்திய 10-ம் வகுப்பு மாணவன்

யூ டியூப் பார்த்து 7 வயது சிறுவனை கடத்திய 10-ம் வகுப்பு மாணவன்

7 வயது சிறுவனை கடத்தி மூன்று லட்ச ரூபாய் பணம் கேட்டு பெற்றோருக்கு மிரட்டல் விடுத்த பத்தாம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது

  • 1-MIN READ
  • Last Updated :

ஐதராபாத்தில் யூ டியூப் பார்த்து 7 வயது சிறுவனை கடத்தி மூன்று லட்ச ரூபாய் பணம் கேட்டு பெற்றோருக்கு மிரட்டல் விடுத்த பத்தாம் வகுப்பு மாணவரை போலீசார் கைது செய்தனர்.

உள்ளத்தை அள்ளித்தா படத்தில் வரும் காட்சி போல், 3 லட்ச ரூபாய்க் கேட்டு 7 வயது சிறுவனை கடத்திய 14 வயது சிறுவன், பின்னர் படிப்படியாக குறைத்து 2 லட்ச ரூபாய், ஒரு லட்ச ரூபாய், செக்காக கொடுத்தால்கூட வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளார்.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத் அடுத்த மியாபேட் பகுதியில் வசித்து வருபவர் ராஜு. தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் அவருக்கு 7 வயதில் அர்ஜுன் என்ற மகன் உள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அர்ஜுன் திடீரென்று மாயமானார்.

சிறுவனுடைய நண்பர்கள் வீடுகள், உறவினர்களின் வீடுகளில் தேடிப்பார்த்தும் சிறுவன் அர்ஜுனை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் அர்ஜுன் தந்தை ராஜூவிற்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர், சிறுவனை கடத்தி வைத்திருப்பதாகவும், உடனடியாக மூன்று லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் விடுவிப்பதாகவும் கூறினார். பணம் கொடுக்காவிட்டால் சிறுவனை கொலை செய்து விடுவேன் என அந்த நபர் மிரட்டல் விடுத்தார்.

மிரட்டலைத் தொடர்ந்து சிறுவன் அர்ஜுனின் தந்தை ராஜு மியாட்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கடத்தப்பட்ட சிறுவன் அர்ஜுனின் தந்தை ராஜூவுக்கு கடத்தல் நபரிடம் இருந்து மீண்டும் வந்த தொலைபேசி அழைப்பை பதிவு செய்தனர்.

போலீசார் அறிவுரைப்படி, அர்ஜுனை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையின் போது, தன்னால் 3 லட்ச ரூபாய் பணத்தை உடனடியாக தயார் செய்ய முடியாது எனக் கூறினார். அதனால், பணத்தைக் குறைத்துக்கொள்ளுமாறு கேட்டு, அந்த நபரிடம் பேச்சை நீட்டித்து வந்தார்.

இரண்டு லட்ச ரூபாயை பெற்றுக்கொள்ள கடத்தல் நபர் சம்மதம் தெரிவித்த நிலையில், ஒரு லட்ச ரூபாயை செக்காகவும், ஒரு லட்ச ரூபாயை ரொக்கப் பணமாக கொடுத்தால் கூட வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளார்.

ஒரு மணி நேரத்தில் பணத்தை தயார் செய்து கொடுத்துவிட்டு, மகனை மீட்டுச் செல்வதாக ராஜூ கூறினார்.

சுமார் அரை மணி நேரம் உரையாடல் தொடர்ந்த நிலையில், கடத்தல் நபர் பேசிய செல்போன் டவரை வைத்து அந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்தனர்.

பின்னர் சிறுவன் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தை கண்டுபிடித்த போலீசார், கடத்தல் நபர் வெறும் 14 வயதான 10ஆம் வகுப்பு மாணவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

7 வயது சிறுவன் அர்ஜுனை மீட்ட போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 10ஆம் வகுப்பு மாணவரை கைது செய்து பணம் பறிக்க முயன்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சக நண்பர்கள் பைக், மொபைல் போன் உடன் ஆடம்பரமாக இருப்பதாகவும், அதைப்போல், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

இதற்காக யூ டியூப்பில் கடத்தல் தொடர்பான வீடியோக்களை பார்த்து சிறுவனை கடத்தியதாகவும் அதிர்ச்சித் தகவலை அளித்துள்ளார்.

இதை அடுத்து சிறுவனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜபடுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பத்தாம் வகுப்பு மாணவர், 7 வயது சிறுவனை கடத்தி பணம் பறிக்க முயன்ற சம்பவம் ஐதராபாத் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: Baby kidnaped, Crime | குற்றச் செய்திகள், Tirupathi