ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிரந்த ஆணை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற இந்த வேலைநிறுத்தம் நேற்று வாபஸ் பெறப்பட்டது.
தொழிலாளர்கள் நல ஆணையரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போக்குவரத்து ஊழியர்களின் சங்க பிரதிநிதிகள், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து இன்று வழக்கம் போல் 100 சதவீதம் பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படுகின்றன.
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சென்னை முழுவதும் வழக்கமாக வார நாட்களில் 480 முதல் 490 பேருந்துகள் வரை இயக்கப்படும். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் 427 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. 100 சதவிகித பேருந்துகள் இயக்கப்படுவதால் கடந்த மூன்று நாட்களாக பயணத்திற்காக சிரமத்தில் இருந்த பொதுமக்கள் தங்குதடையின்றி பயணத்தை தொடங்கினர்.