தமிழகத்தில் சிறப்பு அதிகாரிகள் காலத்தில் 10,000 கோடி ரூபாய் அளவிற்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயல் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஷ்ணுபிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஷ்ணுபிரசாத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் (பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்) பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக பல மாதங்களுக்கு முன்பாகவே மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. முன்பே இதுகுறித்து விசாரித்து இருந்தால் முறைகேடுகளைத் தடுத்திருக்கலாம்.
Also read: துணை முதலமைச்சர் பதவி கேட்டுப்பெறுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா? - காங்கிரஸ் விளக்கம்
மீண்டும் ஆட்சிக்கு வரப்போதில்லை என அதிமுக அரசு ஊழல் செய்து வருகிறது. மாநில அரசு அதிகாரிகளைப் பயன்படுத்தி ஊழல் செய்கிறது. மத்திய அரசும் வேடிக்கை பார்க்கிறது. வரும் கூட்டத்தொடரில் இதுதொடர்பாக பிரச்சனை எழுப்பவுள்ளேன். துறை சார்ந்த மத்திய அமைச்சருக்கும் புகார் தெரிவித்திருக்கிறேன்.
தற்போது லோக் ஆயுக்தாவை நாடி உள்ளேன். அதனடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட திட்ட அலுவலர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளின் சொத்துக்களை முடக்கி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தமிழக முதல்வர் நீட் தேர்வை எதிர்க்கத் தவறியதால் மாணவர்களை இழந்து வருகிறோம். நீட் தேர்வை தொடர்ந்து நடக்க அனுமதிக்கக்கூடாது. இதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்' என அவர் தெரிவித்துள்ளார்.