திருச்சி பெட்டவாய்த்தலை அருகே வாகன சோதனையில் 1 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. முசிறி அதிமுக எம்எல்ஏ வும், வேட்பாளருமான செல்வராசுக்கு பணத்தைக் கொண்டு சென்றதாக மாவட்ட கவுன்சிலர், எம்.எல்.ஏ. கார் ஓட்டுனர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி - கரூர் சாலை பெட்டவாய்த்தலை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த வெள்ளை நிற இனோவா காரை நிறுத்தி சோதனையிட்ட முயன்றபோது, காரின் உள்ளே வைக்கப்பட்டிருந்த சாக்குமூட்டையில் பணம் இருப்பதால் அதனை வெளியே போட முயன்றனர். இதனை கண்ட பறக்கும் படை அதிகாரிகள் காரில் சோதனை செய்தபோது சாக்குமூட்டையில் பணம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து காரில் பயணித்த நான்கு பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
கார் திருச்சி முசிறி தொகுதி தற்போதைய அதிமுக எம்.எல்.ஏ. செல்வராசு மகன் ராமமூர்த்திக்கு சொந்தமானது என்பதும் தொட்டியம் மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சத்திய ராஜா, எம்.எல்.ஏ. செல்வராசு ஓட்டுநர் ஜெயசீலன் உள்ளிட்ட அவரது நண்பர்கள் நான்கு பேர் பயணித்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து பணத்துடன் காரை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் ஸ்ரீரங்கம் சப்-கலெக்டர் நிசாந்த் கிருஷ்ணாவிற்கு தகவல் அளித்தனர். மேலும் வருமான வரித்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
இதனை அடுத்து பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் ரொக்கம் திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு அலுவலர்கள் முன்னிலையில் பணம் எண்ணப்பட்டதில் ஒரு கோடி ரூபாய் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட கருவூலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், நான்கு பேரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் ஆங்காங்கே சிறிய தொகையாக பிடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு கோடி ரூபாய் ,500 ரூபாய் கட்டுகளாக பிடித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சட்டமன்ற உறுப்பினரின் மகனுக்கு சொந்தமான காரிலேயே கடத்தப்பட்ட சம்பவம் முசிறி தொகுதி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதா? இது எங்கிருந்து கொண்டு செல்லப்படுகிறது யார் இந்த ஒரு கோடி ரூபாய் கொடுத்தார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Must Read : வாக்குசேகரிப்பில் புது ரூட்டில் குஷ்பு: சமையலறைக்கே சென்று டீ போட்டு கொடுத்து அசத்தல்!
மேலும் அதிமுகவை சேர்ந்த அரசியல் பிரமுகர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், அல்லது வேறு தொழிலதிபரிடம் இருந்து பணத்தை வாங்கிக்கொண்டு செல்கிறார்கள் என்பது குறித்தும் சப்-கலெக்டர் நிசான் கிருஷ்ணா தலைமையில் மற்றும் பெட்டவாய்த்தலை மற்றும் ஸ்ரீரங்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- திருச்சி, இ.கதிரவன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Arrested, Election Commission, TN Assembly Election 2021, Trichy