லாரியில் காய்கறி மூடைகளுக்கு இடையே ரூ.1.50 கோடி ஜெலட்டின் குச்சிகள் கேரளாவுக்கு கடத்தல்... 2 பேர் கைது...

Youtube Video

சேலத்தில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் லாரியில் காய்கறி மூடைகளுக்கு இடையே 50 பெட்டிகளில் ஜெலட்டின் குச்சிகளை மறைத்து வைத்து கடத்திச் செல்ல முயன்ற 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள வெடிபொருட்களைக் கடத்திச் சென்ற லாரி தமிழக - கேரள எல்லையான வாளையார் சோதனை சாவடியில் சிக்கியது எப்படி?

 • Share this:
  தமிழகத்தில் இருந்து லாரிகள் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக கேரள மாநில போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாலக்காடு போலீசார் தமிழக கேரள எல்லைப் பகுதியான வாளையார் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தமிழக பதிவு எண் கொண்ட காய்கறி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். சேலத்தில் இருந்து காய்கறி மூடைகள் ஏற்றப்பட்டிருந்த அந்த லாரியில், மொத்தம் 250 அட்டைப் பெட்டிகள் இருந்தன. அவற்றில் 50 பெட்டிகளில் 50,000 ஜெலட்டின் குச்சிகள் இருந்தன; மேலும், 50 மூட்டை டெட்டனேட்டர்கள், 4,500 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் ஆகியவை இருந்தன.

  அவற்றைப் பறிமுதல் செய்த போலீசார் அவற்றின் மதிப்பு ஒன்றரைக் கோடி ரூபாய் என தெரிவித்துள்ளனர். லாரி ஓட்டுனர் சேலத்தைச் சேர்ந்த இளவரசன், உதவியாளர் கார்த்திக் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், வெடிபொருட்கள் கேரளாவின் மன்னார்காடு மாவட்டத்திற்கு கடத்திச் செல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.

  வெடிபொருட்களை தமிழகத்தில் இருந்து அனுப்பியது யார் என்பது குறித்தும் , கேரளாவில் அதை யார் வாங்குகிறார்கள் என்பது குறித்தும் கேரள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  மேலும் படிக்க..."எஸ்பிபி இங்கு தான் உள்ளார்" : மதுரையில் ஷைலஜா, சரண் நெகிழ்ச்சி

  தமிழகம் மற்றும் கேரளாவில் சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள வெடிபொருட்களை லாரியில் கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: