தந்தையின் கருத்தால் வருத்தமடைந்தேன் - தனது பிறந்தநாளில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த யுவராஜ் சிங்!

யுவராஜ் சிங்

"கொரோனாவுக்கு எதிராக தொடர்ந்து போராட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

  • News18
  • Last Updated :
  • Share this:
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தில் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் (Yuvraj Singh) தந்தை யோகிராஜ் சிங் (Yograj Singh) பங்கேற்றுள்ளார். மேலும் இவர் புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக போராட்ட களத்தில் சில மூர்க்கத்தனமான கருத்துக்களை பதிவிட்டார். இவரது கருத்துக்கள் சமூக ஊடகங்களில் சில நாட்களாக வலம் வந்து மக்களின் வெறுப்பை சம்பாதித்தார். இந்த நிலையில் யுவராஜ் சிங் தனது பிறந்தநாளையொட்டி தனது தந்தையின் கருத்து தொடர்பாகவும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாகவும் கருத்துக்களை தனது சமூக ஊடங்கங்களில் பதிவிட்டுள்ளார்.யுவராஜ், தனது 39 வது பிறந்தநாளை முன்னிட்டு, புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையிலான முட்டுக்கட்டை நிலைமைக்கு விரைவான தீர்வு காண பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டிருந்தார். அதே நேரத்தில் தனது தந்தையின் சித்தாந்தங்களிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டார். இது குறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளுக்கு தேசத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த யுவராஜ், மத்திய அரசுடன் அமைதியான உரையாடலின் மூலம் ஒரு தீர்மானத்தை எதிர்பார்க்க வலியுறுத்தினார்.

"சந்தேகத்திற்கு இடமின்றி, விவசாயிகள் தேசத்தின் உயிர்நாடி, அமைதியான உரையாடலின் மூலம் அவர்கள் தங்கள் பிரச்சினையை தீர்க்க முடியும்" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் அந்த அறிக்கையில் "பிறந்த நாள் என்பது ஒரு விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு வாய்ப்பாகும். இந்த பிறந்தநாளை கொண்டாடுவதை விட, நம் விவசாயிகளுக்கும் நம் அரசாங்கத்திற்கும் இடையில் நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு விரைவாக தீர்வு கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பிரார்த்தனை செய்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து நேற்று நள்ளிரவில் ட்விட்டரில் பதிவிட்டு தனது ஒரே விருப்பத்தை எடுத்துரைத்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்குமாறு யோகிராஜ் சிங் மத்திய அரசை வலியுறுத்தியதோடு, எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளின் ஆதரவைக் காட்ட தங்கள் விருதுகளைத் திருப்பித் தரும் விளையாட்டு வீரர்களையும் ஆதரித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது " விவசாயிகள் சரியானதைக் கோருகிறார்கள். அரசாங்கம் அவற்றைக் கேட்க வேண்டும். இது தொடர்பாக அரசாங்கம் தீர்வுகளை கொண்டு வர வேண்டும் என்பது மிகவும் அவசியம். விவசாயிகள் போராட்டத்திற்காக அவர்களின் மதிப்புமிக்க விருதை திருப்பித் தரும் அனைத்து விளையாட்டு வீரர்களையும் நான் ஆதரிக்கிறேன், ”என்று யோகிராஜ் கூறியிருந்தார்.

மேலும் அவர் பேசிய பல்வேறு கருத்துக்கள் மக்களை ஆத்திரமடைய செய்வதாக இருந்தது. மேலும் அவரின் பேட்டி சமூக ஊடகங்களில் மிகவும் வைரலானது. இதனால் இணைய வாசிகள் மத்தியில் பெரும் வெறுப்பினை யுவராஜ் சிங் தந்தை சம்பாதித்தார். இதன் விளைவாக #ArrestYograjSingh என்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைத்தளத்தில் பரவியது. இந்த நிலையில், யுவராஜ் சிங் இது குறித்து தனது பிறந்தநாளில் குறிப்பிட்டுள்ளதாவது, "திரு யோகிராஜ் சிங் கூறிய அறிக்கைகளால் நான் வருத்தப்படுகிறேன். அவரது கருத்துக்கள் ஒரு தனிப்பட்ட திறனில் செய்யப்பட்டுள்ளன என்பதையும் எனது சித்தாந்தங்கள் எந்த வகையிலும் அவரை போல ஒரே மாதிரியாக இருந்ததில்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார். உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்து வரும் கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் யுவராஜ் மக்களை கேட்டுக்கொண்டார்.

Also see... சிக்ஸர் நாயகன் யுவராஜ் சிங்கின் மறக்க முடியாத வரலாற்று நினைவுகள்!

அதில் குறிப்பிட்டுள்ளதாவது, "கொரோனாவுக்கு எதிராக தொடர்ந்து போராட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். தொற்றுநோய் இன்னும் முடிவடையவில்லை, மேலும் வைரஸை முற்றிலுமாக தோற்கடிக்க நாம் தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டும். ஜெய் ஜவான், ஜெய் கிசான்! ஜெய் ஹிந்த்." என குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 17வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் கடந்த மாதம் 26ம் தேதி முதல் போராட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. புராரி மைதானத்திலும், சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: