மல்யுத்த போட்டியில் தோல்வியடைந்ததால் இளம் வீராங்கனை தற்கொலை?

மல்யுத்த போட்டியில் தோல்வியடைந்ததால் இளம் வீராங்கனை தற்கொலை?

மல்யுத்த வீராங்கனை

ரித்திகாவின் மரணம் தங்கள் குடும்பத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியிருப்பதாக கீதா பொகத் ட்விட்டர் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Share this:
இந்தியாவின் பிரபலமான மல்யுத்த வீராங்கனைகளாக விளங்கும் பபிதா, கீதா பொகத் ஆகியோரின் சகோதரியும் 17 வயது நிரம்பிய இளம் மல்யுத்த வீராங்கனையுமான ரித்திகா பொகத், போட்டி ஒன்றில் தோல்வி அடைந்த விரக்தியால் தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது.

ஹரியானாவைச் சேர்ந்த 17 வயதே ஆன ரித்திகா பொகத், மல்யுத்த வீராங்கனையாக திகழ்ந்து வருகிறார். நேற்றிரவு இவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் 12 முதல் 14ம் தேதி வரை ராஜஸ்தானின் பரத்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான மல்யுத்த போட்டியில் சப் ஜூனியர் பிரிவில் கலந்து கொண்டதாகவும் இறுதிப் போட்டியில் ஒரு பாயிண்ட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாகவும் தெரிகிறது.

இதன் காரணமாக கடும் மன அழுத்தத்தில் ரித்திகா பொகத் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரித்திகா, அவரின் உறவினரும் இந்திய அளவில் மல்யுத்த பிரபலமாக விளங்கும் மகாவீட் சிங் பொகத்தின் வீட்டில் நேற்றிரவு தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

ஹரியானாவின் பிரபலமான மல்யுத்த குடும்பமாக விளங்குவது மகாவீர் சிங் பொகத்தின் குடும்பம்தான். தொழில்முறை மல்யுத்த வீரரான இவரின் இரண்டு மகள்களுமே சர்வதேச மல்யுத்த நட்சத்திரங்கள். பபிதா பொகத், கீதா பொகத் மற்றும் மகாவீர் சிங் பொகத் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டே ‘தங்கல்’ என்ற படத்தை அமீர்கான் தயாரித்தார்.

தற்கொலை செய்துகொண்ட ரித்திகா பொகத், மகாவீர் சிங் நடத்தி வரும் மல்யுத்த பயிற்சியகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வந்ததாக கூறப்படுகிறது. ராஜஸ்தானில் நடைபெற்ற போட்டித் தொடரின் போது ரித்திகாவின் தந்தை, மகாவீர் சிங் ஆகியோரும் உடன் சென்றதாக கூறப்படுகிறது.

ரித்திகாவின் மரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே ரித்திகாவின் மரணம் தங்கள் குடும்பத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியிருப்பதாக கீதா பொகத் ட்விட்டர் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். கீதா பொகத் இந்தியாவுக்காக முதல் காமன்வெல்த் தங்கப் பதக்கத்தை 2010ம் ஆண்டில் பெற்றுத்தந்தார். மேலும் ஒலிம்பிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையையும் அவர் 2012ம் ஆண்டில் பெற்றார்.கீதாவின் உடன் பிறந்த சகோதரியான பபிதா பொகத், 2010 காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கமும், 2012 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலமும், 2014 காமன்வெல்த்தில் தங்கமும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published:

சிறந்த கதைகள்