Sushil Kumar: சாதனையாளர் டூ கொலைக் குற்றவாளி: சுஷில் குமார் கைது செய்யப்பட்டதன் பின்னணி!

சுஷில் குமார்

சுதந்திரத்திற்கு பிறகு இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக சுஷில் குமார் இருந்து வருகிறார்.

  • Share this:
கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் டெல்லி காவல்துறையினரால் இன்று காலை (மே 23) கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜூனியர் சாம்பியன் சாகர் ராணா (வயது 23) கொலை வழக்கு தொடர்பாக சுஷில் குமார் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து சுஷில் குமார் குறித்து தகவல் தெரிவித்தால் ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் முன்னர் டெல்லி காவல்துறை அறிவித்திருந்த நிலையில் கடந்த 20 நாட்களாக தலைமறைவாக இருந்து வந்த சுஷில் குமார் மற்றும் அவருடைய நண்பரை டெல்லியின் முந்த்கா எனும் பகுதியில் வைத்து இன்று காலை கைது செய்துள்ளது.

விளையாட்டு போட்டிகளில் சுஷில்:

37 வயதாகும் சுஷில் குமார் இந்தியாவுக்காக இரண்டு முறை ஒலிம்பிக் விளையாட்டில் பதக்கம் வென்றவர். 2008-ல் பீஜிங்கில் வெண்கலமும், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளார். சுதந்திரத்திற்கு பிறகு இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக சுஷில் குமார் இருந்து வருகிறார்.

மல்யுத்த விளையாட்டு போட்டியில் 56 ஆண்டுகளுக்கு பிறகு 2008ம் ஆண்டு ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் சுஷில் குமார். மல்யுத்த போட்டியில் கசபா தாதாசாகேப் ஜாதவுக்கு பிறகு இரண்டாவது ஒலிம்பிக் பதக்கம் பெற்ற பெருமை சுஷிலுக்கு உண்டு. இரண்டு ஒலிம்பிக் பதக்கங்கள் மட்டுமல்லாது, 2010 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் (மாஸ்கோ), காமன்வெல்த் போட்டிகளில் 3 தங்கம், ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம், காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் 5 தங்கம் என சர்வதேச அளவில் இந்தியாவை புகழின் உச்சத்துக்கு கொண்டு சென்றவர் சுஷில் குமார்.

Read More:   பாகிஸ்தான் உளவு அமைப்பினருடன் தொடர்பு: இரண்டு பெண்கள் கைது - பகீர் தகவல்கள்!

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது 2009-ல் சுஷிலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இப்படி புகழின் உச்சியில் இருந்தவருக்கு கடந்த மே மாத தொடக்கத்தில் போதாத காலம் ஏற்பட்டது.

கொலை குற்றவாளி ஆனது எப்படி?

சத்ரசால் ஸ்டேடியத்தின் அருகில் சுஷில் குமாருக்கு தொடர்புடைய வீட்டில் இளம் மல்யுத்த வீரர் சாகர் ரானா மற்றும் அவரது நண்பர்கள் குடியிருந்துள்ளனர். அவர்களை வீட்டை விட்டு காலி செய்யச் சொல்லியும் காலி செய்யவில்லை என கூறப்படுகிறது, இதனையடுத்து அவர்கள் பலவந்தமாக காலி செய்யவைக்கப்பட்டனர். மேலும் சத்ரசால் ஸ்டேடியத்தில் மற்றவர்கள் முன்னிலையில் சாகர் ரானா சுஷில் குமாரை கெட்ட வார்த்தைகள் சொல்லி திட்டியதாகவும் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று சுஷில் குமாரை, ரானா மிரட்டினார் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மே 4 -5ம் தேதி இடைப்பட்ட இரவில் சத்ரசால் ஸ்டேடியத்தில் இரு மல்யுத்த வீரர்கள் குழுக்களிடையே சண்டை நடந்துள்ளது. இதில் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட பிரச்சினை பெரிதாகியுள்ளது. இந்த சண்டையில் மூன்று பேர் காயமடைந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர், இதில் படுகாயமடைந்த சாகர் ரானா பலியானார். சண்டை நடந்த இடத்தில் சுஷில் குமார் இருந்ததாக தெரியவந்தது.

இதனையடுத்து மே 4ம் தேதி அந்த பிரச்னைக்கு பிறகு சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர் அஜய் ஆகியோர் தலைமறைவாகினர். இதனிடையே சுஷில் குமார் உட்பட 9 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சுஷில் குமார் தாக்குதலில் ஈடுபட்டதற்கான வீடியோ பதிவும் போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தேடப்படும் குற்றவாளியாக சுஷில் குமாரை டெல்லி போலீஸ் அறிவித்ததுடன், பஞ்சாப், டெல்லி என இரண்டு மாநிலங்களிலும் அவரை தீவிரமாக தேடினர். ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டையும் பிறப்பித்தனர். டெல்லி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த சுஷில் குமாரின் மனு மே 18ம் தேதி நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த சுஷில் குமார் டெல்லி காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார்.
Published by:Arun
First published: