Home /News /sports /

‘பால் டாம்பேரிங்’ சர்ச்சையில் சிக்கிய இலங்கை கேப்டன் சண்டிமால்

‘பால் டாம்பேரிங்’ சர்ச்சையில் சிக்கிய இலங்கை கேப்டன் சண்டிமால்

இலங்கை கேப்டன் சண்டிமால்

இலங்கை கேப்டன் சண்டிமால்

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் கேப்டன் சண்டிமால் பந்தை சேதப்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

    வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2வது போட்டி செயின்ட் லூசியாவில் உள்ள ‘டாரென் சமீ’ மைதானத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

    இந்நிலையில், இப்போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில், இலங்கை அணி பந்தை சேதப்படுத்தியதாக நடுவர்கள், அலீம் தர் மற்றும் ஐயன் கோல்ட் ஆகியோர் புகார் தெரிவித்தனர். இதனைக் கண்டித்து இலங்கை அணி சனிக்கிழமை பீல்டிங் செய்ய மறுத்து மைதானத்திற்கு வராததால் சர்ச்சை எழுந்தது. இதனால் ஆட்டம் 2 மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.

    வெள்ளிக்கிழமை நடந்த ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் சண்டிமால் தனது பாக்கெட்டிலிருந்து இனிப்பு பொருளை எடுத்து வாயில் போடும் சாக்கில், பந்தில் ஏதோ ஒன்றை தேய்ப்பது வீடியோ காட்சிகளில் பதிவானதை அடுத்து, போட்டியின் நடுவர்கள் பந்தின் தன்மையை அவர் மாற்ற முயற்சித்ததாகப் புகார் எழுப்பி, இலங்கை அணியின் 5 ரன்களை பெனால்டியாகக் குறைத்தனர்.

    இதனைத் தொடர்ந்து, ஐ.சி.சி தனது டிவிட்டர் பக்கத்தில் சண்டிமால், நடத்தை விதி ‘லெவல் 2.2.9’-ஐ மீறியுள்ளதாக பதிவிட்டுள்ளது. இதனை சண்டிமால் மறுத்துள்ளார். ஜவகல் ஸ்ரீநாத் தலைமையிலான ஐ.சி.சி-யின் விசாரணைக்குழு, சண்டிமாலை இந்த ஆட்டம் முடிந்தவுடன் விசாரிக்கும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளிலிருந்து சண்டிமால் நீக்கப்படுவார். பந்தை சேதப்படுத்தினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று சமீபத்தில் ஐ.சி.சி எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல், கடந்த மார்ச் மாதம் பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு அனைத்து போட்டிகளிலும் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் ஒரு ஆண்டு  தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Veeramani Panneerselvam
    First published:

    Tags: Ball Tampering, Dinesh Chandimal

    அடுத்த செய்தி