Home /News /sports /

சமூக வலைதளத்தில் வைரலான மகளின் படம்- நெட்டிசன்களுக்கு கோலி வேண்டுகோள்

சமூக வலைதளத்தில் வைரலான மகளின் படம்- நெட்டிசன்களுக்கு கோலி வேண்டுகோள்

Virat kohli

Virat kohli

மகள் புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்களுக்கு கோலி கோரிக்கைவிடுத்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலிக்கும், பிரபல பாலிவுட் ஹீரோயின் அனுஷ்கா சர்மாவுக்கு 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. அவர்களது திருமணம் இந்திய அளவில் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. இந்தியாவின் பிரபலமான இந்த ஜோடிக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு வாமிகா என்று பெயரிட்டனர். குழந்தை பிறந்ததிலிருந்து குழந்தையின் புகைப்படத்தை பொதுவெளியில் வெளியிடாமல் பாதுகாத்துவருகின்றனர்.

    வெளியிடங்களுக்குச் செல்லும்போது குழந்தையின் முகத்தை மூடியே கோலி, அனுஷ்கா சர்மா சென்றுவருகின்றனர். இதுகுறித்து அப்போது விளக்கமளித்த கோலி - அனுஷ்கா தம்பதி, ‘நாங்கள் வாமிகாவின் புகைப்படத்தை அவளது அனுமதி இல்லாமல் வெளியிட மாட்டோம். அவளுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம். எனவே யாரும் வாமிகாவின் புகைப்படத்தை எப்பொழுதும் வெளியிட வேண்டாம்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

    இந்தநிலையில், நேற்று தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் கோலி அரைசதத்தைக் கடந்தார். அப்போது, மைதானத்தில் பால்கனியில் இருந்த குழந்தை வாமிகாவுடன் இருந்த அனுஷ்கா சர்மாவை நோக்கி, இந்த அரை சதத்தை குழந்தைக்கு அர்ப்பணிப்பதாக சைகை செய்தார். அதற்கு அனுஷ்கா சர்மாவும் பதிலளிக்கும் வகையில், கோலிக்கு கையசைத்தார். இது தொலைக்காட்சி கேமராவில் பதிவாகி, பின்பு இணையம் முழுவதும் வைரலானது. நேற்று, சமூக வலைதளங்கள் முழுவதும் வாமிகாவின் புகைப்படம் வைரலானது. ட்விட்டரிலும் வாமிகா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது.

    இந்தநிலையில், கோலியின் இன்ஸ்டாகிராம் பதிவில், ‘நேற்று எங்களுடைய மகள் வாமிகாவின் புகைப்படம், மைதானத்தில் எடுக்கப்பட்டு, அதிகமாக பகிரப்பட்டுள்ளது. அங்கு கேமரா இருந்தது எங்களுக்கு தெரியாது. எங்களுக்கு தெரியாமலேயே புகைப்படம் எடுக்கப்பட்டு வெளியாகியுள்ளது. நாங்கள் முன்பு அறிவித்தது போல வாமிகாவின் முகத்தை வெளியே தெரியாமல் பார்த்து வருகிறோம். இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் வாமிகாவின் புகைப்படத்தை பகிராமல் இருந்திருந்தால் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Virat Kohli

    அடுத்த செய்தி