• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • மேரிகோம், பி.வி.சிந்து, நீரஜ் சோப்ரா - ஒலிம்பிக்கில் தங்க வேட்டைக்கு காத்திருக்கும் வீரர்கள் யார் யார்?

மேரிகோம், பி.வி.சிந்து, நீரஜ் சோப்ரா - ஒலிம்பிக்கில் தங்க வேட்டைக்கு காத்திருக்கும் வீரர்கள் யார் யார்?

ஒலிம்பிக்கில் இந்தியக் கொடி ஏந்திவரும் மன்பீரித் சிங்

ஒலிம்பிக்கில் இந்தியக் கொடி ஏந்திவரும் மன்பீரித் சிங்

ஜப்பானில் ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ள நிலையில், இந்தியா சார்பில் தங்கம் வெல்வார்களா? என்று எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

  • Share this:
    நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் ஒலிம்பிக் திருவிழாவில் இந்தியா இதுவரை 24 முறை களமிறங்கியுள்ளது. இதில் ஒன்பது தங்கம், ஏழு வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களை கைப்பற்றி வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது.

    இந்த பதக்க எண்ணிக்கையை உயர்த்துவதற்காகவும் இந்தியாவின் பெருமையை சர்வதேச அரங்கில் நிலைநாட்டவும் இம்முறை டோக்கியோவிற்கு 127 வீரர்கள் சென்றுள்ளனர். ஒலிம்பிக்கில் வரலாற்றில் அதிக வீரர்களுடன் இந்தியா இம்முறை களம்காண்கிறது.

    தடகளம், துப்பாக்கிச்சூடு, மல்யுத்தம் என 18 வகையான விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் களம் காண்கின்றனர். குறிப்பாக வாள் வீச்சு, குதிரையேற்றம் மற்றும் நீச்சல் போட்டிகளில் முதல் முறையாக இந்திய வீரர்கள் தங்கள் பெயரை ஒலிம்பிக் போட்டிகளில் பதிவு செய்து சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

    பதக்க நம்பிக்கைக்குரிய வீரர்களில் முக்கியமானவராக பி.வி.சிந்து திகழ்கிறார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்று சாதனை நிகழ்த்திய சிந்து இம்முறை தங்க வேட்டைக்கு தயாராகியுள்ளார்.

    வில்வித்தையில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான தீபிகா குமாரி மீதான எதிர்பார்ப்பு எகிரியுள்ளது. உலக கோப்பையில் தங்கப்பதக்கத்தை வாங்கிய தீபிகா, ஒலிம்பிக்கில் தனது அம்புகள் மூலம் தங்கப்பதக்கத்தை குறிபார்த்து வீழ்த்த காத்திருக்கிறார். தீபிகாவுடன் அடானு தாஸூம் அசத்தும் பட்சத்தில் இந்தியாவிற்கு குழு பிரிவிலும் பதக்கம் உறுதியாகும்.

    துப்பாக்கிச்சுடும் விளையாட்டில் இந்தியாவிற்கு தங்கச்சுரங்கமே காத்திருக்கிறது என்கின்றனர் விளையாட்டு நிபுணர்கள். 19 வயதே நிரம்பிய சவுரப் சௌத்ரி மற்றும் மனு பகர் ஆகியோர் இணைந்து பதக்கத்தை வேட்டையாட காத்திருக்கின்றனர். இவர்களுடன் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவனும் அசத்தவுள்ளார்.

    ரியோ ஒலிம்பிக் மல்யுத்த களத்தில் காயத்தால் வெளியேறிய வினேஷ் போகத் இம்முறை டோக்யோவில் தங்கத்தை தட்டிவருவார் என அனைவரும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 26 வயதான வினேஷ் போகத் 53 கிலோ ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் நிச்சயம் பதக்கத்தை வெல்வார் என நம்பியுள்ளனர்.

    உலக பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானுவும் பதக்க நம்பிக்கை பட்டியலில் இணைந்துள்ளார். 48 கிலோ எடைபிரிவில் களமிறங்கும் மீராபாய், நிச்சயம் பதக்கத்தை தூக்கிவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    குத்துச்சண்டை என்றாலே இந்தியாவிற்கு ஒரு பதக்கம் உறுதி என்கிற நம்பிக்கையை விதைத்துவிட்டு டோக்கியோவிற்கு சென்றுள்ளார் மேரி கோம். லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலத்துடன் நாடு திரும்பிய இவர் இம்முறை தங்கத்தை தனது அதிரடி குத்துக்கலால் தட்டிப்பறிக்க காத்திருக்கிறார். இவருடன் மற்றொரு குத்துச்சண்டை வீரர் அமித் பங்கலும் இணைந்து சாதிக்க காத்திருக்கிறார்.

    ஈட்டி எறிதலில் கிள்ளாடியான இளம் கதாநாயகன் நீரஜ் சோப்ரா பதக்க வீரர்களில் முதன்மையானவராக திகழ்கிறார். ஜூனியர் உலகக் கோப்பையில் உலக சாதனை படைத்து அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தார். அதே போல் இம்முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டேபிள் டென்னிஸ் விளையாட்டில் இம்முறை இந்தியா பதக்கத்துடன் நாடு திரும்பும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. ஆசிய விளையாட்டில் கலப்பு இரட்டையர் பிரிவில் பதக்கம் வென்ற சரத் கமல் மற்றும் மனிகா பத்ரா இணை ஒலிம்பிக்கிலும் பதக்கத்துடன் நாடு திரும்புவார்கள் என அனைவரும் காத்திருக்கின்றனர். ஒற்றையர் பிரிவில் சத்யன் எதிரிகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வாள் வீச்சில் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியில் களம் காணும் இந்தியா முதல் பதக்கத்தையும் வேட்டையாட காத்திருக்கிறது. தமிழகத்தை சேர்ந்த வீர மங்கை பவானி தேவி பதக்க நம்பிக்கை வீராங்கனைகளின் பட்டியலில் இணைந்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கடந்த ஆண்டு இரண்டு பதக்கத்தோடு நாடு திரும்பிய இந்தியா இம்முறை பதக்க எண்ணிக்கையை நிச்சயம் உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: