• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Tokyo Olympics 2021 | 1900- 2016 வரை.. ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் சாதனைகள்

Tokyo Olympics 2021 | 1900- 2016 வரை.. ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் சாதனைகள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

1900 முதல் 2016 வரை இந்தியா பங்கேற்ற ஒலிம்பிக் போட்டிகளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

  • Share this:
    1886-ம் ஆண்டு நவீன ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட்டாலும் 1900 ஆம் ஆண்டு தான் இந்தியா முதன் முதலில் ஒலிம்பிக் போட்டியில் காலடிபதித்தது. நார்மன் பிரிட்சர்ட் என்ற தடகள வீரர் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவின் சார்பில் இந்த போட்டியில் கலந்துகொண்டார். முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று இந்தியாவின் கணக்கை தொடங்கி வைத்தார் பிரிச்சர்ட்.

    அதுமுதல் 18 ஒலிம்பிக் தொடர்களில் பங்கேற்றுள்ள இந்தியா இதுவரை 28 பதக்கங்களை வென்றுள்ளது. 25 வகையான விளையாட்டுகளில் இந்திய வீரர்கள் பங்கேற்றிருந்தாலும் ஹாக்கியில் ஜாம்பவான்களாக ஒலிம்பிக்கில் மைதானத்தில் வீரநடை போட்டு வந்தனர்.

    1920-ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்தியா பங்கேற்று வருகிறது. 1920 மற்றும் 1924-ம் ஆண்டுகளில் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு பதக்கம் எதுவும் கிடைக்கவில்லை.

    1928-ல் ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி முதல்முறையாக பங்கேற்றதுடன் தங்கப்பதக்கத்தையும் கைப்பற்றி சாதனை நிகழ்த்தியது.

    1928 தொடங்கி 1956 வரை தொடர்ச்சியாக 6 ஒலிம்பிக்கில் ஹாக்கி போட்டிகளில் தங்கம் வென்று எவராலும் வீழ்த்த முடியாத நாடாக சர்வதேச அரங்கில் இந்தியா ஜொலித்தது.

    1960-ம் ஆண்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி, 1964 டோக்கியோ ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தியது.

    1968 மற்றும் 1972 ஒலிம்பிக்கில் ஹாக்கி அணியால் வெண்கலப் பதக்கம் மட்டுமே வெல்ல முடிந்தது. 1976ம் ஆண்டு ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இந்திய ஹாக்கி அணி சறுக்கலை சந்தித்தது.

    1980-ல் மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி அணி மீண்டும் தங்கப்பதக்கத்தை எட்டிப்பிடித்து சாதனை படைத்தது.

    இந்த அணியின் கேப்டனான தமிழகத்தைச் சேர்ந்த பாஸ்கரன் ஒலிம்பிக் களத்தில் பொலிவிழந்து இருந்த இந்தியாவின் பெருமையை மீண்டும் நிலைநாட்டினார். இதற்குப் பிறகு 16 ஆண்டுகள் கழித்து 1996-ல் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் அட்லாண்டா ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று புதிய சாதனை படைத்தார்.

    2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதன் மூலம் இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்றுத் தந்த முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் பளு தூக்குதல் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி

    துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் 2004-ல் கிடைத்தது. 2008-ல் பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்றார் அபினவ் பிந்த்ரா. தனிநபர் பிரிவில் இந்தியா வென்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். இதே ஆண்டில் மல்யுத்த போட்டியில் சுஷில் குமாரும், குத்துச்சண்டையில் விஜேந்தர் சிங்கும் வெண்கலப் பதக்கத்தை கழுத்தில் ஏந்தினர்.

    லண்டனில் 2012ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 2 வெள்ளி 4 வெண்கலம் என மொத்தம் ஆறு பதக்கங்களை வென்றது. குத்துச்சண்டை மற்றும் பேட்மிண்டன் போட்டியில் இந்தியா முதல் முறையாக பதக்கம் வென்றதும் இந்த ஆண்டுதான்.

    கடைசியாக 2016-ல் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 2 பதக்கங்களுடன் நாடு திரும்பியது. வீர மங்கைகளான பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் ஆகியோர் இந்தியாவின் பெயரை பதக்க பட்டியலில் இடம்பெறவைத்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தற்போது டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 127 வீரர் வீராங்கனைகள் 18 போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளனர். பதக்கப்பட்டியலில் புதிய உச்சத்தை இந்தியா தொடுமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: