துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீரங்கனையான, தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். ஜூலை 23ம் தேதி தொடங்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான, 15 பேர் கொண்ட இந்திய துப்பாக்கி சுடுதல் அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் கடலூரைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இடம் பிடித்துள்ளார். இவருக்கு தகுதி சுற்று போட்டிகளின் மூலம் ஒலிம்பிக் இடத்தை பெறா விட்டாலும், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. தனி மற்றும் கலப்பு பிரிவில், இளவேனில் வாலறிவனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் சமீபத்தில் டெல்லியில் நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய வீராங்கனையுமான சிங்கி யாதவுக்கு இடம் கிடைக்கவில்லை. இது கொரோனா காலம் என்பதால் ஒவ்வொரு பிரிவிலும் தலா 2 மாற்று வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.