பார்க் டூ ஃபிஃபா வரை...உலகக்கோப்பை வீரனின் வெற்றிக்கதை!

news18
Updated: July 12, 2018, 10:46 AM IST
பார்க் டூ ஃபிஃபா வரை...உலகக்கோப்பை வீரனின் வெற்றிக்கதை!
ரொமெலு லுகாகு
news18
Updated: July 12, 2018, 10:46 AM IST
எனக்கு அந்த தருணம் சரியாக ஞாபகம் உள்ளது. என் மனதில் அக்காட்சிகள் இப்போதும் அப்படியே விரிகின்றன. என் அம்மா குளிர்சாதன பெட்டிக்கு அருகில் நின்று கொண்டிருக்கிறாள். அவள் முகம் எனக்கு இன்னும் தெளிவாக ஞாபகம் இருக்கிறது.

எனக்கு அப்போது ஆறு வயது. நான் பள்ளியிலிருந்து மதிய உணவு இடைவேளையின்போது என் வீட்டுக்கு செல்கிறேன். எங்கள் வீட்டில் எப்போதும் ஒரே உணவுதான்; பாலும், ரொட்டியும். நாம் குழந்தையாய் இருக்கும்போது இது பற்றியெல்லாம் சிந்திப்பதில்லை. ஆனால் இப்போது எனக்கு தெரிகிறது. அந்த உணவை உண்ணும் அளவுக்கு தான் எங்களிடம் வசதி இருந்தது.

அன்று நான் வீட்டுக்கு சென்று, நேராக சமையலறை பக்கம் செல்கிறேன். அங்கு என் அம்மா குளிர்சாதன பெட்டிக்கு அருகில் கையில் ஒரு பால் புட்டியுடன் நிற்கிறாள். அது எப்போதும் நடக்கும் சாதாரணமான ஒரு காட்சிதான். ஆனால் அன்று அந்த பால் புட்டியினுள் அவள் எதையோ கலந்து கொண்டிருந்தாள். நன்கு கலந்தபிறகு, அவள் அந்த பால் புட்டியை குலுக்கிக் கொண்டிருப்பதை நான் பார்த்துக்கொண்டு நிற்கிறேன். எனக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. பிறகு எனக்கு மதிய உணவை பரிமாறினாள். எதுவுமே நடக்காததுபோல், எல்லாம் நன்றாக சென்று கொண்டிருப்பதுபோல அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். ஆனால் அந்த நொடியே எனக்கு  எல்லாம் புரிந்துவிட்டது. அவள் பாலில் தண்ணீரை கலந்து கொண்டிருந்தாள். அதுவும் நாங்கள் நேற்று உண்டுவிட்டு மீதமிருந்த பாலில் கலந்து கொண்டிருந்தாள். ஒரு வாரத்துக்கான உணவை வாங்கும் அளவுக்கு கூட எங்களிடம் பணமில்லை. அதை ஏழ்மை என்பதை விட எங்கள் குடும்பமே சுத்தமாக நொறுங்கிப்போய் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

என் தந்தை ஒரு தொழில்முறை கால்பந்தாட்ட வீரர். ஆனால் அவருடைய கால்பந்தாட்ட வாழ்க்கையின் மத்திம காலத்தில் இருந்தார் அவர். நாங்கள் வைத்திருந்த பணம் எல்லாம் காலியாகியிருந்தது. நாங்கள் முதலில் இழந்தது எங்கள் கேபிள் டிவி-யைதான். அதனால் என்னால் கால்பந்து போட்டிகளை பார்க்க முடியாது. அன்று என்ன ஆட்டங்கள் நடக்கிறது என்று எனக்கு தெரியாது. எல்லாம் முடிந்துவிட்டிருந்தது.

நான் பள்ளி முடிந்து இரவில் வீடு வரும்போது, வீடு முழுக்க இருள் சூழ்ந்திருக்கும். வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் வீட்டில் மின்சாரம் இருக்காது. குளிர்காலங்களில் குளிப்பதற்கு சுடுதண்ணீர் இருக்காது. என் அம்மா அடுப்பில் ஒரு கப்  தண்ணிரை சூடு செய்து தருவாள். நான் ஷவரை திறந்துவிட்டு சில்லென்ற தண்ணீர் மேலே விழ, ஒரு கப் சுடுதண்ணீரை என் மேல் ஊற்றிக்கொள்வேன். சில நாட்களில் எங்கள் தெருவிலிருக்கும் பேக்கரியிலிருந்து என் அம்மா ரொட்டிகளை கடன் வாங்கிவருவாள். என்னையும் என் தம்பியையும் அந்த பேக்கரிக்காரருக்கு தெரியும் என்பதால், நாங்கள் திங்கள்கிழமை வாங்கும் ரொட்டிகளுக்கு வெள்ளிக்கிழமை காசு கொடுத்தால் போதும். எனக்கு தெரியும் நாங்கள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தோம். என் அம்மா பாலில் தண்ணீரை கலந்துகொண்டிருக்கும் நொடியிலேயே தெரியும் எல்லாம் முடிந்துவிட்டதென்று. ஆனால் அதுதான் வாழ்க்கை.
Loading...
கால்பந்தாட்ட வீரர்கள் பொதுவாக மனோபலத்தை பற்றி பேசுவார்கள். நான் மனதளவில் மிக திடமான ஆள்தான். ஏனென்றால் பல நாட்கள் நான் என் அம்மா, தம்பியுடன் இருள் சூழ்ந்த அறையில் இரவு முழுக்க பிரார்த்தனை செய்திருக்கிறேன். ஒரு நாள் நான் வீடு திரும்பும்போது என் அம்மா அழுது கொண்டிருந்தாள். அப்போது அவள் அருகில் சென்று அமர்ந்து, “அம்மா, இவை அனைத்தும் மாறும். நீ பார்க்கத்தான் போகிறாய். நான் ‘ஆண்டர்லெக்ட்’ அணிக்காக விளையாடப் போகிறேன். இது கூடிய விரைவில் நடக்கப்போகிறது. நம் நிலை மாறப்போகிறது” என்றேன்.

எனக்கு அப்போது 6 வயது மட்டுமே. நான் என் தந்தையிடம், எப்போது தொழில்முறை கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாட முடியும் என்று கேட்டேன். அவர் 16 வயதில் என்றார். 16 வயதில் அது நடக்கத்தான் போகிறது என்று எனக்குள் நான் சொல்லிக்கொண்டேன். நான் ஆரம்ப காலத்தில் விளையாடிய அனைத்து போட்டிகளும் இறுதிப்போட்டிகள்தான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? நான் பூங்காவில் விளையாடியபோது, பள்ளியில் விளையாடியபோது, நேராக இறுதிப்போட்டிகளில்தான் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

உண்மையில் வெறிப்பிடித்துதான் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறை நான் பந்தை உதைக்கும்போதும் அதன் தோல்களை கிழிக்கவே விரும்பினேன். என் வீட்டில் வீடியோ கேம்ஸ் கிடையாது. அந்த வயதில் மற்ற பிள்ளைகளைப்போல் ஃபிஃபா வீடியோ கேம்ஸை என்னால் விளையாட முடியாது. அதனால் அந்த முழுவெறியும் பந்தின் மேல் உதையாக மாறின. எதிராளியை கொலை செய்யும் வெறியுடன்தான் விளையாடினேன்.

நான் குறிப்பிட்ட வயது வந்தவுடன் மற்றவர்களை விட உயரமாக வளர்ந்திருந்தேன். என்னுடைய ஆசிரியர்களும், மற்ற மாணவர்களின் பெற்றோரும் என்னைப் பார்த்து “உனக்கு என்ன வயதாகிறது? நீ எந்த வருடம் பிறந்தாய்?” என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள். என்னால் அதை மறக்கவேமுடியாது. எனக்கு 11 வயது ஆனபோது, நான் ‘லீயர்ஸ்’ மாணவர்கள் அணிக்காக விளையாடச் சென்றேன். எங்கள் எதிரணியிலிருந்த ஒரு மாணவனின் பெற்றோர் மைதானத்துக்குள் நுழையவிடாமல் என்னை நிறுத்தி,  “உனக்கு என்ன வயதாகிறது? உன்னுடைய அடையாள அட்டையைக் காட்டு? நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டனர். என்னைப் பார்த்து எப்படி அந்த கேள்வியை கேட்கலாம்? நான் இங்குதான் பிறந்தேன். இதே பெல்ஜியத்தை சேர்ந்தவன்தான் நானும் என்றேன்.

என் தந்தை என்னுடன் இல்லை. போட்டிகள் நடக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்ல அவரிடம் கார் கிடையாது. நான் தனியாக இருந்தேன். எனக்கு ஆதரவாக யாரும் இல்லை. நான் நேராக சென்று என் அடையாள அட்டையை எடுத்து அங்கு இருந்த அத்தனை பெற்றோரிடமும் கொடுத்தேன். அங்கிருந்த ஒவ்வொருவரும் அதை வாங்கிப் பார்த்தார்கள். என் நரம்புகளுக்குள் ரத்தம் கொதித்துக் கொண்டிருந்தது. நான் அவர்களைப் பார்த்து, எனக்குள் சொல்லிக் கொண்டேன் “உன் மகனை நான் கொல்லப் போகிறேன். ஏற்கெனவே நான் அவனைக் கொல்வதாகத்தான் இருந்தேன். இப்போது அவனை நான் முற்றிலுமாக துவம்சம் செய்யப்போகிறேன். போட்டிகள் முடிந்து நீங்கள் வீட்டிற்கு கூட்டிச்செல்லும்போது கூட அவர்கள் அழுதுகொண்டிருப்பார்கள்” என்று நினைத்துக் கொண்டேன்.

பெல்ஜியத்தின் வரலாற்றிலேயே, சிறந்த கால்பந்தாட்ட வீரனாக நான் விரும்பினேன். என்னுடைய இலக்கு அதுதான். நல்ல வீரனாக அல்ல. அதிசிறந்த வீரனாக வேண்டும். நான் ஒவ்வொரு போட்டியிலும் முழு கோபத்துடனும், வெறியுடனும் விளையாடினேன். அதனால்தான் மற்ற மாணவர்களின் பெற்றோ என்னைப் பார்த்து அஞ்சினர்.

நான் ஒரு குறிக்கோளை நோக்கி ஓடிக்கொண்டிருந்தேன். எனக்கு 12 வயது ஆனபோது, நான் 34 போட்டிகளில் 76 கோல்களை அடித்திருந்தேன். அந்த அனைத்து கோல்களையும் என் தந்தையின் ஷுக்களை அணிந்தே அடித்தேன். நான் என் தந்தையின் உயரத்திற்கு வளர்ந்தவுடன், நாங்கள் ஒரு ஷுவை மாற்றி மாற்றி அணிந்து கொண்டோம். ஒரு நாள் என்  தாத்தா தொலைபேசியில் பேசினார். என் வாழ்க்கையில் அவர் மிக முக்கியமான மனிதர். காங்கோவுக்கும் எனக்குமான தொடர்புக்கு காரணமானவர் அவர்தான். என் தாயும் தந்தையும் காங்கோவில் பிறந்தவர்கள்.

நான் என் தாத்தாவிடம் “ 76 கோல்களை அடித்திருக்கிறேன். எங்கள் அணி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. பெரிய அணிகளின் பார்வை அனைத்தும் என் மேல்தான் உள்ளது” என்றேன். ஒவ்வொரு முறையும் அவர் என் போட்டிகளை பற்றித்தான் தெரிந்துகொள்ள விரும்புவார். ஆனால் இந்த முறை அவர் பேசியது வித்தியாசமாக இருந்தது. “அற்புதம். ஆனால் நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். நீ என் மகளை பார்த்துக்கொள்வாயா? உன்னை கெஞ்சி கேட்கின்றேன்” என்றார்.

நான் குழம்பிப்போனேன். “அம்மா நன்றாக இருக்கிறாள். நாங்கள் நன்றாகத்தான் உள்ளோம் தாத்தா” என்றேன். “இல்லை நீ எனக்கு சத்தியம் செய். என் மகளை நன்றாக பார்த்துக்கொள்வாய் என்று சத்தியம் செய். அவளை நீ பார்த்துக்கொண்டால் மட்டும் போதும். சரியா? என்றார். சத்தியமாக அம்மாவை நன்றாக பார்த்துக்கொள்கிறேன்” என்றவுடன் மறுமுனையில் அவர் தொலைபேசியை அணைத்துவிட்டார்.

5 நாட்களுக்கு பிறகு அவர் இறந்துவிட்டார். அப்போதுதான் அவர் பேசியதற்கான முழு அர்த்தமும் எனக்குப் புரிந்தது. இதை நினைக்கும் போதெல்லாம் நான் மிகவும் வருத்தப்படுவேன். அந்த மனிதர் மட்டும் இன்னும் 4 ஆண்டுகள் உயிரோடு இருந்திருந்தால், நான் ‘ஆன்டர்லெக்ட்’ அணிக்காக விளையாடுவதை அவர் பார்த்திருப்பார். நான் அவருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றி இருக்கிறேன் என்பதை புரிந்து கொண்டிருப்பார்.

நான் என் அம்மாவிடம் 16 வயதில் அணியில் இடம்பெறுவேன் என்று கூறியிருந்தேன். எனக்கு 16 வயதாகி, சரியாக 11 நாட்கள் ஆகியிருந்தபோது ஆன்டர்லெக்டுக்கும், ஸ்டாண்டர்ட் லீக்-கும் இடையே இறுதிப்போட்டி நடந்தது. அதுதான் என் வாழ்நாளில் மறக்கமுடியாத நாள் 24.05.2009. நான் அந்த தருணத்தில், ஆண்டர்லெக்டின் அண்டர்-19 அணிக்காக குறைவாகத்தான் விளையாடினேன். என்னுடைய பயிற்சியாளர் எனக்கு விளையாடுவதற்கு வாய்ப்பு வழங்கவில்லை. எனக்கு வாய்ப்பு வழங்கப்படாதபோது என்னால் எப்படி 16-ஆவது பிறந்தநாளில் ஆண்டர்லெக்ட் அணிக்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அதனால் என் பயிற்சியாளரிடம் ஒரு பெட் கட்டினேன். “நீங்கள் என்னை விளையாட அனுமதித்தால் நான் வரும் டிசம்பருக்குள் 25 கோல்களை அடிப்பேன்” என்றேன். அவர் என்னைப் பார்த்து சத்தமாக சிரித்துவிட்டு  “சரி சவாலுக்கு தயார்” என்றார். அப்படி நீ 25 கோல்கள் அடிக்கவில்லை என்றால் மீண்டும் விளையாட உனக்கு வாய்ப்பு கிடையாது” என்றார்.

ஆனால் இந்த சவாலில் நான் ஜெயித்துவிட்டால், நம் பள்ளியின் பேருந்துகளை நீங்கள் சுத்தம் செய்ய வேண்டும். மேலும் எங்கள் அனைவருக்கும் தினமும் நீங்கள் கேக் வாங்கித் தர வேண்டும்” என்றேன். அவர் ஒப்புக்கொண்டார்.

நான் நவம்பர் மாததுக்குள் 25 கோல்களை அடித்திருந்தேன். கிறிஸ்மஸ்  தொடங்குவதற்கு முன்னமே நாங்கள் கேக் சாப்பிட தொடங்கிவிட்டோம்.

அது என் பயிற்சியாளருக்கு ஒரு நல்ல பாடம். ஏன் என்றால் பசியில் உள்ள ஒருவனிடம் நீங்கள் சவால் விடக்கூடாது. சரியாக என் பிறந்தநாளான மே 13-ம் தேதி, ஆண்டர்லெக்ட்  அணிக்காக தொழில்முறை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். நேராக கடைக்கு சென்று ஃபிஃபா வீடியோ கேம்ஸை வாங்கினேன். ஒரு கேபிள் கனெக்ஸனையும் வாங்கினேன். வீட்டில் நான் சந்தோசமாக நாட்களை கழித்துக்கொண்டிருந்த காலம் அது. அப்போது பெல்ஜியம் லீக் போட்டிகள் படு சுவாரஸ்யமாக நடந்து கொண்டிருந்தன. ஆண்டர்லெக்ட் மற்றும் ஸ்டாண்டர்ட் லீக் அணிகள் ஒரே புள்ளி எடுத்திருந்த நிலையில், கோப்பையை வெல்வதற்கு, இரு அணிகளுக்கும் இடையில் இரண்டு ஆட்டங்கள் நடைபெற இருந்தது.

முதல் ஆட்டத்தின்போது  ஒரு கால்பந்து ரசிகனாக வீட்டில் படுத்துக்கொண்டு, ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தேன். இரண்டாவது ஆட்டத்துக்கு முதல் நாள். என் பயிற்சியாளர் ஒருவரிடமிருந்து  தொலைபேசி அழைப்பு வருகிறது.

அந்த அழைப்பு ஆண்டர்லெக்ட் அணிக்காக நான்  விளையாடுவதற்காக வந்த அழைப்பு. என் வாழ்க்கையை மாற்றிய அழைப்பு.

நான் உடனடியாக கிளம்பிச் சென்றேன். நேரடியாக ஸ்டேடியத்துக்குள் நுழைந்தேன். இப்போதும் எனக்கு நினைவுள்ளது. டிரெஸ்ஸிங் ரூமுக்குள் ஓடிச்சென்றேன். எனக்கு 36-ஆம் எண் கொண்ட டிஷர்ட்டை  கொடுங்கள்” என்று கேட்டு வாங்கிக்கொண்டேன்.

அடுத்த நாள் நாங்கள் ஸ்டேடியத்துக்கு பேருந்தில் சென்று இறங்கினோம். பேருந்திலிருந்து இறங்கி 300 மீட்டர்உள்ளே நடக்க வேண்டும். என்னைத் தவிர அணியில் உள்ள மற்ற வீரர்கள் அனைவரும் கோட் சூட் அணிந்துகொண்டு உள்ளே நடந்து சென்றார்கள். ஒரு பழைய டிராக் பேண்டை அணிந்துகொண்டு ஆடம்பரமான அந்த இடத்துக்கு சமந்தமே இல்லாத, என்னை அத்தனை டிவி கேமராக்களும் சூழ்ந்துகொண்டன.

லாக்கர் ரூமுக்குள் சென்ற மறு நொடி, என்னுடைய செல்போனுக்கு அழைப்புகள் வரத்தொடங்கின. 3 நிமிடத்தில்  25 மெசேஜ்கள் வந்து குவிந்திருந்தது. என்னை எல்லோரும் டிவியில் பார்த்துள்ளார்கள். என் நண்பர்களுக்கு பைத்தியம் பிடித்தது போல் ஆகியிருக்கிறது.

“நீ அங்கு என்ன செய்துகொண்டிருக்கிறாய்?”

“ரோம், என்ன நடக்கிறது? நீ ஏன் டிவி யில் தோன்றினாய்?” என்று பல கேள்விகள்.

நான் என் நெருங்கிய நண்பன் ஒருவனுக்கு மட்டும் ரிப்ளை செய்தேன் “நண்பா, நான் இன்று விளையாடுவேனா? என்று தெரியவில்லை. என்ன நடக்கிறது என்று எனக்கும் தெரியவில்லை. ஆனால் டிவி-யை மட்டும் தொடர்ந்து பார்” என்றேன்.

அன்றைய ஆட்டத்தின் 63-ஆவது நிமிடத்தில் என்னை உள்ளே இறக்கிவிட்டார்கள். நான் ஆண்டர்லெக்ட் அணிக்காக விளையாடுவதற்கு மைதானத்துக்குள்  கால் பதித்து ஓடுகிறேன். எனக்கு அப்போது  16 வயதாகி சரியாக 11 நாட்கள் ஆகியிருந்தது.

தாய் அடோல்ஃபின் மற்றும் தந்தை ரோஜருடன் ரொமெலு லுகாகு

நாங்கள் அந்த இறுதிப் போட்டியில் தோற்றுவிட்டோம். ஆனால், நான் காற்றில் மிதந்துக் கொண்டிருந்தேன். நான் என் அம்மாவுக்கும் என் தாத்தாவுக்கும் செய்த சத்தியத்தை நிறைவேற்றியிருந்தேன்.

அடுத்த பெல்ஜியம் லீக் தொடரின்போது, நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். நான் பள்ளிக்கு பெரிய டிராவல் பேக்குடன் தான் செல்வேன். ஏன் என்றால் நேரடியாக பள்ளி முடிந்தவுடன் விமானம் பிடித்து  ஐரோப்பா லீக் போட்டிகளில் விளையாட நான் செல்ல வேண்டும். அந்த வருடம் எங்கள் அணி வெற்றிபெற்றது. சிறந்த ஆப்பிரிக்க வீரருக்கான பட்டியலில் நான் இரண்டாவது இடம் பிடித்தேன்.

எனக்கு இதெல்லாம் நடக்கும் என்பது முன்பே தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அத்தனை ஊடகங்களும் என் மேல் கவனத்தை குவித்தன. அது எனக்கு தேவையில்லாத அழுத்தத்தை கொடுத்தது. மொத்த அணியின் எதிர்பார்ப்பும் என் மேல் திசை திருப்பப்பட்டது. என்ன காரணத்தினாலோ என்னால் தேசிய அணிக்காக சிறப்பாக விளையாட முடியவில்லை.

யோசித்து பாருங்கள், 17 வயது சிறுவனின் தோளில் அணியின் மொத்த பாரமும் தூக்கி வைக்கப்படுகிறது. நான் நன்றாக விளையாடிய போது, நாளிதழ்கள் பெல்ஜியத்தின் ஸ்டிரைக்கர் ரொமேலு லுக்காகு நன்றாக விளையாடினார் என்று தலையங்கம் தீட்டின. நான் நன்றாக விளையாடாத போது, ‘காங்கோவை பூர்வீகமாக கொண்ட’ பெல்ஜியம் ஸ்டிரைக்கர் ரொமேலு லூக்காகு என்று எழுதின.

நான் ஒரு பெல்ஜியக் குடிமகன்.

நாம் எல்லோரும் பெல்ஜியர்கள் இல்லையா?

என் நாட்டில் உள்ள சிலரே நான் நன்றாக விளையாடக் கூடாது என்று ஆசைப்படுகிறார்கள். நான் தோற்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். நான் விளையாடுவதற்கு செல்சி சென்றபோதும், வெஸ்ட் பிரோம்க்கு சென்றபோதும் எல்லோரும் என்னைப் பார்த்து சிரித்தார்கள்.

ஆனால் பரவாயில்லை. இவர்கள் யாரும் என் அம்மா பாலில் தண்ணீர் கலந்துகொண்டிருந்த காலத்தில் என்னோடு இல்லை. என் கஷ்டகாலத்தில் என்னோடு இல்லாதவர்களுக்கு என்னை புரிந்துகொள்வது கடினம்.

வேடிக்கையான விஷயம் என்னவென்றால் நான் சிறுவனாக இருந்தபோது  10 வருடங்களுக்கு  சாம்பியன்ஸ் லீக் போட்டிகளை என்னால் பார்க்கமுடியவில்லை. எங்கள் வீட்டில் டிவி கிடையாது. நான் பள்ளிக்கு வரும்போது எல்லோரும் இறுதிப் போட்டிகளை பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. 2002 ஆம் ஆண்டு மாட்ரிட் அணி லிவர்குசன் அணிக்கு எதிராக விளையாடியபோது எல்லோரும் "வாலி, நீ வாலி ஷாட்டை பார்த்தாயா?..அய்யோ வாலி ஷாட்" என்று பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

ஆனால் எனக்கு தெரியும் என்பது போல காட்டிக்கொண்டேன். இரண்டு வாரங்கள் கழித்துதான் என்  நண்பன் இணையத்தில் ஜிடேன் அடித்த வாலி ஷாட்டை காண்பித்தான். அப்போது நடக்கும் கால்பந்தாட்ட போட்டிகள் எல்லாம் வெறும் கதைகளாக சொல்லி மட்டுமே நான் கேட்டிருக்கிறேன்.

2002ல் ஒரு பெரிய ஓட்டை விழுந்த  ஒரு ஷுவுடன்  விளையாடினேன். 12 வருடங்கள் கழித்து நான் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தேன்.

இப்போது இன்னொரு உலகக்கோப்பை போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கிறேன். நான் குழந்தையாக இருந்தபோது  எனக்கு தியரி ஹென்றி விளையாடுவதை பார்க்கும் அளவுக்கு வசதி இல்லை. ஆனால் இன்று பெல்ஜிய அணியின் வீரரான எனக்கு அவர் துணை பயிற்சியாளர் . ரத்தமும் சதையுமாக அவர் அருகில் நான் நிற்கிறேன். அவரை போலவே சின்ன இடைவெளியில் பந்தை எப்படி எடுத்துச்செல்வது என்று அவர் எனக்கு சொல்லி தருகிறார்.

என்னைவிட அதிகமாக கால்பந்து போட்டிகளை  பார்க்கும் ஒரு நபர் என்றால் அது ஹென்றிதான் என்று நினைக்கின்றேன்.

ஒவ்வொரு போட்டியையும் டிவியில் பார்த்து விட்டு நாங்கள் விவாதம் செய்வோம்.

"தியரி,  ‘போர்டுனா டுசெல்டர்ப்’ போட்டிகளை நீ பார்த்தாயா?" என்று நான் கேட்டால்,  முட்டாளை போல் பேசாதே "நான் எப்படி அதை பார்க்காமலிருப்பேன்?" என்பார் ஹென்றி.

இதுதான் என் வாழ்க்கையின் சந்தோசமான தருணம். இதையெல்லாம் பார்க்க என் தாத்தா இப்போது  இல்லை என்பதை நினைக்கும்போது உண்மையில் வருந்துகிறேன்.

அவர் இருந்தால் நான் அவருடன் மறுபடியும் இப்போது தொலைபேசியில் பேசி இருப்பேன்.

கால்பந்தைப் பற்றி அல்ல.

மென்செஸ்டர் அணியை பற்றி அல்ல.

சாம்பியன்ஸ் லீக்கை பற்றியும் அல்ல.

ஏன் உலகக்கோப்பையைப் பற்றிக்கூட பேசி இருக்க மாட்டேன்.

நான் அவரிடம் சொல்லியிருப்பேன் " பார் தாத்தா. நான் உன்னிடம் சொன்னேன் இல்லையா. உன் மகள் இப்போது நன்றாக உள்ளாள். எங்கள் வீட்டில் இப்போது எலிகள் ஓடுவதில்லை. நாங்கள் தரையில் உறங்குவது இல்லை. எங்களுக்கு இப்போது கவலை இல்லை. நாங்கள் நன்றாக உள்ளோம்...நன்றாக......"

....இப்போது யாருக்கும் என்னுடைய அடையாள அட்டையை காண்பிக்க தேவையில்லை. இப்போது அவர்களுக்கு தெரியும், நான் யார் என்று."

courtesy: www.theplayerstribune.com
First published: July 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...