IPL 2021 : சொந்த மாநில அணிகளுக்காக இதுவரை விளையாடாத 6 வீரர்கள்..

IPL 2021 : சொந்த மாநில அணிகளுக்காக இதுவரை விளையாடாத 6 வீரர்கள்..

ஐ.பி.எல் ஏலம் 2021

சொந்த மாநிலத்தைச் சேர்ந்த ஐ.பி.எல் அணி இருந்தாலும், இதுவரை அந்த அணிக்காக குறிப்பிட்ட சில வீரர்கள் விளையாடியதில்லை. ஐ.பி.எல் அணிக்காக அவர்கள் விளையாடும் நகரத்தை சேர்ந்தவர்கள் என்று பெரும்பாலானோர் கருதி வருகின்றனர்.

  • Share this:
இந்தியாவில் விரைவில் 14-வது ஐ.பி.எல் திருவிழா தொடங்க உள்ளதால், அதற்கான எதிர்பார்ப்பு இப்போதிலிருந்து தொடங்கியுள்ளது. இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களாக இருக்கும் சிலர், வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஐ.பி.எல் போட்டியில் மற்றொரு மாநில அணிக்காக விளையாடி வருகின்றனர். சொந்த மாநிலத்தைச் சேர்ந்த ஐ.பி.எல் அணி இருந்தாலும், இதுவரை அந்த அணிக்காக குறிப்பிட்ட சில வீரர்கள் விளையாடியதில்லை. ஐ.பி.எல் அணிக்காக அவர்கள் விளையாடும் நகரத்தை சேர்ந்தவர்கள் என்று பெரும்பாலானோர் கருதி வருகின்றனர்.

உதாரணமாக, மும்பையைச் சேர்ந்த சச்சின், தொடக்கத்தில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டுமே விளையாடினார். ஆனால், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரசிங் தோனி, ஐ.பி.எல் போட்டி தொடங்கப்பட்டதில் இருந்து சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். இதுபோன்று சில வீரர்கள் சொந்த மாநிலம் அல்லது நகரத்தைச் சேர்ந்த ஐ.பி.எல் அணி இருந்தாலும், அந்த அணிக்காக அவர்கள் இதுவரை விளையாடியதில்லை. அந்தவகையில் சொந்த மாநில அணிக்காக இதுவரை விளையாடாமல் மற்றொரு மாநில ஐ.பி.எல் அணிக்காக விளையாடி வரும் வீரர்கள் யார்? என்பதை பார்க்கலாம்.

ஜஸ்பிரீத் பும்ரா

பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்த ஜஸ்பிரீத் பும்ரா குஜராத்தில் வசித்து வருகிறார். ஐ.பி.எல் போட்டியில் பஞ்சாப் மற்றும் குஜராத் என 2  அணிகள் அவருக்கு சொந்த ஊர் அணிகளாக இருந்தன. இருப்பினும், கடந்த 2012-ம் ஆண்டு முதல் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணியின் நட்சத்திர பவுலராக அவர் இருப்பதால், ரசிகர்கள் பலரும் பும்ரா மும்பையைச் சேர்ந்தவர் என கருதியுள்ளனர்.

ஹர்பஜன் சிங்

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த ஹர்பஜன் சிங், ஐ.பி.எல் போட்டியில் மும்பை அணியின் நட்சத்திர ஸ்பின் பவுலராக இருந்து வந்தார். பின்னர் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர், தோனி தலைமையிலான சென்னை அணியில் விளையாடினார். ஆனால், அவரின் சொந்த மாநில அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் இருந்தும், அந்த அணிக்காக விளையாடும் வாய்ப்பு ஹர்பஜனுக்கு கிடைக்கவில்லை.

ஸ்ரேயாஸ் அய்யர்

மும்பையைச் சேர்ந்த ஸ்ரேயாஸ் அய்யர், 2015 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் போட்டியில் விளையாடி வருகிறார். டெல்லி அணியில் தனது ஐ.பி.எல் வாழ்க்கையை தொடங்கி, அந்த அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இருப்பினும், அவரின் சொந்த நகரைச் சேர்ந்த மும்பை அணிக்காக விளையாடியதில்லை. இவரின் தலைமையிலான டெல்லி அணி சிறப்பாக விளையாடி வருவதால், அந்த அணியில் இருந்து ஸ்ரேயாஸ் வெளியேறவும் வாய்ப்புகள் இல்லை.

விராட் கோலி

இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி, டெல்லியைச் சேர்ந்தவர். ஐ.பி.எல் தொடங்கியதில் இருந்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். அவரின் சொந்த நகரைச் சேர்ந்த ஐ.பி.எல் அணியான டெல்லிக்கு இதுவரை விளையாடியதில்லை.

தீபக் சாஹர்

உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் பிறந்த தீபக் சாஹர், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக தேர்தெடுக்கப்பட்டபோதும், 11 பேர் கொண்ட விளையாடும் அணியில் இடம்பெறவில்லை. தற்போது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

தினேஷ் கார்த்திக்

தமிழக வீரரான தினேஷ் கார்த்திக், ஐ.பி.எல் போட்டியில் 6 வெவ்வேறு அணிகளுக்காக விளையாடியுள்ளார். மும்பை, டெல்லி உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடி இருந்தாலும், சொந்த மண்ணைச் சேர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் வாய்ப்பு அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை. தற்போது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார்.
Published by:Ram Sankar
First published: