18-வது சீனியர் மற்றும் 14-வது ஜூனியர் தேசிய பாரா பவர்லிப்டிங் சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூரில் மார்ச் 19 முதல் 21 ஆம் தேதி வரை ஸ்ரீ கண்டி ரவா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்திலிருந்து பயிற்சியாளர் கணேஷ் தலைமையில் அணி மேலாளர் ஆடவர் பிரிவில் 7 வீரர்களும் மகளிர் பிரிவில் 2 வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.
தமிழகம் சார்பில் 9 வீரர்கள் பங்கேற்றதில் 6 பதக்கங்களை கைப்பற்றி மாற்றுத்திறனாளி வீரர்கள் தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்துள்ளனர். இதில் 59 கிலோ எடைப்பிரிவில் சரவணன் தங்கப்பதக்கம் வென்று சாதனை நிகழ்த்தினார். தமிழக வரலாற்றில் பேரா பவர்லிப்டிங் பிரிவில் தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
50 கிலோ எடை பிரிவில் கோமதிவெள்ளிப் பதக்கமும், 67 கிலோ எடை பிரிவில் கஸ்தூரி வெள்ளிப்பதக்கமும் வென்று வீராங்கனைகளும் சாதனை நிகழ்த்தினர். இதில் தமிழகத்திலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற முதல் வீராங்கனை கஸ்தூரி என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூனியர் பிரிவில் வெங்கடேஷ் பிரசாத் 59 எடை பிரிவில் கலந்து கொண்டு தங்கப்பதக்கத்தை கழுத்தில் ஏந்தினார். ஜூனியர் பிரிவில் தமிழ்நாடு வெல்லும் முதல் தங்கம் என்பதும் கூடுதல் சிறப்பாகும்.
வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள் தமிழக அரசு எங்களை வீரர்களாகவே பார்ப்பதில்லை என கண்ணீர் வடிக்கின்றனர்.
ஆட்டோ ஓட்டி குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, நேரம் கிடைக்கும் போதெல்லம் பயிற்சி மேற்கொண்டு தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்துள்ள எங்களுக்கு உதவித்தொகையோ அல்லது அரசு வேலையோ வழங்கி உதவி செய்ய வேண்டும் என கண்கலங்குகிறார் கஸ்தூரி.
நன்றாக இருப்பவர்கள் விளையாட்டில் சாதித்தால் அவர்களை ஊக்கப்படுத்திகிறீர்கள் இதுவே மாற்றுத்திறனாளி விளையாட்டில் வெற்றி பெற்றால் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.