பிரபல தாதாவின் சகோதரருடன் சுஷில் குமார்... சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்.!

சுஷில் குமார்

இறந்து போன மல்யுத்த வீரர் சாகர் ராணாவிற்கு பாடம் கற்பிக்கவே நினைத்ததாகவும், அவரை கொலை செய்யும் எண்ணம் எனக்கில்லை என்றும் சுஷில் குமார் டெல்லி காவல்துறையினரின் விசாரணையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

  • Share this:
ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார், இளம் மல்யுத்த வீரரின் கொலை வழக்கில் கைதாகி போலீசாரின் விசாரணையில் இருக்கும் நிலையில் தலைமறைவாக இருக்கும் பிரபல தாதா ஒருவரின் சகோதரருடன் சுஷில் குமார் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் டெல்லி காவல்துறையினரால் கடந்த மே 23 அன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 6 நாட்கள் காவலில் எடுத்துள்ள டெல்லி காவல்துறை இளம் மல்யுத்த வீரர் சாகர் ராணா கொலை வழக்கு குறித்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில் பிரபல தாதாவாக விளங்கும் காலா ஜத்தேடி என்பவரின் சகோதரருடன் சுஷில் குமார் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அந்த புகைப்படத்தில் சுஷில் குமாருக்கு அருகில் இருப்பவர் பிரபல தாதா காலா ஜத்தேடியின் சகோதரர் பிரதீப் என்று டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலா ஜத்தேடி மிகவும் பிரபலமான ஒரு தாதா, இவரின் தலைக்கு காவல்துறையினர் 7 லட்ச ரூபாய் பரிசு அறிவித்துள்ள நிலையில் அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் சில வழக்குகளில் காலா ஜத்தேடியின் உறவினர்களுக்கு ஆதரவாக சுஷில் குமார் முன்னர் செயல்பட்டிருப்பதாகவும் தகவல்கள் உள்ளன.

பிரபல தாதாவின் சகோதரருடன் சுஷில் குமார்


“நான் ஒன்றும் நோஞ்சான் கிடையாது, எதிர்காலத்தின் என்னிடம் யாரும் எதிர்காலத்தில் வம்புக்கு வரக்கூடாது என இறந்து போன மல்யுத்த வீரர் சாகர் ராணாவிற்கு பாடம் கற்பிக்கவே நினைத்ததாகவும், அவரை கொலை செய்யும் எண்ணம் எனக்கில்லை என்றும் சுஷில் குமார் டெல்லி காவல்துறையினரின் விசாரணையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சுஷில் கொலை குற்றவாளி ஆனது எப்படி?

சத்ரசால் ஸ்டேடியத்தின் அருகில் சுஷில் குமாருக்கு தொடர்புடைய வீட்டில் இளம் மல்யுத்த வீரர் சாகர் ரானா, சாகர் தன்கத் (தாதா காலா ஜத்தேடியின் உறவினர்) மற்றும் அவரது நண்பர்கள் குடியிருந்துள்ளனர். அவர்களை வீட்டை விட்டு காலி செய்யச் சொல்லியும் காலி செய்யவில்லை என கூறப்படுகிறது.

Read More:   பச்சை நிறத்தில் மாறிய கங்கை நதி: ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

இதனையடுத்து அவர்கள் பலவந்தமாக காலி செய்யவைக்கப்பட்டனர். மேலும் சத்ரசால் ஸ்டேடியத்தில் மற்றவர்கள் முன்னிலையில் சாகர் ரானா சுஷில் குமாரை கெட்ட வார்த்தைகள் சொல்லி திட்டியதாகவும் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று சுஷில் குமாரை, ரானா மிரட்டினார் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மே 4 -5ம் தேதி இடைப்பட்ட இரவில் சத்ரசால் ஸ்டேடியத்தில் இரு மல்யுத்த வீரர்கள் குழுக்களிடையே சண்டை நடந்துள்ளது. இதில் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட பிரச்சினை பெரிதாகியுள்ளது. இந்த சண்டையில் மூன்று பேர் காயமடைந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர், இதில் படுகாயமடைந்த சாகர் ரானா பலியானார். சண்டை நடந்த இடத்தில் சுஷில் குமார் இருந்ததாக தெரியவந்தது.

இதனையடுத்து மே 4ம் தேதி அந்த பிரச்னைக்கு பிறகு சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர் அஜய் ஆகியோர் தலைமறைவாகினர். இதனிடையே சுஷில் குமார் உட்பட 9 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சுஷில் குமார் தாக்குதலில் ஈடுபட்டதற்கான வீடியோ பதிவும் போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

Read More:  நாய் குட்டியை ஹைட்ரஜன் பலூனில் கட்டி பறக்கவிட்ட யூடியூபர் - விபரீத முயற்சியால் போலீசில் சிக்கினார்! வைரல் வீடியோ...

இதனையடுத்து தேடப்படும் குற்றவாளியாக சுஷில் குமாரை டெல்லி போலீஸ் அறிவித்ததுடன், பஞ்சாப், டெல்லி என இரண்டு மாநிலங்களிலும் அவரை தீவிரமாக தேடினர். ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டையும் பிறப்பித்தனர். டெல்லி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த சுஷில் குமாரின் மனு மே 18ம் தேதி நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த சுஷில் குமார் டெல்லி காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார்.
Published by:Arun
First published: