Home /News /sports /

காமன்வெல்த் போட்டியில் 3 பதக்கங்கள் வென்று சாதனை படைத்த தமிழன்

காமன்வெல்த் போட்டியில் 3 பதக்கங்கள் வென்று சாதனை படைத்த தமிழன்

விளையாட்டு வீரர் சத்யன்

விளையாட்டு வீரர் சத்யன்

  • News18
  • 2 minute read
  • Last Updated :
    கோல்டு கோஸ்ட் காமன்வெல்த், டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா பதக்க வேட்டை ஆடியதற்கு இரண்டு தமிழக வீரர்கள் முக்கிய பங்காற்றினர்.  அவர்களில், சத்யன் முதல் முயற்சியிலேயே மூன்று நிற பதக்கங்களை வென்று சாதனை தமிழனாக திகழ்கிறார்.

    ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின், டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியா 3 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கங்களை அள்ளியது. இந்த மூன்று விதமான பதக்கத்திலும் சாதனை தமிழன் சத்யனுடைய பங்களிப்பு அதிகமாகும்.

    25 வயதே ஆன சென்னையை சேர்ந்த சத்யன் தனது 5வது வயதில்,  டேபிள் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தவர் இன்று இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் என சத்யனின் தாயார் நிர்மலா மெய்சிலிர்க்கிறார்.

    ஏற்கனவே நடைபெற்ற 2008 ஆம் ஆண்டு காமன்வெல்த் ஜூனியர் போட்டியிலும் சத்யன் தங்கத்தை கைப்பற்றி சாதனை படைத்திருந்தார். இதனை தொடர்ந்து, டேபிள் டென்னிசில் கோலோச்ச தொடங்கிய சத்யன், கோல்டுகோஸ்ட் காமன்வெல்த்தில், ஆடவர் பிரிவில் தங்கம் வென்றார். தொடர்ந்து, ஆடவருக்கான இரட்டையர் பிரிவில் சரத் கமலுடன் இணைந்து, வெள்ளிப் பதக்கத்தை முத்தமிட்டார். அடுத்ததாக, கலப்பு இரட்டையரில் மானிகாவுடன் கைகோர்த்து வெண்கலப் பதக்கத்தை வசப்படுத்தினார். ஒரே காமன்வெல்த் போட்டியில் 3 பதக்கங்கள் வென்ற தமிழக வீரர் என்ற பெருமையை சரத் கமலுடன் பகிர்ந்துகொண்டார்.

    மேலும் வெற்றிபெற்ற நேரத்தில், தேசிய கீதம் ஒலிக்க, தேசியக்கொடி உயர பறக்கும் தருணம் வாழ்வில் மறக்க முடியாதது என்று சத்யன் நெகிழ்ந்துள்ளார். இந்த பதக்கங்களை தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாகவும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

    தேசிய, சர்வதேச போட்டியில் சத்யன் சாதிப்பதற்கு, டேபிள் டென்னிஸ் மீது கொண்டுள்ள காதல் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் கடைப்பிடிக்கும் ஒழுக்கநெறியே என்று அவரது பயிற்சியாளர் புகழாரம் சூட்டியுள்ளார்.

    20 வயதில்,  சர்வதேச அரங்கில் தனக்கான இடத்தை சத்யன் உறுதி செய்துள்ளார். தரவரிசையில் 100 இடங்களுக்குள் வந்த குறுகிய காலத்திற்குள், 49-வது இடம் பிடித்தும் அசத்தியுள்ளார். பெல்ஜியம், ஸ்பெயின் நாடுகளில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் முத்திரை பதித்துள்ள தமிழக வீரரான சத்யன், எதிர்வரும் காலங்களில் ஒலிம்பிக் போட்டியிலும் சாதனை படைக்க வேண்டும் என்பதே அனைவரின்  எதிர்பார்ப்பாக உள்ளது.

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: CWG 2018

    அடுத்த செய்தி