இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 3 -1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் மூலம் இந்திய அணி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. டெஸ்ட் தொடர் முடிவடைந்த பின்னர் இந்திய வீரர்கள் முற்றிலும் நிதானமான மனநிலையில் இருந்து வருகின்றனர். இதனை நிரூபிக்கும் வகையில் ஷிகர் தவான் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று அமைந்துள்ளது.
ஷிகர் தவான் பகிர்ந்துள்ள வீடியோவில் ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, ரிஷப் பந்த் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். வீடியோவில், நான்கு பேரும் குழந்தைகள் விளையாடும் பகுதியில் தங்களது நேரத்தை செலவிடுகின்றனர். ஷிகர் தவான் மற்றும் குல்தீப் யாதவ் குழந்தைகள் விளையாடும் சைக்கிளை ஓட்டி விளையாடுகின்றனர். ரோகித் மற்றும் ரிஷப் ஆகியோர் பந்துகளை வீசி விளையாடுகின்றனர். இந்திய வீரர்களின் இந்த குறும்புத்தனமான வீடியோவிற்கு இந்திய அணியின் முன்னணி வீரர்கள் உள்பட பலரும் தங்களது கமெண்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
வீடியோவின் கேப்ஷனில் ஷிகர் தவான், ``வாழ்க்கையில் ஆசைகள் வளர்ந்துகொண்டே செல்கின்றன. குழந்தை தனத்தை ஒருபோதும் இழக்கக்கூடாது. வேலை முக்கியமானது. ஆனால், அவற்றை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். வேடிக்கையாக இருக்க வேண்டும். குல்தீப் தன்னுடைய முதல் சைக்கிள் பயணத்தை கற்றுக்கொண்டு இருக்கிறார்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஐந்து டி 20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் ஆகியவை நடைபெற உள்ளன. டி 20 போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெற உள்ளன. ஒரு நாள் போட்டிகள் புனேவில் நடைபெற உள்ளன. இங்கிலாந்து தொடர் முடிவடைந்த பின்னர் ஐ.பி.எல் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர். ஐ.பி.எல் போட்டிகளுக்கான அட்டவணையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியானது. ஐ.பி.எல் போட்டியானது வரும் ஏப்ரல் மாதம் 9-ம் தேதி தொடங்கி மே 30-ம் தேதி முடிவடைய உள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.