• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஷார்ட்ஸ் போட, ஆண்களுடன் விளையாட எதிர்ப்பு... தடைகளை மீறி ஜொலிக்கும் திருநெல்வேலி கபடி வீராங்கணைகள்

ஷார்ட்ஸ் போட, ஆண்களுடன் விளையாட எதிர்ப்பு... தடைகளை மீறி ஜொலிக்கும் திருநெல்வேலி கபடி வீராங்கணைகள்

Youtube Video

ஷார்ட்ஸ் போடுவதற்கு, ஆண்பிள்ளைகளுடன் குழுவாக விளையாடுவதற்கு ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் சிறுமிகளுக்கு கபடி மீது இருந்த காதல், பயிற்சியை தொடர்ந்து கொண்டு சென்றுள்ளது.

  • Share this:
நெல்லை மாவட்டம் ரவணசமுத்திரத்தைச் சேர்ந்த மாணவி செல்வ ரெபிக்ஸா, இந்தியா கபடி அணிக்கு தேர்வாகியுள்ளார். செல்வ ரெபிக்ஸா மட்டுமின்றி அந்த கிராமத்தில் உள்ள சிறுமிகள் பலரும், கபடி விளையாட்டில் மிளிர்ந்து வருகின்றனர்

திருநெல்வேலி அம்பாசமுத்திரம் அருகே உள்ளது ரவணசமுத்திரம். இந்த பகுதியைச் சேர்ந்த சிறுமிகள் சிலர் கபடி விளையாடிக் கொண்டிருக்க, அதனை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த, கபடி விளையாட்டில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் சிலருக்கு, பொறி தட்டியுள்ளது. இந்த சிறுமிகளுக்கு பயிற்சி அளித்தால் வருங்காலத்தில் கபடி போட்டியில் மின்னுவார்கள் என எண்ணிய அவர்கள், அதற்கான முயற்சிகளில் இறங்கினர்.

ஷார்ட்ஸ் போடுவதற்கு, தெருவில் விளையாடுவதற்கு, ஆண்பிள்ளைகளுடன் குழுவாக விளையாடுவதற்கு ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட, சிறுமிகளுக்கு கபடி மீது இருந்த காதல், பயிற்சியை தொடர்ந்து கொண்டு சென்றுள்ளது.

ஒருகட்டத்தில் 22 சிறுமிகள் கபடி போட்டிக்கு ஆர்வம் காட்ட, அனைவரும் ஒரே பள்ளியில் படித்தால் நன்றாக இருக்கும் என நினைத்த பயிற்சியாளர்கள், அனைவரையும் ஒரே பள்ளியில் சேர்க்க முயன்றனர். அப்போது, விகேபுரத்தில் உள்ள ஆண்ட்ருஸ் மெட்ரிக் மேனிலைப்பள்ளி 22 மாணவிகளையும் தங்கள் பள்ளியில் சேர்த்துக் கொண்டதோடு கபடி பயிற்சிக்கும் உதவி வருகிறது.

இந்த குழுவில் பயிற்சி பெற்று வரும் செல்வ ரெபிக்ஸா, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளார். 8-ம் வகுப்பு பயின்று வரும் இவர் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் தகுதி பெற்றதோடு, அண்மையில் சண்டிகரில் நடைபெற்ற போட்டியிலும் வெற்றி பெற்று இந்தியா அணிக்கு தேர்வாகியுள்ளார்.

செல்வ ரெபிக்ஸா மட்டுமின்றி, இதே குழுவில் பயிற்சி பெறும் மேலும் சில சிறுமிகளும் வெற்றிப்படியில் ஏறத்தொடங்கியுள்ளனர். ஞானசெல்வி, சைனிஷ் ஆகிய இரு மாணவிகள், தமிழக அணிக்கு தகுதி பெற்றுள்ளனர். பெண்கள் கபடி அணியை முதலில் எதிர்த்த பால்நெல்சன்தான், மாணவிகளின் ஆர்வத்தை கண்டு தினமும் 2 வேளை முழு மனதுடன் பயிற்சி அளித்து, மாணவிகளை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இந்த குழுவைச் சேர்ந்த சிறுமிகளுக்கு உரிய உதவியும் ஊக்கமும் கிடைத்தால், பல்வேறு வெற்றிகளை குவித்து தமிழகத்திற்கும் நெல்லை மண்ணிற்கும் பெருமை சேர்ப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: