உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் நேரடியாக காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்துள்ள நிலையில் அடுத்த சுற்றுக்கான வாய்ப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். உலகக்கோப்பை ஹாக்கி தொடர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம் மற்றும் ரூர்கேலாவில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் லீக் ஆட்டங்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் காலிறுதி சுற்றுக்கு நேரடியாக முன்னேறி விட்டன.
மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் ஏ,பி,சி,டி என 4 பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற வைக்கப்பட்டுள்ளன. இந்தியா குரூப் டி-யில் உள்ளது. இதில் முதல் போட்டியில் ஸ்பெயின் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற இந்தியா, அடுத்ததாக இங்கிலாந்துடன் நடந்த போட்டியை 2-2 என டிரா செய்தது. இதையடுத்து குரூப்பில் முதலிடத்தை பிடிக்கும் அணிக்காக நடந்த ஆட்டத்தில் வேல்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் இந்தியா வீழ்த்தியது.
குரூப் டி பிரிவில் இந்தியாவும் இங்கிலாந்தும் 2 வெற்றி மற்றும் ஒரு டிரா என சமமாக இருந்தாலும், கோல் கணக்கின் அடிப்படையில் இங்கிலாந்து முதலிடத்தை பிடித்து காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றது. இதையடுத்து கிராஸ் ஓவர் போட்டியில் இந்தியா நாளை நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணியளவில் புவனேஸ்வரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி காலிறுதிக்குள் நுழைந்து பெல்ஜியம் அணியுடன் மோதும். தோல்வி அடையும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் கிளாசிஃபிகேஷன் பிரிவுக்கு சென்று விடும். அந்த வகையில் நாளை நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைய இந்திய அணி கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றி 48 ஆண்டுகள் ஆகின்றன. இந்த வறட்சி இந்த உலகக்கோப்பையில் நீங்குமா என்ற எதிர்பார்ப்பில் இந்திய அணியின் ரசிகர்கள் உள்ளனர். முன்தாக 1975-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த உலகக்கோப்பை ஹாக்கி இறுதியாட்டத்தில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: World Cup Hockey 2023