உலக செஸ் ஒலிம்பியாட் 2022 தமிழ்நாட்டில் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து செஸ் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றிகளைப் பதிவு செய்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த ஒலிம்பியாட் செஸ் போட்டி இந்த ஆண்டு 44 வது முறையாக நடத்தப்படுகிறது. மாஸ்கோவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் உக்ரைன் - ரஷ்யா போரால் போட்டிகளை சென்னையில் நடத்த சர்வதேச செஸ் கூட்டமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு இணைந்து 44 வது உலக செஸ் ஒலிம்பியாட் தொடரை வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த போட்டி ஜூலை 26 ம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ம் தேதி வரை நடைபெறுகிறது. 2013 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிறகு மிகப்பெரிய செஸ் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது.
தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை என சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்தார். உலக சாம்பியன் கார்ல்ஸன் உட்பட உலகின் தலைசிறந்த வீரர்கள் இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில் செஸ் போட்டிக்குரிய முக்கிய இடமாக சென்னை எப்போதும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என விஸ்வநாதன் ஆனந்த் கூறியுள்ளார்:
5 முறை உலக சாம்பியனும், தமிழக செஸ் வீரருமான விஸ்வநாதன் ஆனந்த் தனது ட்விட்டர் பதிவில், ‘சென்னையை செஸ் போட்டியின் மைய களமாக மாற்றியதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி . அகில இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் சென்னை செஸ் சமூகம் உள்ளிட்ட அனைவருக்கும் இது ஒரு பெருமையான தருணம். செஸ் போட்டிக்குரிய முக்கிய இடமாக சென்னை எப்போதும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கான முயற்சிகளை வேகமாக மேற்கொண்ட இந்திய செஸ் சம்மேளனத்துக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.