தொழில்முறை பாக்ஸிங்கில் 12 ஆட்டங்களில் தொடர் வெற்றியை ருசித்து யாராலும் வீழ்த்த முடியாத வீரராக விளங்கும் இந்திய வீரர் விஜேந்தர் சிங் ஒரு ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஆக்ஷனில் இறங்க உள்ளார்.
இந்திய குத்துச்சண்டை வீரரான விஜேந்தர் சிங் (வயது 35) இந்தியாவுக்காக ஒலிம்பிக் உட்பட பல்வேறு முக்கிய போட்டிகளில் பதக்கம் வென்ற வெற்றிகரமான ஒரு குத்துச்சண்டை வீரர். நாட்டுக்காக விளையாடி வந்த விஜேந்தர் சிங் பின்னாளில் அமெச்சூர் (தொழில்முறை) குத்துச்சண்டை வீரராக உருவெடுத்தார்.
பொதுவாக தேசிய அணிக்காக விளையாடியவர்கள் யாரும் தொழில்முறை வீரராக ஜொலித்தது கிடையாது. ஆனால் விஜேந்தர் சிங் அத்தனை ஆருடங்களையும் தவிடு பொடியாக்கினார். இவர் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் தன்னை எதிர்த்த வீரர்களை வீழ்த்தி வெற்றிகரமான வீரராக வலம் வருகிறார். இது வரை அவர் பங்கேற்ற 12 போட்டிகளிலுமே விஜேந்தர் தான் வெற்றியாளர். இதில் 8 போட்டிகளில் எதிராளிகளை நாக் அவுட் செய்திருக்கிறார். தற்போது ஆசிய பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் சாம்பியனாக அவர் வலம் வருகிறார்.

விஜேந்தர் சிங்
கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு நவம்பரில் துபாயில் நடைபெற்ற போட்டியில் கானா நாட்டு வீரர் சார்லஸ் அடாமுவை வீழ்த்தியிருந்தார். அதன் பிறகு கொரோனா பரவல் ஏற்பட்டதையடுத்து போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் விஜேந்தர் மீண்டும் போட்டிகளில் கலந்து கொள்ள இருப்பதாக அவருடைய ஸ்பான்சர் நிறுவனமான IOS Boxing Promotions அறிவித்துள்ளது. இது அவரின் 13வது மோதல் ஆக இருக்கும்.
விஜேந்தர் கலந்து கொள்ளும் போட்டி இந்தியாவில் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் அவரின் போட்டியாளர் யார், போட்டி நடைபெறும் நகரம், நேரம் போன்றவை போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் விஜேந்தருக்கு இது 5வது மோதலாக இருக்கும். முன்னதாக டெல்லி, மும்பை மற்றும் ஜெய்ப்பூர் நகரங்களில் அவர் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.
கடந்த ஒரு மாதமாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள விஜேந்தர் சிங் கூறுகையில், உண்மையில் மீண்டும் களத்திற்கு திரும்புவது குறித்து உற்சாகமாக இருக்கிறேன். போட்டிகளுக்காக கடுமையாக தயாராகி வருகிறேன். எதிராளி யார் என்பது குறித்து கவலை இல்லை எனது வெற்றியை தொடர்வதில் உறுதியாக உள்ளேன் என தெரிவித்தார்.