உலகின் அதி வேக மனிதர் உசேன் போல்ட்டின் பங்கு முதலீட்டுப் பணத்திலிருந்து சுமார் 98 கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டிருப்பது அம்பலமாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வாடிக்கையாளர்களின் முதலீட்டில் மோசடி செய்தது தொடர்பான கதையைத்தான் பேசியது துணிவு. இப்போது அதே சம்பவம் பிரபல விளையாட்டு வீரர் உசைன் போல்டுக்கு நடந்துள்ளது.
உலகின் அதிவேக மனிதர் என்றதும் நியாபகத்துக்கு வருபவர் உசேன் போல்ட்தான். சொல்லி வைத்தாற்போன்று 100 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் வென்று பதக்கங்களை குவிப்பது இவருக்கு கைவந்த கலை. ஜமைக்கா தடகள வீரரான இவரது ஒலிம்பிக் சாதனைகளை இதுவரை யாரும் நெருங்கவில்லை என்பது வரலாறு.
இங்கிலாந்து நாட்டின் கிங்ஸ்டனை தலைமையிடமாகக் கொண்ட பங்கு மற்றும் பங்குபத்திரங்கள் நிறுவனத்தில் உசேன் போல்ட் முதலீடு செய்திருந்தார். அவரது கணக்கிலிருந்து 12 மில்லியன் டாலர் திடீரென மாயமாகி இருப்பது தெரியவந்து அதிர்ச்சியடைந்தார். இது இந்திய மதிப்பில் சுமார் 98 கோடி ரூபாய் ஆகும். தற்போது அவரது கணக்கில் வெறும் 12 ஆயிரம் டாலர்கள் மட்டுமே உள்ளன.
உசேன் போல்ட்டின் சேமிப்புத் தொகையில் ஏறக்குறைய பெரும்பகுதி இந்த மோசடியில் பறிபோயுள்ளதாக அவரது வழக்கறிஞர் குற்றம்சாட்டியுள்ளார். உசேனின் பணத்திற்கு அந்த பங்கு நிறுவனமே பொறுப்பு என்றும், பணத்தை மீட்டுத் தராவிட்டால் வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாகவே போல்டின் முதலீடுகளை இந்த நிறுவனம் தான் கவனித்து வருகிறது. இந்த மோசடிக்குப் பின் போல்ட்டின் அனைத்து முதலீடுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் தங்கள் ஊழியர் ஒருவரிடம் அந்த நிறுவனமும் விசாரணை செய்து வருகிறது. அந்த நபர் தான் இந்த மோசடிக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. போல்ட் மட்டுமின்றி பலரது முதலீடுகள் இப்படி மாயமாகியிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த ஊழியர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை அளித்து வருவதாகவும் வரும் நாட்களில் இது குறித்து மேலும் சில தகவல்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Athlete, Crime News, Scam, Usain Bolt