Tokyo Olympics | சபாஷ் இந்தியா! ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதியில் நுழைவு- 41 ஆண்டுகால காத்திருப்புக்குப் பின் பதக்க வாய்ப்பு

49 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்திய ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி!

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டிக் காலிறுதியில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டிக் காலிறுதியில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

    41 ஆண்டுகள் காத்திருக்குப் பின் ஒலிம்பிக் ஹாக்கி ஆடவர் பிரிவில் பதக்கச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி.

    இன்று டோக்கியோவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் கிரேட் பிரிட்டனை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றில் வலுவான பெல்ஜியம் அணியை சந்திக்கிறது இந்திய ஆடவர் ஹாக்கி அணி.

    இந்த ஆட்டத்தில் கிரேட் பிரிட்டன் முதலில் அச்சுறுத்தியது. கிரேட் பிரிட்டன் ஆதிக்கம் என்ற ஆட்டத்தின் போக்குக்கு எதிராக இந்திய அணி 7வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை பெற்றது. டி சர்க்கிளுக்கு அருகில் பிரிட்டன் கோலுக்கு நெருக்கமாக சிம்ரன் ஜித் சிங் பந்தை பிரிட்டனிடமிருந்து வென்றெடுத்து தில்பிரீத் சிங்குக்கு அனுப்ப அவர் கோலுக்கு நெருக்கமான நிலையிலிருந்து கோலுக்குள் திணித்தார், இந்தியா 1-0 என்று முன்னிலை பெற்றது.

    உடனேயே பிரிட்டன் ஒரு கோல் அடித்து சமன் செய்திருக்கும் ஆனால் மகா கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஒரு அருமையான தடுப்பை நிகழ்த்தினார். இரண்டாவது கால் மணி நேர ஆட்டம் தொடங்கியவுடனேயே ஹர்திக் சிங் பந்தை எடுத்து குர்ஜந்த் சிங்கிடம் அடிக்க அவர் அதை தன் மார்க்கருக்கு போக்குக் காட்டி பிரிட்டன் கோல் கீப்பர் ஆலி பெய்னைத் தாண்டி கோலாக மாற்றினார். 16வது நிமிடத்தில் இந்திய அணி 2-0 என்று முன்னிலை பெற்றது.

    3வது கால் மணி நேர ஆட்டத்தில் பிரிட்டன் வெளுத்து வாங்கினர், தாக்குதல் ஆட்டத்தில் இறங்க இந்தியர்கள் ஏகப்பட்ட தடுப்புகளை நிகழ்த்தினர். ஆனால் 2 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை பிரிட்டன் கோலாக மாற்றாமல் கோட்டை விட்டது. கடைசியில் 45வது நிமிடத்தில்தான் பிரிட்டன் வீரர் வார்டு கோல் அடித்தார். 2-1 என்று ஆட்டம் பரபரப்பானது.

    கடைசி 15 நிமிட நேர ஆட்டம் நகத்தைக் கடித்து துப்பிக்கொண்டே இருக்கும் நேரமாக அமைந்தது. 1 கோல் முன்னிலை எப்போது வேண்டுமானாலும் காலியாகலாம் என்ற நிலையில் பிரிட்டன் தாக்குதல் ஆட்டத்தில் நெருக்கியது.

    ஆனால் இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் உலகின் தலைசிறந்த ஹாக்கி கோல் கீப்பர் என்பதற்கு இணங்க தடுப்புகளை சரமாரியாக நிகழ்த்தினார். ஆட்டம் முடிய 6 நிமிடங்கள் இருந்த போது இந்திய கேப்டன் மன்பிரீத் சிங் மஞ்சள் அட்டை வாங்கி உட்கார்ந்தார். இந்த சாதகத்தையும் பிரிட்டன் சரியாகப் பயன்படுத்தவில்லை. மாறாக இந்திய அணியின் ஹர்திக் சிங் 57வது நிமிடத்தில் இந்தியாவின் 3வது கோலை அடித்தார்.

    ஹர்திக் சிங் தன்னந்தனியாக பந்தை எடுத்துச் சென்றார். கடைந்து எடுத்துச் சென்று பிரிட்டன் கோல் பகுதிக்குள் ஊடுருவினார். அடித்த ஷாட்டை கோல் கீப்பர் தடுக்க பட்டுத் திரும்பிய பந்தை கோலாக மாற்றினார். இந்தியா 3-1 என்று முன்னிலை பெற்றது.

    இந்திய ஹாக்கியின் ஒலிம்பிக் வீர தீர பிரதாபங்களை மீண்டும் கொண்டு வரும் முயற்சியில் அபாரமாக ஆடியது இந்திய ஹாக்கி அணி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அரையிறுதியில் 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கம் வென்ற அணியும் உலக சாம்பியனுமான பெல்ஜியம் அணியை இந்திய அணி சந்திக்கிறது. பெல்ஜியம் அணி தங்கள் காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயினை 3-1 என்று வீழ்த்தியது.

    இந்தியா-பெல்ஜியம் ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதி ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெறுகிறது.
    Published by:Muthukumar
    First published: