ஹாக்கிதான் இந்தியாவின் தேசிய விளையாட்டு, இதற்கு மத்திய அரசாங்கம் செய்ததை விட ஒடிசா அரசாங்கம் குறிப்பாக முதல்வர் நவீன் பட்னாயக் செய்த பங்களிப்பு அளப்பரியது, நவீன் பட்னாயக்கே பள்ளி நாட்களில் ஹாக்கி கோல் கீப்ப்ராக இருந்தவர்தான்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக்கின் அழியாத ஹாக்கி வேட்கை:
ஆனால் அதுதான் உண்மை. இந்திய ஹாக்கி வீரர்கள் அனைவருக்கும் நன்கு பரிச்சயமானவர்தான் நவீன் பட்னாயக், ஒடிசா தேசிய மட்டத்தில் பல வீரர்களை உருவாக்கியுள்ளது. நல்ல உள்கட்டமைப்பு வசதி, இந்திய ஹாக்கி அணிக்கு ஸ்பான்சர்களைப் பிடித்து தருவது என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக் இல்லாமல் இந்திய ஹாக்கி எழுச்சி இல்லை என்றே கூற வேண்டும். 2018-ல் பட்னாயக்கின் ஹாக்கி தொலைநோக்குப் பார்வை தொடங்கியது.
ஒடிசா அரசும் இந்திய ஹாக்கி அணியும் ஓர் ஒப்பந்தத்துக்குள் வந்ததே ஒரு சுவாரஸ்யக் கதை தான். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பள்ளி பயின்றபோது ஹாக்கி அணியில் கோல் கீப்பராக இருந்துள்ளார். பல ஆண்டுகளாகியும் அவருக்குள் ஹாக்கி வேட்கை அழியாமல் உயிர்ப்புடன் இருந்துள்ளது. அதன் காரணமாகவே தற்போது அவர் தலைமையிலான ஒடிசா அரசு ஹாக்கி அணியின் ஸ்பான்சராக மாறியது.
2018 ஆம் ஆண்டு இந்திய ஹாக்கி அணிக்கு ஸ்பான்சராக இருந்துவந்த சஹாரா நிறுவனம் தனது ஸ்பான்சர்ஷிப்பை திரும்பப் பெற்றது. வேறு யாரும் ஸ்பான்சர்ஷிப்புக்கு முன்வரவும் இல்லை. கிரிக்கெட் என்றால் செல்வம் கொழிக்கும் விளையாட்டு, ஹாக்கி ஏழை விளையாட்டாகவே இருந்தது.
அப்போது தான் ஒடிசா அரசு தலையிட்டது. ஹாக்கி இந்தியாவுடன் ரூ.100 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி அணிக்கு ஸ்பான்சராக இருக்க முடிவு செய்தது.
டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்னதாக, இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரீஜேஷ், ஒடிசாவை தனது அணியின் இரண்டாவது வீடு என்று குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது.
2014ல் சாம்பியன்ஸ் ட்ராஃபி ஹாக்கிப் போட்டியை நடத்தி நவீன் பட்நாயக் அரசு தனது உதவிக்கரத்தை முதன்முதலில் நீட்டியது. 2017 ஆம் ஆண்டு கலிங்கா லேன்சர்ஸ் க்ளப் போட்டியை ஒடிசா அரசு ஏற்று நடத்தியது. 2018 ஆம் ஆண்டு ஹாக்கி வேர்ல்டு லீக் போட்டியை நடத்தியது.
2020 ஆம் ஆண்டு FIH (சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு) ஆடவர் போட்டி இறுதிச்சுற்று, ஒலிம்பிக் ஹாக்கி தகுதிப்போட்டி 2019, எஃப்ஐஎச் ப்ரோ லீக் 2020 ஆகிய போட்டிகளையும் நவீன் பட்நாயக் அரசு முன்நின்று நடத்தியது. வரும் 2023 ஆம் ஆண்டு வரை இந்திய ஹாக்கி அணியுடனான நவீன் பட்நாயக் அரசின் தொடர்பு நீடிக்கும். அந்த ஆண்டு இந்தியா, FIH (சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு) உலகக் கோப்பை போட்டியை நடத்தவிருக்கிறது. ஒடிசாவிலிருந்து பிரேந்திர லக்ரா, தீப் கிரேஸ் எக்கா போன்ற சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை இந்திய அணியில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
உள்கட்டமைப்பு வசதிக்காக 89 பன்னோக்கு விளையாட்டு ஸ்டேடியம் ஒன்றை கட்டி வருகிறது முதல்வர் நவீன் பட்னாயக் அரசு. 18 மாதங்களில் இது ரெடி. இதன் மூலம் இந்த மாநிலத்தில் ஸ்போர்ட்ஸ் கொடிக்கட்டிப் பறக்கவிருக்கிறது.
ஒடிசாவின் இந்திய ஹாக்கி கிராமம் சவுனமாரா: இந்தியாவின் ஹாக்கி தொட்டில்
இந்திய ஹாக்கியின் புதிய தாய்வீடாக மாறியுள்ளது ஒடிசா. சுந்தர்கார் பகுதிதான் இதன் மையம். இதனை இந்தியாவின் ஹாக்கி தொட்டில் என்றே அழைக்கலாம். இங்கிருந்து 5 இந்திய ஹாக்கி கேப்டன்களும் 60 சர்வதேச வீரர்களும் உருவாகியுள்ளனர்.
திலிப் திர்கே, இக்னேஸ் திர்கே, லாசரஸ் பார்லா, ஜோதி சுனிதா குல்லு, சுனிதா லக்ரா போன்ற சிறந்த ஹாக்கி வீரர்கள் இங்கிருந்துதான் உருவானார்கள். தற்போதைய ஹாக்கி அணியில் மகளிர் பிரிவில் தீப் கிரேஸ் எக்கா இந்த சுந்தர்கரிலிருந்து உருவானவர்தான். ஆடவர் ஹாக்கியில் அமித் லோகிதாஸ், பிரேந்திர லக்கா இங்கிருந்துதான் வந்தார்கள். சுந்தர்காரில் 3 ஹாக்கி அகாடமிகள் உள்ளன. மாவட்டத்தில் 17 இடங்களில் சிந்தடிக் தரையை அமைத்து ஹாக்கி பயிற்சி தரவுள்ளது.
இந்த சுந்தர்கார் மாவட்டத்தில் உள்ள சவுனமாரா என்ற கிராமம் ஹாக்கி கிராமம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கு பரம்பரை பரம்பரையாக ஹாக்கி விளையாடப்படுகிறது. லெஜண்ட் திலிப் திர்கே இங்கிருந்து வந்தவர்தான். பிகாஷ் தோப்போ, பிபின் கெர்கெட்டா, சுபத்ரா பிரதான், தீப்சன் திர்கே, ரோகிதாஸ் ஆகியோரும் இந்த கிராமத்திலிருந்து எழுச்சி பெற்றவர்கள்தான்.
சுந்தர்கர் மாவட்டம் ரூர்கேலாவில் உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி ஸ்டேடியம்:
சுந்தர்கர் மாவட்டம் ரூர்கேலாவில் உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி ஸ்டேடியம் கட்டப்பட்டு வருகிறது.. ரூர்கேலாவில் உள்ள பிஜு பட்னாயக் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் 15 ஏக்கர் நிலத்தில் இது கட்டப்படுகிறது. இது பழங்குடியினத்தைச் சேர்ந்த பிர்சா முண்டா ஸ்டேடியம் என்று பெயரிடப்படவுள்ளது. இதன் செலவு 120 கோடியாகும்.
இந்தியாவில் இது பெரிய ஸ்டேடியம் ஆகும். 20,000 பேர் அமர்ந்து ஹாக்கிப் போட்டிகளை ரசிக்கலாம். 2023 ஹாக்கி உலகக்கோப்பைக்கு இது தயாராகி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hockey, Naveen Patnaik, Tokyo Olympics