Home /News /sports /

டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னன் ரோஜர் ஃபெடரர் ஓய்வு..!

டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னன் ரோஜர் ஃபெடரர் ஓய்வு..!

ரோஜர் ஃபெடர்

ரோஜர் ஃபெடர்

ஏஸ் சர்வீஸ்கள் மூலம் எதிராளிகளை நிலைகுலையச் செய்யும் ஃபெடரர், 1998-ம் ஆண்டு விம்பிள்டன் ஜூனியர் பிரிவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் மகுடம் சூடி, டென்னிஸ் உலகின் இளவரசரானார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India
  டென்னிஸ் உலகில் கால் நூற்றாண்டாக முடிசூடா மன்னனாக கோலோச்சி வந்த, ஸ்விஸ் மேஸ்ட்ரோ ரோஜர் ஃபெடர், சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

  டென்னிஸ் விளையாட்டு வீரர்களுள் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரருக்கு என்று ஒரு தனியிடம் உண்டு. ஆட்டத்தில் ஆக்ரோஷம் இருந்தாலும் அதில் நளினமும் இழைந்தோடும். எல்லாவற்றுக்கும் மேல் அனைத்துத் தரப்பு ரசிகர்கள் மட்டுமின்றி சக வீரர்களே விரும்பும் ஜென்டில்மேனாக போற்றப்படுபவர். 24 ஆண்டுகளுக்கு முன்பு தொழில்முறை டென்னிஸ் போட்டியில் களம் கண்டு, இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் உட்பட மொத்தம் 103 ATP பட்டங்களை முத்தமிட்டு வரலாறு படைத்தவர்.

  அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பீட் சாம்ப்ராசின் சாதனையை முறியடித்ததுடன் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் என்ற பெருமையையும் பெற்றவர். காயம் காரணமாக ஆடாததால் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

  தனது ஏஸ் சர்வீஸ்கள் மூலம் எதிராளிகளை நிலைகுலையச் செய்யும் ஃபெடரர், 1998-ம் ஆண்டு விம்பிள்டன் ஜூனியர் பிரிவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் மகுடம் சூடி, டென்னிஸ் உலகின் இளவரசரானார்.

  Also Read: பிஞ்ச் ஓய்வால் கேப்டனாகிறார் டேவிட் வார்னர்: தடையை நீக்க கோரிக்கை

  2001 விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில், நான்காவது சுற்றில் பீட் சாம்ராஸை வீழ்த்தி, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார் ரோஜர் ஃபெடரர். டென்னிஸ் உலகில் ஆதிக்கம் செலுத்திய ஆண்ட்ரே அகாசி (Andre Agassi), பீட் சாம்பராஸ் (Pete Sampras), ஜிம் கூரியர் போன்ற ஜாம்பவான்களுக்கு மத்தியில், சத்தமின்றி தடம் பதித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

  ரோஜர் ஃபெடரர்


  தனது 21-வது வயதில், 2003 விம்பிள்டன் டென்னிசில் பட்டம் வென்று, கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முத்திரை பதிக்க தொடங்கினார். மேலும், 2004, 2006, 2007-ம் ஆண்டுகளில் பிரெஞ்சு ஓபன் தவிர்த்து, எஞ்சிய 3 கிராண்ட்ஸ்லாம் கோப்பைகளையும் முத்தமிட்டு, டென்னிசில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டினார். தொடர்ந்து 3 முறை பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த போதும், 2009-ல் நான்காவது முயற்சியில் களிமண் தரையிலும் முத்திரை பதித்தார்,

   

  டென்னிஸ் உலகின் மும்மூர்த்திகளாக வர்ணிக்கப்படும் ஃபெடரர், நடால் மற்றும் ஜோகோவிச் ஆகியோரே பெரும்பாலும் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை சூடி வந்துள்ளனர். 2019-ம் ஆண்டுக்குப் பின் தொடர்ந்து காயம் ஏற்பட்டதால் சறுக்கலை சந்தித்தார் ஃபெடரர். கடைசியாக, 2021 விம்பிள்டன் காலிறுதியில் போலந்து வீரர் ஹூபர்ட் ஹர்காஸ் இடம், நேர்செட்களில் தோல்வியைத் தழுவி ஏமாற்றம் அளித்தார்.

   

  பின்னர், டென்னிஸ் போட்டியில் களம் காணாமல் இருந்த பெடரர் தற்போது சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காயத்தில் இருந்து மீண்டும் களம் காண கடுமையாக முயற்சி செய்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், தனது உடல் நிலை ஒத்துழைக்காததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது 41 வயதாகும் நிலையில், கடந்த 24 ஆண்டுகளில் 1,500-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியதை சுட்டிக்காட்டினார். இதில், கனவு கண்டதை விட டென்னிசில் ஏராளமான சாதனைகள் நிகழ்த்தியுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

  வருகின்ற 23-ம் தேதி ஐரோப்பா மற்றும் இதர உலக நாடுகளை கொண்ட இரு அணிகள் மோதும் லேவர் கோப்பை டென்னிஸ் போட்டி, லண்டனில் நடைபெறுகிறது. இதில், ஐரோப்பிய அணிக்காக களம் காணுவதே ரோஜர் பெடரரின் கடைசி போட்டியாகும். களத்தில் இருந்து காணாமல் போனாலும் காலத்தால் அழிக்க முடியாத வரலாற்று நாயகன் ரோஜர் பெடரர்.
  Published by:Ramprasath H
  First published:

  அடுத்த செய்தி