Sushil Kumar | சுஷில் குமாரைத் தூக்கில் போடுங்கள்: சாகர் ராணா பெற்றோர்

சுஷில் குமார்

சாகார் ராணா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாரை தூக்கில் போட வேண்டும் என்று சாகர் ராணாவின் பெற்றோர் கூறியுள்ளனர். 

  • Share this:
    முன்னாள் ஜூனியர் சாம்பியன் சாகர் ராணா (வயது 23) கொலை வழக்கு தொடர்பாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுஷில் குமார் மற்றும் அவருடைய நண்பரை டெல்லியின் முந்த்கா எனும் பகுதியில் வைத்து டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது.

    இதனையடுத்து சாகர் ராணா பெற்றோர், சுஷில் குமார் தன் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி கேசை ஒன்றுமில்லாமல் செய்து விடுவார் என்று ஐயம் தெரிவித்தனர்.

    சாகர் ராணாவின் தந்தை போலீஸ் விசாரணையில் அரசியல் தாக்கம் செலுத்த முடியும் எனவே கோர்ட்டின் தனிப்பட்ட விசாரணையும் தேவை என்று கூறியுள்ளார்.

    சாகர் ராணாவின் தாயார், சுஷில் குமாரை பயிற்சியாளர், அறிவுரையாளர் என்று இனி யாரும் அழைக்கக் கூடாது. இதற்கு சுஷில் குமாருக்குத் தகுதியில்லை என்று சாடியுள்ளார்.

    சுஷில் குமார் மற்றும் இவரது நண்பர் அஜய் ஆகியோர் 6 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லி போலீஸ் கிரைம் பிராஞ்ச் இந்த விசாரணையை கையிலெடுத்துள்ளது

    சாகார் ராணாவின் பெற்றோர் கூறும்போது, “என் மகனைக் கொன்றவரை ‘நம்பிக்கை அறிவுரையாளர்’ என்றெல்லாம் அழைக்காதீர்கள், அவருக்கு அந்தத் தகுதி இல்லை. அவர் வென்ற பதக்கங்களை பறிக்க வேண்டும். போலீஸ் முறையாக விசாரிப்பார்கள் என்று கருதுகிறேன், ஆனால் சுஷில் தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தப் பார்ப்பார்” என்றார்.

    சாகர் ராணாவின் தந்தை அசோக் பேகாம்பூர் போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக இருக்கிறார். “அவர் தலைமறைவாக எங்கு சென்றார், அவருக்கு அடைக்கலம் கொடுத்தது யார்? முக்கியமாக அவருக்கும் தாதாக்களுக்கும் உள்ள தொடர்பு கண்டுப்பிடிக்கப்பட வேண்டும், அவர் தூக்கிலிடப்பட வேண்டும் அப்போதுதான் கொலை செய்யும் எண்ணம் யாருக்கும் வராது” என்றார்.

    இதற்கிடையே கொல்லப்பட்ட சாகர் ராணாவின் தாய் மாமன், “சாகர் இறப்புக்கு ஹரியாணா பாஜக அரசு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை” என்று ஆதங்கப்பட்டார்.

    நடந்தது என்ன?

    சத்ரசால் ஸ்டேடியத்தின் அருகில் சுஷில் குமாருக்கு தொடர்புடைய வீட்டில் இளம் மல்யுத்த வீரர் சாகர் ரானா மற்றும் அவரது நண்பர்கள் குடியிருந்துள்ளனர். அவர்களை வீட்டை விட்டு காலி செய்யச் சொல்லியும் காலி செய்யவில்லை என கூறப்படுகிறது, இதனையடுத்து அவர்கள் பலவந்தமாக காலி செய்யவைக்கப்பட்டனர். மேலும் சத்ரசால் ஸ்டேடியத்தில் மற்றவர்கள் முன்னிலையில் சாகர் ரானா சுஷில் குமாரை கெட்ட வார்த்தைகள் சொல்லி திட்டியதாகவும் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று சுஷில் குமாரை, ரானா மிரட்டினார் எனவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் மே 4 -5ம் தேதி இடைப்பட்ட இரவில் சத்ரசால் ஸ்டேடியத்தில் இரு மல்யுத்த வீரர்கள் குழுக்களிடையே சண்டை நடந்துள்ளது. இதில் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட பிரச்சினை பெரிதாகியுள்ளது. இந்த சண்டையில் மூன்று பேர் காயமடைந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர், இதில் படுகாயமடைந்த சாகர் ரானா பலியானார்.
    Published by:Muthukumar
    First published: