முகப்பு /செய்தி /விளையாட்டு / ஒலிம்பிக் ஜோதி ஏந்திய வீராங்கனை இப்போது தேயிலை தோட்டத்தில் தினக்கூலி: பிங்கி கர்மாகரின் வேதனை

ஒலிம்பிக் ஜோதி ஏந்திய வீராங்கனை இப்போது தேயிலை தோட்டத்தில் தினக்கூலி: பிங்கி கர்மாகரின் வேதனை

2012 லண்டன் ஒலிம்பிக்ஸில் ஜோதியை ஏந்திய பிங்கி கர்மாகர்

2012 லண்டன் ஒலிம்பிக்ஸில் ஜோதியை ஏந்திய பிங்கி கர்மாகர்

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் 2012ம் ஆண்டு இந்தியாவுக்காக ஒலிம்பிக் ஜோதியை ஏந்திய அசாம் வீராங்கனை பிங்கி கர்மாகர் இன்று தேயிலைத் தோட்டத்தில் ரூ.205 தினக்கூலிக்காக வேலை செய்து வருகிறார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் 2012ம் ஆண்டு இந்தியாவுக்காக ஒலிம்பிக் ஜோதியை ஏந்திய அசாம் வீராங்கனை பிங்கி கர்மாகர் இன்று தேயிலைத் தோட்டத்தில் ரூ.205 தினக்கூலிக்காக வேலை செய்து வருகிறார்.

இந்திய ஒலிம்பிக் கமிட்டியும் தனக்கு உதவவில்லை, அரசும் உதவவில்லை என்கிறார் பிங்கி கர்மாகர். லண்டன் ஒலிம்பிக்கில் டார்ச் ஏந்துவதற்காக தேர்வு செய்யப்பட்ட, சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்த வீராங்கனை அம்போவென இப்போது கூலி வேலைக்கு விடப்பட்டுள்ளது வேறு எங்காவது நடக்குமா என்று ஆர்வலர்கள் கொந்தளித்துள்ளனர்.

அசாமின் மிகவும் பின் தங்கிய திப்ருகார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிங்கி கர்மாகர், இந்த திப்ருகாரிலிருந்துதான் பலர் தற்போது தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வேலைக்கு வருகின்றனர், தாம்பரத்திலிருந்து திப்ருகாருக்கு சிறப்பு ரயில் ஒன்றும் இயக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. லண்டன் ஒலிம்பிக்சிற்கு பிறகு இந்தியா வந்த போது அப்போது 17 வயதாக இருந்த பிங்கி கர்மாகருக்கு மேள தாள, சிகப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இடது புறத்திலிருந்து 3வதாக இருக்கும் பிங்கி கர்மாகர், ஏதோ ஒரு மகிழ்ச்சித் தருணம்

மத்திய அமைச்சரும் முன்னாள் அசாம் முதல்வருமான சர்பானந்த சோனோவால் பிங்கி கர்மாகரை வரவேற்க விமான நிலையத்திற்கே சென்றார்.

ஆனால் அதன் பிறகு 2 ஒலிம்பிக் போட்டிகள் நடந்து விட்டன, ஆனால் பிங்கி கர்மாகர் தன் திப்ருகார் மாவட்டத்தின் பார்பூரா டீ எஸ்டேட்டில் ரூ.167 தினக்கூலிக்கு வேலைக்குச் சேர்ந்தார், இன்று திருத்தப்பட்ட கூலியாக ரூ.205 பெறுகிறார்.

தாயின் மரணத்துக்குப் பிறகு குடும்ப பாரத்தை ஏற்ற கர்மாகர் வயதான தந்தை இரண்டு தம்பிகள் மற்றும் 2 தங்கைகளின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக திகழ்கிறார்.

சமூகத் தீமைகளான குடி மற்றும் குழந்தை திருமணத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர் கர்மாகர்.

“இப்போது நான் பார்பூரா டீ எஸ்டேட்டில் கூலி வேலை செய்து வருகிறேன், இப்போது பட்டப்படிப்பும் படிக்கிறேன். அரசிடமிருந்தோ மற்றவர்களிடமிருந்தோ ஒரு உதவியும் இல்லை. இது என்னை பெரிதும் காயப்படுத்தி வருகிறது.

ஒலிம்பிக் ஜோதி ஏந்தியவர்களுக்கு தினசரி ஏதோ பணம் தருவதாகக் கேள்விப்பட்டேன். ஆனால் எனக்கு எதுவும் கிடைக்கவில்லை 9-10 ஆண்டுகளாக துயரத்தில் வாழ்க்கையை ஓட்டி வருகிறேன்.” என்றார்.

ஒலிம்பிக் ஜோதியை ஏந்தியதையடுத்து இவரது சமூகத்தினரே பெருமை அடைந்தனர், திப்ருகர் மாவட்டமே பெருமை அடைந்தது. ஆனால் இன்று முதல் சாப்பாடே தினசரி மாலை 4 மணிக்கு எடுக்கும் அவல நிலையில் அவரை நாடு வைத்துள்ளது.

இங்கிருந்துதான் வில்வித்தையில் பெரிய வீரராக உருவாக வேண்டும் என்று கனவு கண்டார் பிங்கி. இன்று சோகத்திலும் துயரத்திலும் கூட படிக்காதவர்களுக்காக இரவுப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார் பிங்கி கர்மாகர். லண்டன் ஒலிம்பிக் டார்ச் ஏந்திய நினைவுகளுடனேயே சமூக நல செயல்களை செய்து வருகிறார் பிங்கி கர்மாகர்.

“நான் பட்டப்படிப்பு படிக்கிறேன், நிதி நிலைமைகளால் அதிலும் தடை ஏற்பட்டது. எந்த ஒரு தரப்பிலிருந்தும் எனக்கு உதவியில்லை. சில சமயங்களில் அசாம் தேயிலை சமூகத்திலிருந்து வந்ததுதான் என் நிலைமைக்குக் காரணமோ என்று கூட நினைக்கிறேன்.

நான் இருக்கிறேனா செத்தேனா என்று கூட கண்டு கொள்ள ஆளில்லை. மக்களும் என் வேதனையை குறைப்பதாக இல்லை, எப்போதும் என்ன ஆச்சு என்று கேட்டுக் கொண்டே இருக்கின்றனர். நாட்டுக்காக என்னவோ செய்தாய் ஆனால் உனக்கு ஒன்றும் வரவில்லை என்று என்னிடம் ஆதங்கப்படுகின்றனர். என் வாழ்க்கையில் என்ன செய்வது என்பதே எனக்கு உறுதியாக்த் தெரியவில்லை.” என்றார்.

தற்போது வெண்கலம் வென்ற குத்துச் சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் பற்றி பெருமையாகக் கூறும்போது பிங்கி கர்மாகர், “லவ்லினாவுக்காக மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டை, மாநிலத்தை, எங்களை பெருமையடையச் செய்துள்ளார். ஆனால் எந்த ஒரு விளையாட்டு வீரருக்கும் என் நிலைமை ஏற்பட்டு விடக்கூடாது” என்றார் வேதனையுடன் பிங்கி கர்மாகர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பல ஆண்டுகளின் காயம் கீறப்படும்போது நிச்சயம் வலி இருக்கத்தானே செய்யும்.. ஆனால் மருந்தளிக்கப் போவது யார்?

First published:

Tags: Olympic 2020, Tokyo Olympics