Tokyo Olympics: ஒலிம்பிக்கில் திரும்பி பார்க்கவைத்த வெற்றிகளும் அதிர்ச்சியளித்த தோல்விகளும்!

ஒலிம்பிக்ஸ்

டோக்யோ ஒலிம்பிக் தீபம் ஏற்றியவரும், உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான நயோமி ஒசாகா, சொந்த மண்ணிலேயே 3வது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.

 • Share this:
  ஒலிம்பிக் போட்டிகளில் பல முக்கிய வீரர்களும், அணிகளும் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறி வருவது, விளையாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

  ஒலிம்பிக் போட்டி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது உலகின் அதிவேக மனிதர் என்ற பெருமையைப் பெற்றுத் தரும் 100 மீட்டர் ஓட்டப்போட்டிதான். குறுகிய தூர போட்டிகளில் முடிசூடா மன்னனாகவும் சகாப்தமாகவும் விளங்கிய ஜமைக்காவின் உசைன் போல்ட் ஓய்வுக்குப் பின் நடைபெறும் முதல் ஒலிம்பிக் என்பதால் 100 மீட்டர் ஓட்டப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இந்த வாசனையே இல்லாத இத்தாலியின் வீரர் ஜேக்கப்ஸ் தங்கப்பதக்கம் வென்று உலக ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

  ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன் நடந்த வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில் 3 தங்கங்களை வென்ற உலகின் நம்பர் 1 வீராங்கனையாக இந்தியாவின் தீபிகா, காலிறுதியில் 20 வயது அறிமுக வீராங்கனையிடம் 6-0 என தோல்வியுற்றார்.  இந்த தோல்வியால் நெஞ்சில் அம்பு துளைத்தது போல் பல கோடி இந்தியர்கள்  நொந்து போயினர்.

  இதையும் படிங்க: 2-1 ஆதிக்கத்துக்குப் பிறகு தோற்றது ஏன்?- இந்திய ஹாக்கி கோச் கிரகாம் ரீட் என்ன கூறுகிறார்?


  உலகின் நம்பர் 1 பேட்மின்டன் வீரரும், உள்நாட்டு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றவருமான கென்டோ மொமோட்டோ, பலரும் அறிந்திராத தென்கொரிய வீரரிடம் தோல்வியுற்றபோது ஒட்டுமொத்த ஜப்பானே அதிர்ந்து போயிற்று எனலாம்.

  மிகவும் கவுரவமிக்க விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் கடந்த மாதம் வாகை சூடிய கையோடு, டோக்யோ வந்த ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பேர்டி, முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறிய போது ரசிகர்கள் அதிர்ச்சியுற்றனர்.

  மேலும் படிக்க: கடைசி 15 நிமிடத்தில் சரிவு கண்ட இந்திய ஹாக்கி அணி- வெண்கலப் பதக்கம் வெல்ல வாய்ப்பு!


  இவை எல்லாவற்றுக்கும் மேலாக தோல்வியே காணாத வீரராக வலம் வரும் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச் காலிறுதியில் வீழ்ந்தபோது டென்னிஸ் உலகமே நம்ப முடியாமல் விக்கித்துப் போனது,

  இதுபோல் டோக்யோ ஒலிம்பிக் தீபம் ஏற்றியவரும், உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான நயோமி ஒசாகா, சொந்த மண்ணிலேயே 3வது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார்.

  தோல்விகளையே பெரிதும் அறிந்திராத அமெரிக்க நீச்சல் வீராங்கனை கேட்டி லெடிக்கி 2 தங்கங்களை வென்றாலும், 400 மீட்டர் பிரிவில் தங்கத்தை தவறவிட்டது நீச்சல் விளையாட்டு உலகில் அதிர்வலைகளைப் பரப்பியது.

  கூடைப்பந்தில் உலகின் நம்பர் 1 அணியும், கடந்த 3 ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கமும் வென்ற அமெரிக்க அணி, முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறியது.

  ஜிம்னாஸ்டிக்ஸ் வரலாற்றிலேயே மிகச்சிறந்த வீராங்கனை என பெயரெடுத்த அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ், சொதப்பியதால் மூன்று முறை ஒலிம்பிக் தங்கம் வென்ற மகளிர் அணி, வெள்ளியோடு வீடு திரும்ப நேரிட்டது.

  மகளிர் ஹாக்கியில் உலகின் முன்னணி நாடான ஆஸ்திரேலியா, அனுபவமே அற்ற இந்திய வீராங்கனைகளிடம் தோற்று தலைகுனிந்து அழுததைப் பார்த்து பலரும் பரிதாபப்பட்டனர்.

  ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைவதற்குள் மேலும் பல அதிர்ச்சிகளை தாங்கிக் கொள்ள ரசிகர்கள் தயாராக இருப்பது நல்லது.
  Published by:Murugesh M
  First published: