பிரான்ஸில் நடைபெற்ற நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில் இன்று அதிகாலை நடந்த போட்டியில் உலக சாம்பியன் பிரான்ஸை டென்மார்க் 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. குரூப் ஏ1 மோதலான இதில் பெஞ்சில் இருந்து வந்த ஆண்ட்ரியாஸ் கார்னீலியஸ் 2 கோல்களை அடிக்க 0-1 என்று பின் தங்கியிருந்த டென்மார்க் அபார வெற்றி பெற்றது.
கடந்த சனிக்கிழமை இதே ஸ்டேடி தி பிரான்ஸ் ஸ்டேடியத்தில் ரியால் மேட்ரிடுக்காக சாம்பியன்ஸ் லீக் கோப்பையைத் தூக்கிய பிரான்ஸ் வீரர் கரீம் பென்சீமா இந்தப் போட்டியில் பிரமாதமாக ஆடினார். இவர் ஆரம்பத்தில் அடித்த அபார ஷாட் தடுக்கப்பட்டது, அதன் பிறகு இவர் அடித்த கோல் கொண்டாட்டங்களுக்கு இடையே ஆஃப் சைடு என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
பிரான்சின் நட்சத்திர ஸ்ட்ரைக்கர் கைலியன் மபாப்பே இடைவேளையோடு காயம் காரணமாக வெளியேற கரீம் பென்சீமா அயரவில்லை. வலது புறத்திலிருந்து பந்தை மின்னல் வேகத்தில் எடுத்து வந்து கிறிஸ்டபர் என்குகுவுடன் ஒரு சிறு விளையாட்டு விளையாடி மேலும் இரண்டு டென்மார்க் வீரர்களை கடைந்து எடுத்து 51வது நிமிடத்தில் சரியான கோலை அடித்து பிரான்ஸுக்கு முன்னிலை அளித்தார். பிரான்ஸ் 1-0.
இடைவேளைக்குப் பிறகு பிரான்ஸின் அதிவேக ஆட்டத்தில் பெரும்பாலும் நெருக்கடிக்கு ஆளான டென்மார்க் 68வது நிமிடத்தில் பெஞ்சிலிருந்து களமிறக்கப்பட்ட கார்னீலியஸ் மூலம் 68வது சமன் செய்தது. டென்மார்க் வீரர் பியர் ஹாய்பியர்க் அளித்த பந்தை பிரமாதமாக கோல் ஆக மாற 1-1 என்று சமன் ஆனது.
சமன் ஆனதும் இன்னும் கடுப்பான பிரான்ஸ் மேலும் தாக்குதல் அலைகளை அதிகப்படுத்தியது. அந்த அணியின் எங்கோலோ காண்ட் 81வது நிமிடத்தில் அடித்த கோல் ஷாட் கம்பத்தில் பட்டு திரும்பியது.

டென்மார்க் வீரர் கார்னீலியஸ் 2 கோல்கள் அடித்தார்
ஆனால் ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் 29 வயது கார்னீலியஸ் மீண்டும் பிரமாதமாக ஒரு கோலை அடிக்க பிரான்ஸ் அதிர்ச்சியடைந்தது. அதுவும் உள்ளூரில் அடி வாங்கியது. 80,000 பிரான்ஸ் ரசிகர்கள் முன்னிலையில் தோல்வி. இதுதான் தனக்குப் பிடித்த வெற்றி என்றார் கார்னீலியஸ்.
திங்களன்று பிரான்ஸ் அணி குரேஷியாவுடன் குரேஷியாவில் மோதுகிறது. டென்மார்க் அணி இந்தப் பிரிவின் முதலிட அணியான ஆஸ்திரியாவுடன் மோதுகிறது. ஆஸ்திரியா அணி 3-0 என்ற கோல் கணக்கில் குரேஷியாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
பிரஸ்ஸல்சில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் பெல்ஜியம் அணியை நெதர்லாந்து 4-1 என்ற கோல்கணக்கில் பதம்பார்த்தது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.