தேசிய விளையாட்டு தினம் : அடுத்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் வெல்லக்கூடிய 5 இளம் வீரர்கள்!

National Sports Day

இன்று (ஆக.29) இந்தியாவில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படும் நிலையில் அடுத்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பதக்கம் வெல்லக்கூடிய 5 வீரர்கள் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.

  • Share this:
தேசிய விளையாட்டு தினம் (ஆகஸ்ட் 29) கொண்டாடப்படும் இன்று இந்தியாவுக்காக அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லக்கூடிய 5 வீரர்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்..

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29ம் தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த் அவர்களின் பிறந்த தினத்தை தான் நாம் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடி வருகிறோம். இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்பது நாம் அறிந்ததே. தலைசிறந்த ஹாக்கி வீரரான தயான் சந்தை கவுரவிக்கும் விதமாக தான் அவரது பிறந்த நாள் விளையாட்டு தினம் ஆக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் ஹாக்கி மூலமாக தான் கிடைத்தது. 3 முறை தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் தயான் சந்த் முக்கிய பங்காற்றினார்.

41 ஆண்டுகளுக்கு பிறகு 2020 டோக்யோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணி, தயான் சந்திற்கு உரிய கவுரவத்தை கிடைக்கச் செய்திருக்கிறது.

இன்று இந்தியாவில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படும் நிலையில் அடுத்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பதக்கம் வெல்லக்கூடிய 5 வீரர்கள் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.

நீரஜ் சோப்ரா:

டோக்யோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றதன் மூலம் தடகளத்தில் முதல் தங்கப் பதக்கத்தை வசப்படுத்தி இந்தியாவின் 100 ஆண்டுகால ஏக்கத்தை போக்கியவர் நீரஜ் சோப்ரா. இவர் முன்னதாக பங்கேற்ற ஒவ்வொரு தொடரில் தன்னுடைய திறனை வெளிப்படுத்தி பிரமாதப்படுத்தினார். இறுதியாக ஒலிம்பிக்கிலும் நல்ல முன்னிலையுடன் முதலிடத்தை பிடித்து அசத்தினார்.

நீரஜ் சோப்ரா


23 வயதாகும் நீரஜ் சோப்ராவால் அடுத்த ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கின்றன.

ரவி குமார் தாஹியா:

23 வயதாகும் மல்யுத்த வீரர் ரவி தாஹியா டோக்யோ ஒலிம்பிக்கில் தனது முதல் ஒலிம்பிக் பங்கேற்பிலேயே வெள்ளி வென்று ஆச்சரியப்படுத்தினார். தங்கத்தையும் அவர் நூலிலையிலேயே தவறவிட்டார். மல்யுத்தத்தின் இந்திய முகமாக அவரால் மாற முடியும். வயதும் மிகவும் குறைவாக இருப்பதனால் அவரால் இன்னும் 2 முதல் 3 ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

ravikumar dahiya


மீராபாய் சானு:

டோக்யோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க கணக்கை துவங்கி வைத்தவர் 27 வயதான பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, 49 கி எடைபிரிவில் வெள்ளி வென்ற மீரா, கர்ணம் மல்லேஸ்வரிக்கு பிறகு பளுதூக்குதலில் பதக்கம் வென்ற 2வது இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

மீராபாய் சானு


இதுவரை 2 ஒலிம்பிக்கில் கலந்து கொண்டிருக்கும் மீரா எதிர்வரும் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல அதிக வாய்ப்புள்ளவராக கருதப்படுகிறார்.

மனு பாக்கர்:

இந்தியாவின் நட்சத்திர துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையாக உருவெடுத்துள்ள மனு பாக்கர் டோக்யோவில் அவர் கலந்து கொண்ட அனைத்து பிரிவுகளிலும் தோல்வி அடைந்தாலும், எதிர்வரும் ஒலிம்பிக் தொடர்களில் கவனிக்கத்தக்க வீராங்கனையாக இருப்பார். மனு பாக்கருக்கும் 19 வயதே ஆவதால் ஒலிம்பிக்கில் சில முறை பதக்கங்களை குவிக்க மனு பாக்கருக்கு வாய்ப்பு இருக்கிறது.

அதிதி அசோக்:

இந்த பட்டியலில் எதிர்பாராத வீரராக இடம்பிடித்திருப்பவர் கோல்ப் வீராங்கனையான அதிதி அசோக், இந்திய கோல்பை டோக்யோ மேப்பில் இடம்பெறச்செய்தவர். இறுதிப் போட்டியில் 4வது இடத்தை பிடித்து பிரமாதப்படுத்தினார். மிகவும் இளவயது வீராங்கனை என்பதால் எதிர்வரும் ஒலிம்பிக் தொடர்களில் அதிதி அசோக்கால் பல பதக்கங்களை வெல்ல முடியும்.
Published by:Arun
First published: