இந்தியாவில் முதல் முறையாக கடற்கரை மல்யுத்த போட்டி தமிழகத்தின் மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரையில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
மல்யுத்தம்... இந்த வார்த்தை தமிழக விளையாட்டுத்துறையில் இதுவரை கேள்விப்படாத பெயராகவே இருந்திருக்கிறது. சர்வதேச அளவிலும், ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்திய வீரர்கள் பதக்கங்களை வாங்கிக்குவித்தாலும் தமிழகத்தில் மல்யுத்தம் விளையாட்டு தொடர்பான விழிப்புணர்வு சற்று குறைவாகவே இருந்துள்ளது. இதை திருத்தி எழுதும் விதமாக அமைந்தது தான் மகாபலிபுரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கடற்கரை மல்யுத்த போட்டி.
22 மாநிலங்களில் இருந்து வீரர்கள் பங்கேற்பு
இந்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதியுடன் இந்திய கடற்கரை மல்யுத்த சங்கம் முதல் முறையாக தேசிய அளவிலான போட்டியை வெற்றிகரமாக சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள அரசு கடற்கரை விடுதியில் நடத்தி முடித்துள்ளது. ஆடவர், மகளிர் என இருபாலருக்கும் தனித்தனியாக நடத்தப்பட்ட போட்டியில் தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, ,ஹரியானா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட 22 மாநிலங்களிலிருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்று கடற்கரை மணலில் மல்லுகட்டினர்.
தமிழகத்தில் மிக நீண்ட கடற்கரை இருப்பதால் முதல் முறையாக இந்த போட்டியை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியதாகவும் இதற்காக பெருமையடைவதாகவும் கூறுகிறார் மல்யுத்த சங்க தலைவர் ரோக்டாஷ் சிங். போதிய பயிற்சியின்மை காரணமாக வட இந்திய வீரர்களுக்கு சரிக்கு சமமாக தமிழக வீரர், வீராங்கனைகள் மல்லுகட்ட முடியவில்லை என்றாலும் தங்களது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி தமிழகத்திலும் மல்யுத்த வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்துகாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: பாரா ஒலிம்பிக் - இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்- ஈட்டி எறிதலில் சுமித் அன்டில் சாதனை!
நம்பிக்கை அளிக்கும் தமிழகம்
இனி வரும் காலங்களில் முறையான பயிற்சி, சத்தான உணவு கிடைத்தால் நிச்சயம் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவிக்கிறார் தமிழக மல்யுத்த வீராங்கனை ஹரிபிரியா.
அத்துடன் தமிழகத்தில் சேலம், ஈரோடு போன்ற மாவட்டங்களில் நிறைய மல்யுத்த வீரர்கள் இருப்பதாகவும் அவர்களை அடையாளம் கண்டு பயிற்சியாளர்கள் மூலம் முறையான பயிற்சி வழங்கினால் நிச்சயம் தமிழக வீரர்கள் சர்வதேச அளவில் சாதித்து காட்டுவார்கள் எனவும் நம்பிக்கையளிக்கிறார்.
கடந்த இரண்டு நாட்களாக களைகட்டிய இந்த போட்டியில் ஹரியானா 3 தங்கம், 2 வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக மஹாராஷ்டிரா இரண்டு தங்கமும், மூன்றாவது இடத்தில் ராஜஸ்தான் ஒரு தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கல பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.
வட இந்திய வீரர்கள் மட்டுமே விளையாடிய மல்யுத்தம் தமிழகத்தில் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. தமிழக வீரர்கள் ஆர்வமுடன் மல்யுத்த பயிற்சிகளில் ஈடுபட தொடங்கியுள்ளதால் இனி அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் நிச்சயம் தமிழக வீரர்களின் பெயர்கள் இடம்பெறும் என நம்பலாம்
மேலும் படிக்க: பாராஒலிம்பிக்: இந்தியா வீரரின் பதக்கம் திரும்ப பெறப்பட்டது!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.