Milkha Singh: ‘பறக்கும் சீக்கியர்’ மில்கா சிங் கொரோனாவால் பாதிப்பு!

மில்கா சிங்

மில்கா சிங் படைத்த தேசிய சாதனை 40 ஆண்டுகளாக எந்தவொரு வீரராலும் முறியடிக்கப்படாமல் இருந்தது

  • Share this:
பறக்கும் சீக்கியர் என வர்ணிக்கப்படும் இந்திய தடகள ஜாம்பவான் மில்கா சிங்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையில் பாரபட்சமின்றி பொதுமக்கள் தொடங்கி திரைத்துறை, அரசியல், விளையாட்டு, தொழில்துறை பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்தியாவின் தடகளத் துறையின் ஜாம்பவானாக விளங்கும் பஞ்சாபை சேர்ந்த முன்னாள் ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங்கிற்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

91 வயதாகும் மில்கா சிங், அறிகுறிகள் இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் சண்டிகரில் உள்ள தனது வீட்டில் தன்னை சுயதனிமைப்படுத்தி இருக்கிறார்.

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள மில்கா சிங், “எங்கள் வீட்டில் வேலை செய்பவர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் என் குடும்பத்தினர் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டோம். அதில் என்னைத் தவிர அனைவருக்குக் நெகட்டிவ் எனவும் எனக்கு மட்டும் பாசிட்டிவ் எனவும் முடிவு வந்துள்ளது. இதனால் ஆச்சரியம் அடைந்தேன்.

நான் நலமாக இருக்கிறேன். காய்ச்சலோ, இருமலோ கிடையாது, நான் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் குணமடைந்துவிடுவேன் என்று என் குடும்ப மருத்துவர் தெரிவித்தார். நேற்று கூட ஜாக்கிங் உடற்பயிற்சி மேற்கொண்டேன். நல்ல நிலையில் என் உடல்நலம் இருக்கிறது” இவ்வாறு மில்கா சிங் தெரிவித்தார்.

மில்கா சிங் 5 முறை ஆசிய போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இருப்பினும் அவருடைய சிறந்த செயல்திறன் என தற்போதும் பொதுமக்களால் நினைவுகூறப்படுவது என்றால் அது 1960ம் ஆண்டில் ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் 4வதாக வந்ததே. அந்தப் போட்டியில் மில்கா சிங் 45.73 வினாடிகளில் இலக்கை கடந்தார்.

40 ஆண்டுகளாக நீடித்த இந்த தேசிய சாதனையை எந்தவொரு வீரராலும் முறியடிக்கப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. சிறந்த தடகள வீரராக விளங்கிய மில்கா சிங்கை பறக்கும் சீக்கியர் என அழைத்தனர்.

பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ள மில்கா சிங், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். 1932ம் ஆண்டு இப்போதைய பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவரான மில்கா சிங், தேச பிரிவிணையின் போது தனது பெற்றோர், சகோதர, சகோதரிகள் உட்பட 8 பேர் தன் கண்ணெதிரே கொல்லப்படுவதை பார்த்தவர்.

மில்கா சிங் எழுதிய சுயசரிதையை அடிப்படையாக கொண்டு, இவருடைய வாழ்க்கையை தழுவி பாக் மில்கா பாக் என்ற படம் இந்தியில் எடுக்கப்பட்டது. ஃபர்கான் அக்தர் நடிப்பில் வெளிவந்த இப்படம் 2013ம் ஆண்டே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. தேசிய விருது, சர்வதேச விருதுகளையும் இப்படம் குவித்தது.

Read More:  ஊரடங்கை மீறி ஊர் சுற்றியவர்களுக்கு விநோத தண்டனை - ராஜஸ்தான் போலீஸ் நடவடிக்கை!

மில்கா சிங்கின் மகனும் இந்திய கோல்ப் வீரருமான ஜீவ் மில்கா சிங் தற்போது போட்டிகளில் பங்கேற்பதற்காக துபாயில் உள்ளார். இருப்பினும் தனது தந்தைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அறிந்ததும் அவர் வரும் சனிக்கிழமை நாடு திரும்ப இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Published by:Arun
First published: