Euro 2020 Spain vs Italy | வெளியேறியது ஸ்பெயின் - கோல் அடித்த ஸ்ட்ரைக்கரே பெனால்டியில் சொதப்பிய சோகம்- இறுதியில் இத்தாலி

ஸ்பெயினை வீழ்த்தி இறுதியில் நுழைந்த இத்தாலி.| யூரோ 2020.

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதியில் இத்தாலி அணி ஸ்பெயின் அணியை பெனால்டி முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

  • Share this:
முழு நேர ஆட்டம் 120 நிமிடங்கள் சென்று இரு அணிகளும் 1-1 என்று சமன் செய்ததால் பெனால்டிக்குச் சென்றது ஆட்டம். முழு நேர ஆட்டத்தில் இடைவேளைக்கு பிறகு 60வது நிமிடத்தில் இத்தாலி வீரர் ஃபெட்ரிகோ கியசா கோல் அடிக்க 80வது நிமிடத்தில் அல்வாரோ மொராட்டா ஒரு பிரமாதமான கோல் மூலம் ஸ்பெயினுக்குச் சமன் செய்தார். ஆனால் இதே அல்வாரோ மொராட்டா பெனால்டி ஷூட் அவுட்டில் அடித்த ஷாட் சொத்தையாக இத்தாலி கோல் கீப்பர் அதை பிடித்து விட்டார். ஸ்பெயின் அணி தோல்வி கண்டது, முன்னதாக ஸ்பெயின் வீரர் ஆல்மோவும் தன் முதல் பெனால்டி கிக்கை தூக்கி வெளியே அடித்துச் சொதப்பினார்.

பெட்ரி என்ற 18 வயது மிட்ஃபீல்டர் அபாரமாக ஆடினார். தோல்வி கண்டதில் அவர் கண்களில் கண்ணீர். தொடரை வைத்துப் பார்க்கும் போது இத்தாலி வெற்றி பெற தகுதியான அணி எனலாம், ஆனால் நேற்றைய ஆட்டத்தை வைத்துப் பார்க்கும் போது ஸ்பெயின் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்றே கூற வேண்டும்.

ஸ்பெயின் பயிற்சியாளர் ஹென்ரிக் ஒரு தவறு செய்தார், தொடக்க லெவனில் ஸ்ட்ரைக்கர் அல்வாரோ மொராட்டோ இல்லை . பதிலாக ஆயர்சபாலை இறக்கினார். ஆயர்பசால் நன்றாக ஆடினார் ஆனால் 4 கோல் வாய்ப்புகளை தவற விட்டார் என்றே கூற வேண்டும். இடைவேளைக்குப் பிறகுதான் மொராட்டாவை இறக்கினார் ஹென்ரிக், அவர் 80வது நிமிடத்தில் மேற்கொண்ட மேஜிக்தான் ஸ்பெயினுக்கு சமன் கோல் வாய்ப்பை அளித்தது. ஆனால் இதே ஆல்வாரோ மொராட்டோ பெனால்டி கிக்கில் அடித்த ஷாட்டை இத்தாலி கோல் கீப்பர் தடுக்க இத்தாலியின் ஜோர்கின்ஹோ பந்தை வலைக்குள் செலுத்த இத்தாலி கேம்பில் மகிழ்ச்சி, கொண்டாட்டம், ஸ்பெயின் கேம்பில் கண்ணீர், வருத்தம், சோகம். வெளியேறியது ஸ்பெயின்.

ஸ்பெயின் வீரர் மொராட்ட அடித்த பெனால்டி ஷாட்டை தடுக்கும் இத்தாலி கோல் கீப்பர்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யூரோ 2008 இறுதியில் பெனால்ட்டியில்தான் இத்தாலி ஸ்பெயினிடம் தோற்றது. யூரோ 2012-ல் ஸ்பெயின் அணி அபார வெற்றி பெற்றது. 2016 யூரோவில் இறுதி 16 நாக் அவுட்டில் இத்தாலி அணி ஸ்பெயினை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இப்போது தொடர்ச்சியாக 2வது முறை நாக் அவுட்டில் ஸ்பெயினை வெளியேற்றியது இத்தாலி.

ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணிகளும் தாக்குதல் எதிர்த்தாக்குதல் என்று எச்சரிக்கையுடன் ஆடி வந்தன. பாஸ்களில், பந்தை தங்கள் வசம் வைத்திருந்ததில் ஸ்பெயின் முன்னிலை வகித்தது, ஆனால் நல்ல மூவ்களை பினிஷ் செய்ய ஆளில்லாமல் வாய்ப்புகள் நழுவின மறுமுனையில் இத்தாலி எதிர்த்தாக்குதலில் அடுத்தடுத்து ஸ்பெயின் பகுதிக்குள் புகுந்து ஒரு முறை கோலே அடித்து விட்டது, ஆனால் இருமுறையும் ஆஃப் சைடு என்பது தெளிவாயிற்று. அதன் பிறகு இரு அணிகளும் ஆட்டத்தை மெதுவாக்கினர்.

Also Read: Italy vs Spain Euro 2020 Semis| அல்டிமேட் ஃபுட்பால்- இத்தாலி- ஸ்பெயின் - ரத்தக்கறை படிந்த வரலாறு - இன்று யூரோ அரையிறுதியில் மோதல் (படங்கள்)

இரண்டாவது பாதியில்தான் ஆட்டம் அதன் உண்மையான தன்மையைத் திறந்து காட்டியது. ஆட்டத்தின் 60வது நிமிடத்தில் இத்தாலி கோல் கீப்பர் கியான்லுகி டோனருமாதான் தன் கிக் மூலம் கோலுக்கான முன்னெடுப்பை மேற்கொண்டார். பந்து லோரென்சோ இன்சிக்னியிடம் வர இவரும் சிரோ இம்மொபிலாவும் பந்தைக் கொண்டு சென்று அடிக்க இடது விங்கிலிருந்து பந்தை எடுத்து வந்து வெட்டி உள்ளே நுழைந்தே பெட்ரிகோ கியசா அருமையான வளைந்த ஷாட் மூலம் ஸ்பெயின் கோலுக்குள் திணித்து இத்தாலிக்கு முன்னிலை கொடுத்தார்.

இத்தாலி கோச் மன்ச்சீனி கொண்டாடினார், ஆனால் அடுத்த 20 நிமிடங்களில் அவரது கொண்டாட்டம் சோகமாகப் போவதை அவர் உணரவில்லை. ஆட்ட முடிய 10 நிமிடங்கள் இருந்த போது ஸ்பெயின் வீரர் மொராட்டா தன்னிடம் வந்த பந்தை பெற்று திரும்பி பந்தை வேகமாக எடுத்து சென்று ஆல்மோவுக்கு அனுப்பினார். ஆல்மோ மீண்டும் இவருக்கு பந்தை அளித்தார். இப்போது ஒரேயொரு டச்தான் இத்தாலி கோல் கீப்பர் டோனரூமாவைத்தாண்டி கோலுக்குள் பந்து சென்றது. ஸ்பெயின் ரசிகர்கள் கொண்டாடினர். இத்தாலியின் கியஸா எப்படி சறுக்கிக் கொண்டு வந்து கொண்டாடினாரோ அதே போல் மொராட்டாவும் சறுக்கியப் படி வந்து கொண்டாடினார்.

ஆட்டம் கூடுதல் அரைமணி நேரத்துக்குச் சென்ற போது இத்தாலி சற்றே களைப்படைய ஸ்பெயின் கோல் முயற்சிகளைத் தொடர்ந்தது. ஆல்மோவின் ஷாட் இத்தாலி வீரரின் காலில் பட்டுத் திரும்பியது கோல் அருகே. ஸ்பெயினில் பினிஷிங் இல்லை, இத்தாலி அணி கோல் முயற்சிகள் இலக்கு நோக்கி செல்லவில்லை. எனவே பெனால்டி ஷூட் அவுட்தான் என்ற நிலை ஏற்பட்டது.

பெனால்டி ஷூட் அவுட்டில் இத்தாலி வீரர் லோக்கடெல்லி அடித்த முதல் ஷாட்டை ஸ்பெயின் கோல் கீப்பர் தடுக்க ஒரே ஆரவாரம், டென்ஷன். ஆனால் ஸ்பெயின் வீரர் ஆல்மோ கோல் போஸ்ட்டுக்கு மேலே தூக்கி அடித்தார், எதற்கு இப்படி ஒரு ஷாட் என்று கேள்வி எழுந்தது. ஆனால் இத்தாலி அணியில் ஆண்ட்ரியா பெலோட்டி மற்றும் லியானார்டோ பெனூக்கி கோல்களை அடிக்க ஸ்பெயின் தரப்பில் மொரீனோ, தியாகோ அல்சாண்ட்ரா கோல்களை அடிக்க 2-2 என்று சமன் ஆனது. பெட்ரிகோ பெர்னார்டெஷி கோலுக்குள் திணிக்க இத்தாலி 3-2என்று முன்னிலை பெற்றது.

அப்போதுதான் அதிக எதிர்ப்பார்ப்புடன் மொராட்டோ வந்தார். இவரது ஷாட்டை இத்தாலி கோல் கீப்பர் சரியாகக் கணித்து தட்டி விட ஸ்பெயின் அடுத்த இத்தாலி ஸ்ட்ரைக்கைத் தடுத்தால் பிழைக்கலாம் என்ற நிலையில் இத்தாலி வீரர் ஜோர்கின்ஹோ கவலையே படமால் கோலின் இடது புறத்தில் பந்தை தள்ளிவிட பந்து உருண்டு கோலுக்குள் சென்ற தருணம் இத்தாலி இறுதிக்குள் நுழைந்தது
Published by:Muthukumar
First published: