ஐபிஏ பெண்கள் உலகக் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நிகத் ஜரீன் தாய்லாந்து வீராங்கனையை இறுதிப் போட்டியில் 5-0 என்று வீழ்த்திதங்கம் வென்று வரலாறு படைத்தார்.
தாய்லாந்தின் ஜிட்பாங் ஜுடாமஸ் என்ற வீராங்கனையை 52 கிலோ உடல் எடைப்பிரிவில் 30-27, 29-28, 29-28, 30-27, 29-28 என்று 5-0 என்று வெளுத்து வாங்கி விட்டார். இதன் மூலம் உலகக்க்குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற 5வது வீராங்கனையானார் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நிகத் ஜரீன்.
இந்திய நட்சத்திர வீராங்கனை மேரி கோம் 2002, 2005, 2006, 2008, 2010 மற்றும் 2028-ல் தங்கம் வென்று 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது. மேர்கோம் தவிர சரிதா தேவி (2006), ஜென்னி (2006), கே.சி.லேகா (2006) ஆகியோர் வென்றதையடுத்து இப்போது 5வது வீராங்கனையாக நிகத் ஜரீன் தங்கம் வென்று வரலாறு படைத்தார்.
2018-ல் மேரி கோம் வென்ற பிறகு உலகக் குத்துச் சண்டையில் கிடைத்த முதல் தங்கமாகும் இது. ஜுடாமஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் நிகத் ஜரீன் முதல் 3 நிமிடங்களிலேயே சரமாரியாகச் சில குத்துகளை விட்டு ஜுடாமஸை நிலைகுலையச் செய்தார். ஜுடாமஸ் சாதாரணப்பட்டவர் அல்ல, 3 முறை உலக சாம்பியனான கஜகஸ்தான் வீராங்கனை ஷைனா ஷெகெர் பெகோவாவை வீழ்த்தி இறுதிக்கு வந்தார்.
2029 தாய்லாந்து ஓபனில் ஜுடாமஸை ஏற்கெனவே ஜரீன் வீழ்த்திய அனுபவம் கைக்கொடுத்தது. 2வது சுற்றில் ஜுடாமஸ் சற்றே எழுச்சி கண்டார். ஆனால் நிகாத் ஜரீனின் அபாரமான சுறுசுறுப்பு நகர்வுகளினால் ஜுடாமஸ் பெரிய புள்ளிகளைப் பெற முடியவில்லை. மாறாக நிகத் ஜரீன் தொடர்ந்து தனது பன்ச்களை நச் நச்சென்று கொடுத்துக் கொண்டே இருந்தார். கடைசியில் தங்கப்பதக்கம் வென்றார்.
மற்ற பிரிவுகளில் 57 கிலோ பிரிவில் மணிஷா, 63 கிலோ பிரிவில் பர்வீன் வெண்கலம் வென்றனர். இதன் மூலம் உலகக்குத்துச் சண்டையில் இந்திய மகளிர் அணீ 3 பதக்கங்களை வென்று சாதனை புரிந்தது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.