டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் போட்டிக்கு இந்தியாவிலிருந்து சுமித் நாகல், பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா, அன்கிதா ரெய்னா ஆகியோர் மட்டும் பங்கேற்கின்றனர், ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா, திவிஜ் சரண் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
தரவரிசையில் பின் தங்கியதால் ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா மற்றும் திவிஜ் சரணுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் ஒற்றையர் பிரிவுக்கு தகுதி பெற்ற ஆஸ்திரேலிய வீரர் டி மினாருக்கு கொரோனா ஏற்பட்டதால் தரவரிசையில் 127ம் இடத்தில் உள்ள யூகி பாம்ப்ரிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இவரும் முழங்கால் ஆபரேஷன் செய்ததால் 144வது இடத்தில் உள்ள சுமித் நாகலுக்கு ஒலிம்பிக் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் ரோகன் போபண்ணா தன் டிவிட்டர் பதிவில், “சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு எனக்கும் சுமித் நாகலுக்கும் மறுப்பு தெரிவித்து விட்டது. காயம், உடல்நலமின்மை காரணங்கள் தவிர ஜூன் 22க்குப் பிறகு அணியில் மாற்றம் செய்யமுடியாது என்பதில் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு தெளிவாக உள்ளது. ஆனால் அனைத்திந்திய டென்னிஸ் கூட்டமைப்பு எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளதாகக் கூறி வீரர்கள், ஊடகங்கள், அரசு என்று அனைவரையும் தவறாக திசைத்திருப்பியுள்ளது” என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு ஆதரவாக பதிவிட்ட சானியா மிர்சா, “வாட்? இது (போபண்ணா கூறுவது) உண்மையென்றால் இது முட்டாள்தனமானது வெட்கக்கேடானது. இதனால் கலப்பு இரட்டையரில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை வேண்டுமென்றே கெடுத்து விட்டனர். திட்டமிட்டப்படி நீங்களும் நானும் கலப்பு இரட்டையரில் ஆடியிருந்தால் நாம் பதக்கம் வெல்ல வாய்ப்பு கிடைத்திருக்கும். உங்கள் பெயரையும் சுமித் பெயரையும் கொடுத்திருப்பதாகத்தான் எங்களுக்குக் கூறப்பட்டது” என்று பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து அனைத்திந்திய டென்னிஸ் கூட்டமைப்பு அளித்திருந்த விளக்கத்தில், “ரோகன் போபண்ணா மற்றும் திவிஜ் சரண் பெயர்கள்தான் அனுப்பப்பட்டன. ஆனால் இவர்கள் சர்வதேச டென்னிஸ் விதிகளின் படி தகுதி பெறவில்லை. நம் வீரர்களின் தரவரிசை நேரடியாக தகுதி பெற முடியாமல் இருந்தது, 16ம் தேதி ஜூலையில் ரோகன் போபண்ணா மற்றும் திவிஜ் சரண் பெயர்கள் மாற்று வீரர்கள் பட்டியலில் 5ம் இடத்தில் இடம்பெற்றிருந்தனர். சுமித் நாகலுக்கு வாய்ப்பு கிடைத்தவுடன் தான் நாங்களும் சாத்தியம் குறித்து நம்பிக்கை கொண்டோம்.
சுமித் நாகல் தகுதி பெற்றதால் ரோகன் போபன்னாவுடன் இரட்டையர் ஆட தகுதி பெறுவார்களா என்று கேட்டோம். ஆனால் இதற்கு விதிமுறை இடம் கொடுக்காது என்று சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு தெரிவித்து விட்டது. இதைச் செய்ய முடிந்தாலும் இருவரும் இரட்டையருக்குத் தகுதி பெற முடியாது என்றனர்.
ரோகன் போபண்ணாவுக்கு விதிமுறைகள் தெரியும், மூத்த வீரர் அவர் கூட விவரம் புரியாமல் இப்படிப் பேசுகிறார். அவருக்கு உண்மை நிலவரத்தை புரிந்து கொள்ளும் அறிவு இல்லை. எனவே இப்படி தேவையில்லாத கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
சானியா மிர்சாவின் பதிவு முறையற்றது. போபன்னாவுடனான திவிஜ் மற்றும் சுமித் நாகல் தரவரிசை தகுதி பெறுவதற்குப் போதுமானதாக இல்லை, நாங்கள் ஏன் பதக்கம் வெல்லும் வாய்ப்பை விடப்போகிறோம்? எனவே போபண்னா மற்றும் சானியா டிவீட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்று கூறியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sania Mirza, Tennis, Tokyo Olympics